படக்குறிப்பு, நாடு கடத்தப்பட்டவர்களில் பலர் 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் ஹரியாணாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் கட்டுரை தகவல்
அமெரிக்காவிலிருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட பல சட்டவிரோத இந்தியக் குடியேற்றத் தொழிலாளர்கள் பிபிசி பஞ்சாபியிடம் தங்கள் அவமானம், கடன் மற்றும் தகர்ந்த கனவுகள் என துயரத்தை பகிர்ந்துள்ளனர்.
சட்டவிரோத ஆள் கடத்தலை எளிதாக்கக் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்படும் “கழுதைப் பாதை” (Donkey Route) என்ற பாதை வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த குறைந்தது 54 பேர், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தலைநகர் டெல்லியில் தரையிறங்கினர்.
25 முதல் 40 வயதுக்குட்பட்ட இவர்கள் அனைவரும் வட மாநிலமான ஹரியாணாவைச் சேர்ந்தவர்கள், அவர்கள் வீடு திரும்பிவிட்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவர்களின் நாடு கடத்தல் குறித்து இந்திய அரசு கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான ஆட்சியில் சட்டவிரோத குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வருடம் மட்டும் 2,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
பல ஆண்கள், குறிப்பாகத் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், பல எல்லைகளைக் கடந்து செல்லும் “கழுதைப் பாதை” என்று அழைக்கப்படும் வழிகள் மூலம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்குச் செல்லக் கடுமையான பயணங்களை மேற்கொள்கின்றனர்.
சிறந்த வாழ்க்கையை தேடி அல்லது சொந்த ஊரில் உள்ள தங்கள் குடும்பங்களுக்கு உதவுவதற்காக பலர் நிலத்தை விற்று, கடன்களை வாங்கி தங்கள் பயணங்களுக்கு தேவையான நிதியை திரட்டுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை நாடு கடத்தப்பட்ட 54 பேரில், ஹரியாணாவின் கைத்தால் மாவட்டத்தில் உள்ள 15 ஆண்களை பிபிசி பஞ்சாபி சந்தித்தது. அவர்கள் இப்போது தங்கள் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா செல்ல 3.5 மில்லியன் ரூபாய் செலவிட்ட விவசாயி ஹர்ஜிந்தர் சிங், அங்கு சமையல்காரராகப் பணிபுரிந்ததாக கூறுகிறார் – வீட்டில் உள்ள தன் குழந்தைகளைக் காப்பாற்ற அவர் அந்த வேலையைச் செய்தார்.
“என் நம்பிக்கைகள் தகர்ந்துவிட்டன, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று சிங் கூறினார். மேலும், நாடு கடத்தும் நடைமுறையின்போது தான் அனுபவித்த அவமானத்தை மறக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
அவரது சேமிப்புகள் அனைத்தும் போய்விட்ட நிலையில், அவர் தனது குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறார்.
நாடு கடத்தப்பட்ட மற்றொருவரான நரேஷ் குமார், நிலத்தை விற்று, அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்த தரகர்களுக்கு 5.7 மில்லியன் ரூபாய் கொடுத்ததாக கூறினார்.
அவர் ஜனவரி 2024 இல் பிரேசிலுக்குப் புறப்பட்டார், அங்கிருந்து அமெரிக்காவிற்குப் பயணம் செய்தார். “நான் வழியில் இருந்தபோது என் உறவினர்கள் எனக்கு அவ்வப்போது பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர்,” என்று குமார் கூறினார்.
ஆனால் அவர் அங்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பே, நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக கைது செய்யப்பட்டார். “நான் 14 மாதங்கள் சிறையில் இருந்தேன், பின்னர் அவர்கள் என்னை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்.”
இது குறித்து கருத்து தெரிவிக்குமாறு அமெரிக்கக் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத் துறையை(ICE) பிபிசி பஞ்சாபி அணுகியுள்ளது.
பட மூலாதாரம், Kamal Saini
படக்குறிப்பு, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் சட்டவிரோதக் குடியேறிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்தியில் நாடு கடத்தல் செயல்பாடு வருகிறது.
‘மிகவும் ஆபத்தான பயணம்’
இதற்கிடையில், பனமா வழியாக அமெரிக்காவை அடைந்த கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த ரஜத் பால், தனது பயணத்தை “மிகவும் ஆபத்தானது” என்று விவரித்தார்.
அவர் மே 2024 இல் தனது வீட்டை விட்டு வெளியேறினார், மேலும் சில மாதங்களுக்குப் பிறகு டிசம்பர் மாதத்தில்தான் தனது இலக்கை அடைய முடிந்தது என்று அவர் கூறினார்.
அவர் எப்படிப் பயணம் செய்தார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இத்தகைய வழித்தடங்களைப் பயன்படுத்தும் பலர், பேருந்துகள் முதல் படகுகள் வரை பல போக்குவரத்து முறைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
நாடு கடத்தப்பட்ட எவரும் இந்த பயணங்களை ஏற்பாடு செய்த தரகர்களுக்கு எதிராக முறைப்படி புகார் அளிக்கவில்லை என்று கைத்தாலில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினார். இருப்பினும், “புகார் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வமான குடியேற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்திய அரசு முன்னர் கூறியது.
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின்படி, ஜனவரி மற்றும் செப்டம்பர் 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் சுமார் 2,417 இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில், முப்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்த 73 வயதான ஹர்ஜித் கவுர் நாடு கடத்தப்பட்டது, அமெரிக்காவில் உள்ள சீக்கிய சமூகத்தினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
பிப்ரவரியில், 100-க்கும் மேற்பட்ட இந்தியக் குடிமக்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். 40 மணி நேர விமான பயண நேரம் முழுவதும் விலங்கிடப்பட்டிருந்ததாக நாடு கடத்தப்பட்டவர்களில் ஒருவர் பிபிசியிடம் கூறியது விமர்சனத்தைத் தூண்டியது.
ஆனால் இந்த அமளிக்குப் பிறகு, இந்தியாவிற்கு நாடு கடத்தும் விமானங்கள் பல ஆண்டுகளாக வந்துகொண்டிருக்கின்றன என்றும் அமெரிக்க நடைமுறைகள் விலங்குகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 7,25,000 ஆவணமற்ற இந்தியக் குடியேறிகள் அமெரிக்காவில் இருந்ததாகப் பியூ ரிசர்ச் சென்டரின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது மெக்சிகோ மற்றும் எல் சால்வடாரில் இருந்து வருபவர்களுக்குப் பிறகு மூன்றாவது பெரிய குழுவாக அவர்களை ஆக்குகிறது.