6
நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘இரண்டு வானம்’ திரைப்படத்தில் இடம் பிடித்த ‘வெள்ளி சுடரே..’ எனத் தொடங்கும் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்து, பாரிய வரவேற்பை தொடர்ந்து பெற்று வருகிறது.
இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படத்தில் விஷ்ணு விஷால் – மவிதா பைஜூ ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
தினேஷ் கே. பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் – அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் வழங்குகிறார்.
விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வெள்ளிச் சுடரே என் மானே.. தென்னந்துளிரே தேனே.. கண்ணே என் கண்ணம்மா… ஓஓஓ கண்ணீர் ஏன் சொல்லம்மா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் மேத்ராஷி எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். பாடல் வரிகள் -மெட்டு- இசை ஒருங்கிணைப்பு- என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.