பட மூலாதாரம், Getty Images
இன்றைய (17/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
கல்வி நிறுவனங்களில் இருக்கும் சாதிப் பெயர்களை நான்கு வாரங்களுக்குள் நீக்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் நீக்காத கல்வி நிறுவனங்களில் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
“தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கி சங்க சட்டத் திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக உத்தரவிட்டனர். மேலும் சாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக்கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தியில், “சங்கங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமானவை என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார். அதோடு, சாதி சங்கங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயரை நீக்கி, சங்க சட்டத் திட்டத்தில் திருத்தங்கள் செய்யும் பணிகளை மூன்று மாதங்களுக்குள் துவங்கி ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல அரசு நடத்தும் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளி போன்ற பெயர்களை மாற்றி அரசுப் பள்ளி என்று பெயர் சூட்ட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்கள் பெயர் மட்டுமே இடம்பெற வேண்டும் என்றும் அவர்களின் சாதி பெயர் இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
வேறு சாதியில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக குழந்தைகளை பெற்றோரே கொலை செய்யும் நிலை நிலவுவதாலும், கைகளில் சாதிக் கயிறு கட்டிக் கொண்டு அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக நீதிபதி உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளதாக தினத்தந்தி குறிப்பிட்டுள்ளது.
இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்கும் கணவர் வீட்டார்
திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமத்தை வரதட்சணையாக கணவர் வீட்டார் கேட்பதாக புதுமணப் பெண் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார் என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
“திருநெல்வேலி டவுனில் ‘இருட்டுக் கடை’ என்ற பெயரில் உலகப் புகழ் பெற்ற அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியின் மகள் ஸ்ரீகனிஷ்கா. இவர், வரதட்சணை கேட்டு கணவர் வீட்டார் கொலை மிரட்டல் விடுப்பதாக நெல்லை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தார்” என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “எனது மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கும், கோவையைச் சேர்ந்த பல்ராம்சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், என் மகளை வரதட்சணை கேட்டு அவரது கணவர் கொடுமைப்படுத்தியுள்ளார். அவரது குடும்பத்தினரும் என் மகளிடம் கூடுதல் வரதட்சணை வேண்டும் என்றும், ரூ.1.5 கோடி மதிப்புள்ள கார் வேண்டுமென்றும் கேட்டுத் துன்புறுத்தியுள்ளனர்” என்று கவிதா – ஹரிசிங் செய்தியாளர்களிடம் பேசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பல்ராம்சிங்குக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. ‘இதுகுறித்து வெளியே கூறினால் உன்னைக் கொலை செய்து விடுவேன்’ என்று பல்ராம்சிங் தனது மகளை மிரட்டியுள்ளதாகவும் கடந்த மார்ச் 15ஆம் தேதி தனது மகள், கோவையிலிருந்து நெல்லைக்கு வந்துவிட்டதாகவும் அவர் புகார் அளித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, “மறுநாளே எங்கள் வீட்டுக்கு வந்த பல்ராம்சிங்கும் அவரது குடும்பத்தினரும், ‘உங்கள் மகளுடன் வாழ வேண்டும் என்றால் இருட்டுக் கடை அல்வா உரிமத்தை பல்ராம்சிங் பெயரில் எழுதித் தர வேண்டும்’ என மிரட்டினர். இந்தப் பிரச்னை குறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம்” என்றும் அவர்கள் கூறியதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், “அதிக சொத்துள்ள நாங்கள் ஏன் வரதட்சணை கேட்கப் போகிறோம். இருட்டுக்கடையை நாங்கள் கேட்பதாகக் கூறுவது ஆதாரமற்றது. கார் கேட்டதாகக் கூறப்படுவதும் தவறான தகவல். எங்கள் சொத்துகளை அபகரிக்கும் நோக்கில் பொய்யான புகார்களைக் கூறுகின்றனர். அவர்களது புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம்” என்று பல்ராமின் தந்தை யுவராஜ்சிங் கூறியதாக இந்து தமிழ் திசை செய்தி தெரிவிக்கிறது.
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவியை குத்திய இளைஞர் தற்கொலைக்கு முயற்சி
பட மூலாதாரம், Getty Images
சேலத்தில் அரசு கலைக் கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் அவரை ஓர் இளைஞர் கத்தியால் குத்தி, பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
“சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நேற்று (ஏப்ரல் 16) காலை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கல்லூரி செல்வதற்காகp பேருந்துக்கு காத்திருந்தார்.
அப்போது, ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர், அந்த மாணவியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அவர்களிடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் வயிற்றில் குத்தினார்” என்று கூறுகிறது அந்தச் செய்தி.
