ஆலங்குடி அருகே கல்லாலங்குடியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 691 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் 40 பேர் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் (பொ) அக்பர்அலி தொடங்கிவைத்தார். புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டிருந்த 691 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்குவதற்கு 250 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேர் புதுக்கோட்டை, ஆலங்குடி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் அவிழ்த்துவிடப்பட்ட மேலாத்தூரைச் சேர்ந்த தேவா ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான காளை பள்ளத்திவிடுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தும், திருச்சி ஏர்போர்ட் சிவா என்பவருக்கு சொந்தமான காளையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு மரத்தில் மாட்டிக்கொண்டதால் கழுத்து நெரிபட்டும் இறந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆலங்குடி போலீஸார் செய்திருந்தனர்.