கோவை: கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ‘ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நூற்றாண்டுக்கு, நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டை கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய இயக்கம். வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, நரேந்திர மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, வெங்கய்ய நாயுடு, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி போன்ற எண்ணற்ற தலைவர்களை உருவாக்கிய இயக்கம்.
ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் ஹெட்கேவார் இருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமிற்கு நேரில் வந்து பார்வைிட்ட மகாத்மா காந்தி, ‘எனது கொள்கைகளுக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளது ஆர்.எஸ்.எஸ்’ என பாராட்டினார். கலைஞர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு நடந்த நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தேசியத் தலைவர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த அன்றைய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தை வெளியிட்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள்.
1999 முதல் 2003 வரை வாஜ்பாய் தலைமயிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், துணைப் பிரதமராக இருந்த அத்வானி ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். இந்த பழைய வரலாற்றை எல்லாம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம், தபால் தலையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி மட்டுமல்ல, கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த அமைச்சரவையிலும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் உருவாக்கப்பட்டவர்கள் தான் உள்ளனர். ஆளுநர்கள், 15-க்கும் அதிகமான மாநில முதலமைச்சர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர். இந்த உண்மையை முதலமைச்சர் ஸ்டாலின் உணர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.