கும்பகோணம் தனி மாவட்ட அறிவிப்பு கேள்விக்குறியாகி உள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கடந்த 27 ஆண்டுகளாக பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொது மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தனி மாவட்டம் அறிவிக்கப்படவில்லை என கும்பகோணம் பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, கோட்டம், வட்டம், மக்கள் தொகை, பரப்பளவு என ஒரு மாவட்டத்துக்கு தேவையான அம்சங்கள் இல்லாததால், கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வழிவகை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், கும்பகோணம் பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மாவட்ட அறிவிப்பு இல்லை ஏன்?: கும்பகோணத்தை மாவட்ட தலைநகராக அறிவிப்பதில் உள்ள சிக்கல் குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியது: புதிதாக ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டுமானால் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். மாவட்டத்தின் பரப்பளவு 2,500 சதுர கி.மீ முதல் 9 ஆயிரம் சதுர கி.மீ வரை இருக்க வேண்டும். தற்போதுள்ள தஞ்சாவூர் மாவட்டம் 3396.57 ச.கி.மீ-ல், கும்பகோணம் கோட்டத்தை பிரித்தால் 940.22 சதுர கி.மீ மட்டுமே உள்ளது.
மக்கள் தொகை 10 லட்சம் முதல் 30 லட்சம் வரை இருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 16,67,809. இதில் கும்பகோணம் கோட்டத்தில் 6,39,486 பேர் உள்ளதால், இந்த அளவுகோலும் பூர்த்தியாகவில்லை. ஒரு மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 5 வட்டங்கள் இருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில், கும்பகோணம் கோட்டத்தில் 3 வட்டங்கள் மட்டுமே உள்ளது. குறைந்த பட்சம் 2 கோட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 3 கோட்டங்களில், தலா 2 கோட்டங்களை பிரிக்க முடியாத நிலை உள்ளது.
குறைந்த அளவு 200 வருவாய் கிராமங்கள் இருக்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 906 கிராமங்களில், கும்பகோணம் கோட்டத்தில் 333 கிராமங்கள் உள்ளதால், இந்த விதிமுறை மட்டுமே பூர்த்தியாகிறது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தை பிரித்து கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வழிவகை இல்லை எனத் தெரிவித்தனர்.
வரும் தேர்தலில் எதிரொலிக்கும்: இது தொடர்பாக அனைத்து தொழில் வணிகர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் வி.சத்திய நாராயணன் கூறியது: கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததால் தான், இப்பகுதியில் உள்ள தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது.
ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, இனியும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், 2026 சட்டப்பேரவை தேர்தலில், இதன் தாக்கம் கடுமையாக எதிரொலிக்கும் என்றார்.
அழுத பிள்ளைக்கு வாழைப்பழமா?: கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ம.க. ஸ்டாலின் கூறியது: கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அதற்குப் பதிலாக கும்பகோணத்தில் கருணாநிதி பெயரில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இது அழுது பிள்ளைக்கு வாழைப் பழம் கொடுத்தது போல உள்ளது. கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்காமல், வரும் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் இந்தப் பகுதிக்கு எப்படி வாக்கு கேட்டு வருவார் ? என தெரியவில்லை. அடுத்த மாதம் முதல் கும்பகோணம் மாவட்டமாக அறிவிக்கும் வரை கடையடைப்பு, உண்ணாவிரதம் என தொடர் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.