தொடர்ந்து அதில், “இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரைப் பிடிக்க முயன்றனர். உடனே அந்த இளைஞர், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தகவல் அறிந்து வந்த சேலம் டவுன் காவல்துறையினர், இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான இளைஞர் நட்பாகப் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில், அவர் மாணவியைக் காதலிக்க ஆரம்பித்துள்ளார். இதையறிந்த மாணவி காதலிக்க மறுத்து, செல்போனில் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றுள்ளார். மேலும், தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறோம்” என்று காவல்துறை கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அடிமையாக்க வல்ல மருந்துகளின் ஆன்லைன் விற்பனையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு ஆலோசனை
பட மூலாதாரம், Getty Images
தொடர் பழக்கத்தை உண்டாக்கி அடிமையாக்க வல்ல மருந்துகளை (habit-forming drugs) துஷ்பிரயோகம் செய்வதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவற்றின் ஆன்லைன் விற்பனையைத் தடை செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை சட்டத்துறைக்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளது. இது போதைப்பொருட்கள், மயக்க மருந்துகள், கோடீயின், நைட்ராசிபம், பென்டாசோசின், டிராமாடோல், டாபென்டாடோல் போன்ற வலி நிவாரணிகளின் ஆன்லைன் விற்பனைக்குத் தடை அல்லது கடுமையான விதிகளைப் பரிந்துரைப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பிப்ரவரியில், மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் எம்.என். ஸ்ரீதர், மின் வணிக தளங்களில் மருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரும் வரை, மாநிலத்தில் ஐந்து மருந்துகளின் ஆன்லைன் விற்பனையைத் தடை செய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ, மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940இன் பிரிவு 18ஐ பயன்படுத்தி மாநிலம் விதிகளை உருவாக்க வேண்டும் என்று சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதினார்” என்று அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, “ஜனவரிக்கும் பிப்ரவரி மூன்றாவது வாரத்திற்கும் இடையில், பழக்கத்தை உண்டாக்கும் மருந்துகளை விற்றதற்காக 17 சில்லறை மற்றும் மொத்த விற்பனை உரிமங்களை துறை ரத்து செய்தது. இருப்பினும், ஒழுங்குமுறைகள் இல்லாததால் ஆன்லைன் மருந்து விற்பனைத் தளங்கள் வரம்புக்கு அப்பாற்பட்டதாகவே உள்ளதாக” ஸ்ரீதர் கூறியதாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த பிரச்னை பலமுறை மத்திய அரசுக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர்கள் இதை ஒழுங்குபடுத்துவதற்கான எந்த சட்டத்தையும் கொண்டு வரவில்லை. பெரும்பாலான மருந்துகள் குஜராத், பிகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வருகின்றன. இந்த மாநிலங்கள் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளன. ஆனால் அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை” என்றும் ஸ்ரீதர் கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்தப் பரிந்துரையை ஏற்றுக் கொண்டதாகவும், “இந்த பரிந்துரை இப்போது சட்டத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடை அல்லது கட்டுப்பாடு தொடர்பான முடிவு அவர்களது பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்படும்” என்றும் மூத்த சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒழுங்குபடுத்தப்படாத பழக்கத்தை உண்டாக்கும் மருந்துகள் தனிநபர்களை போதைப்பழக்கத்தின் சுழற்சியிலும், மோசமான உடல்நல விளைவுகளிலும் சிக்க வைக்கும். இது அதிகப்படியான மருந்து உட்கொள்ளல் மற்றும் மரணத்தின் அபாயத்தை அதிகரிக்கும்,” என்று தமிழ்நாடு கெமிஸ்ட்ஸ் மற்றும் டிரக்கிஸ்ட்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ. ரமேஷ் தெரிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது.
பிள்ளையான் தடுத்து வைப்பு ஏன்?
கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
“முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கடத்தல் தொடர்பிலேயே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அரசாங்கம் தெரிவிப்பது போல உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அவர் தடுத்து வைக்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பிள்ளையானை தடுப்புக் காவலில் வைப்பதற்கான உத்தரவில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ளார். நபர் ஒருவரை கடத்த உதவியது தொடர்பானதே இந்தக் குற்றச்சாட்டு” என்றும் அவர் கூறியதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்தச் செய்தியில், “தடுப்புக் காவல் உத்தரவு எந்த வகையிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள உதயகம்மன்பில 2015 முதல் 2020 வரை பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் அவருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விவரங்கள் தெரிந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்” என்றும் கூறப்பட்டுள்ளது.
பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி என எவராவது தெரிவித்தால் அதுவொரு சிறந்த நகைச்சுவை, ஏப்ரல் 10ஆம் தேதியன்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவரங்களை தெரிவித்துள்ளார் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், “கடந்த 12ஆம் தேதி மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எனினும் பிள்ளையானை நான் சென்று பார்த்தவேளை அரசாங்கம் தெரிவிப்பது போல பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஒரு சொல்கூடக் கதைக்கவில்லை என்பது தெரிய வந்தது” என உதயகம்மன்பில தெரிவித்ததாக வீரகேசரி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு