கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஒன்றியங்களில் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் குடியிருப்புக்கான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கு ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஆளும் கட்சி ஒன்றிய செயலாளர்கள் பேரம் பேசுவதாக புகார் எழுந்துள்ளது.
2030-ம் ஆண்டுக்குள், அனைவருக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தர அரசு இலக்கு நிர்ணயித்து, முதற்கட்டமாக சொந்தமாக பட்டா வைத்து, குடிசைகளில் வசிக்கும் 1 லட்சம் பேருக்கு கான்கிரீன்ட் வீடுகள் கட்டித்தர ரூ.3,500 கோடி ஒதுக்கியுள்ளது. 300 சதுர அடியில் ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டு, அந்தத் தொகை 4 தவணைகளாக பயனாளிகளின் வங்கிக் கணக்குக்கே நேரடியாக அரசால் அனுப்பி வைக்கப்படுகிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 3,100 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி விண்ணப்ப படிவம் விநியோகிக்கப்பட்டு, பயனாளிகள் தேர்வும் நடைபெற்று வருவதோடு, தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு வீடு கட்டும் பணி ஆணை வழங்கப்பட்டு, பயனாளிகள் வீடு கட்டும் பணியையும் தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் பிடாகம் ஊராட்சியில் 19 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 16 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 3 பயனாளிகளுக்கான பணி ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளிடம் ஊராட்சி செயலர் பேரம் பேசியதாகவும், பேரத்தின் அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும், பேரம் படியாதவர்களின் பணி ஆணையை ரத்து செய்திருப்பதாகவும், அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேபோன்று திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காடியார், செட்டித்தாங்கல், தேவியகரம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் ஆளும்கட்சியின் ஒன்றிய நிர்வாகிகள் பேரத்தின் அடிப்படையிலேயே பயனாளிகளை தேர்வுசெய்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர் இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, “தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக பயனாளிகள் எவரிடமும் பணம் கொடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருக்கிறோம். என்று எவரேனும் பேரம் பேசப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். இதேபோன்று திருக்கோவிலூர் பகுதியில் உள்ள பிரச்சினை குறித்து அறிய, அங்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜனை தொடர்பு கொண்ட போது, அவர் பேச முன்வரவில்லை.