• Fri. Jan 9th, 2026

24×7 Live News

Apdin News

கல்வி அமைச்சை சுற்றி வளைத்திருக்க வேண்டும் | விமல் வீரவன்ச

Byadmin

Jan 8, 2026


பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சருக்தெகிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தால் மாத்திரம் போதாது. பதவியைத் துறந்து வெளியேறும் வரை கல்வி அமைச்சை சுற்றி வளைத்திருக்க வேண்டும். மாணவர்களின் கல்வியுடன் விளையாடுவதற்கு மீண்டுமொருமுறை எவருக்கும் இடமளிக்கக் கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

கொழும்பில் புதன்க்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டில் கல்வி மறுசீரமைப்பினை மேற்கொள்வதென்பது விளையாட்டல்ல. இது மிகவும் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய விடயமாகும். கல்வி மறுசீரமைப்பு முன்னெடுக்கப்படுவது எமது பிரச்சினையல்ல.

ஆனால் அவை நாட்டுக்கு பொறுத்தமானவையாக இருக்க வேண்டும். ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கிடைக்கப் பெறும் 200 மில்லியன் டொலர் மீது கொண்டுள்ள ஆசையால் மாணவர்களின் எதிர்காலத்தை பலியாக்குவதற்கு இடமளிக்க முடியாது.

மிகவும் சூட்சுமமாக 6ஆம் தர மாணவர்களுக்கான பாடப்பரப்பில் பொறுத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது. இது மாத்திரமின்றி இந்த பாடத்தொகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட பிழைகள் அடையாளங் காணப்பட்டுள்ளன.

இவற்றை தயாரிப்பதற்கான ஆலோசகர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்? அவர்களுக்கு எவ்வளவு கொடுப்பனவு வழங்கப்பட்டது? இந்த காரணிகளை கல்வி அமைச்சு அல்லது அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.

இந்த கல்வி மறுசீரமைப்புக்களுக்கு வெளிநாட்டு நிதி உதவிகள் கிடைக்கவில்லை என்று கூறினாலும், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவி கிடைக்கின்றது என்பதை நாம் ஏற்கனவே நாட்டுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றோம். எந்த கொள்கையை பரப்புவதற்காக இவ்வாறு நிதியுதவியளிக்கப்பட்டது என்பதையும் நாம் குறிப்பிட்டிருக்கின்றோம்.

இந்த சிறிய ஒரு தொகைக்காக எதிர்கால சந்ததியினர் பலியாக்கப்படுகின்றனரா? இதற்காகவா தேசிய மக்கள் சக்தி அராசங்கத்துக்கு மக்கள் ஆணையை வழங்கினர்?

ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆலோசனை வழிகாட்டல் நூல்களில் இந்த விடயம் உள்ளடக்கப்படவில்லை. கல்வி நிபுணர்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து எழுந்த எதிர்ப்புக்களை உதாசீனப்படுத்தியே இவை பாடப்பரப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சருக்தெகிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தால் மாத்திரம் போதாது.

பதவியைத் துறந்து வெளியேறும் வரை கல்வி அமைச்சை சுற்றி வளைத்திருக்க வேண்டும். மாணவர்களின் கல்வியுடன் விளையாடுவதற்கு மீண்டுமொருமுறை எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்றார்.

By admin