ஊட்டி: ஊட்டியில் நடந்த அரசு விழாவில் நீலகிரி மாவட்டத்துக்கு ஆறு புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளம், திமுக ஆட்சி’ என்று சொல்கின்ற அளவுக்கு இந்த மாவட்டத்துக்கு ஏராளமான திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம். உதகை ஏரி புதுப்பிப்பு, சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை, இலவச இளம் படுகர் நலச்சங்கக் கட்டடம், முதுமலை சரணாலயம் விரிவாக்கம், இலங்கையில் இருந்து திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை கூடலூர், பந்தலூர், கோத்தகிரி வட்டங்களில் குடியமர்த்தி, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் உருவாக்கப்பட்டது.
தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கியது மட்டுமல்ல, தேயிலை விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1996 ஆம் ஆண்டு முதல் 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. பழங்குடி மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளுக்கும் மின் இணைப்பு மற்றும் கலர் டி.வி., கூடலூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு. நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, உதகைக்கு மூன்றாவது குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்தேன்.
அதேபோல, உள்ளாட்சி கடை வியாபாரிகளுக்கு ‘கடை உரிமை’ நீட்டித்து, பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி கொடுத்தேன்.
முதலமைச்சரானவுடன் மாநிலத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றான எடை குறைவான குழந்தைகளுக்கு ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தை இந்த ஊட்டியில் தான் இரண்டு வருடத்திற்கு முன்பு வந்தபோது தொடங்கி வைத்தேன். நீலகிரியில் வாழக்கூடிய பழங்குடியின மக்களுக்கு ஆயிரம் கான்கிரீட் வீடுகள், மருத்துவத் துறையில் முழுமை பெற்ற மாவட்டமாக நீலகிரி மாவட்டம் திகழ இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, உதகையில் மருத்துவகல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.
அரசின் முத்திரைத் திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், மலைப் பிரதேசமான இந்த நீலகிரி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது நம்முடைய மருத்துவத் துறை. வாகனங்கள் செல்ல முடியாத பழங்குடியினர் இடத்திற்கு கூட நம்முடைய அரசின் இந்த மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து 5 இலட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வீடுகளுக்குச் சென்ற மருத்துவத்தை செய்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, கூடலூரில் அரசு தலைமை மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதேபோல, குன்னூர், கோத்தகிரி உட்பட எல்லா வட்டங்களிலும், அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனைகள் துவங்கப்பட்டிருக்கிறது. வனவிலங்கு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கடந்த காலங்களில் 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை உயர்த்தி, ரூ.10 லட்சமாக நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
அழிவின் விளிம்பில் இருந்த மாநில விலங்கான வரையாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கி அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் கூடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மினி டைடல் பார்க் வரப் போகிறது. தெப்பக்காடு யானைகள் முகாம் நவீனமயம் ஆகப் போகிறது. கூடலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துகின்ற பணிகள் ரூ.31 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
குந்தா மின் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 61 மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளும், பள்ளிக்கல்வித்துறை மூலமாக 197 பணிகளும், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 404 பணிகளும் 15 கோயில்களுக்கு குடமுழுக்கும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், குன்னூரில் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியின மாணவர்கள் உட்பட எல்லா தரப்பு மக்களும் எளிதாக உயர்கல்வி பெற புதிய கலைக் கல்லூரியை அறிவித்திருக்கிறோம்.
உதகையில், சூழலியல் பூங்கா அமைக்க ரூ.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம். அதுமட்டுமல்ல, இன்றைக்கு 33 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டாக்கள் கிடைக்காமல் இருந்த பழங்குடியின மக்களுக்கு முதல் கட்டமாக 18 பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. உங்கள் மாவட்டத்துக்கு வந்திருக்கின்ற நான் உங்களை குளிர்விக்கின்றது போல 6 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடப் போகிறேன்.
- நீலகிரி மாவட்டத்தில், சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக கூடலூரில் ரூ.26 கோடியே 6 லட்சம் செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும்.
- பழங்குடி மக்கள் நிறைந்து வாழுகின்ற உங்கள் மாவட்டத்தில், அவர்கள் வாழ்க்கை முறையை எல்லோரும் தெரிந்து கொள்கின்ற வகையில் காட்சிப்படுத்தவும், அதுபற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், ரூ.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
- நீலகிரி மாவட்டம் முழுக்க இருக்கின்ற இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கின்ற வகையில், “எங்கும் ஏறலாம் – எங்கும் இறங்கலாம்” எனும் ‘ஹாப் ஆன் – ஹாப் ஹாஃப்’ சுற்றுலா முறை, ரூ.5 கோடி செலவில், 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்.
- ஊட்டியில் சுற்றுலா காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, ரூ.20 கோடி செலவில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிட வசதி அமைக்கப்படும்.
- நடுகாணி “மரபணுத் தொகுதி சூழலியல் இயற்கைச் சுற்றுலா மையம்” ரூ.3 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
- பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில், ரூ.5 கோடியே 75 லட்சம் செலவில், 23 சமுதாயக் கூடங்களும், நகர்ப்புறப் பகுதிகளில் வாழுகிற பழங்குடியினருக்கு ரூ.10 கோடி செலவில் 200 வீடுகளும் கட்டித் தரப்படும்’ என்றார்.