கவிஞனாய் இருப்பதற்கு வேதனைப்படுகிறேன்
எழுத்தாளன் எனச் சொல்ல
கூச்சமாய் இருக்கிறது
கஷ்டப்படும் ஜனங்களுக்கு
கடுகளவு கூட உதவிட முடியவில்லை
புத்தக அலமாரிகளில்
புத்தகங்கள் நிறைகின்றன
எழுத்தாளர்கள் நகரும் படிக்கட்டுகளில் மேலே போகிறார்கள்
எளிய மனிதர்களின் வேதனை தீர்ந்தபாடில்லை
குறத்திமுடுக்கில் தொலைந்து போனார்
எண்களோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த வெள்ளை ஜிப்பாக்காரர்….
சிறுகதையின் திருமூலர்
ஜனங்கள் மொய்த்த
அரசு ஆஸ்பத்திரியில்
யாருமற்று இறந்து போனார்…
நாவலின் சக்கரவர்த்தி
பசி..பசி..பசி …என்று முனகியபடி
அருங்காட்சியகத்தின் கண்ணாடி பேழைக்குள்
வார்த்தைகளற்ற புத்தகமாகக் கிடக்கிறார்.
வனாந்திரத்தை கவ்வித் திரிகிறது
வயிற்றில்
யுகாந்திரமாந்திரமாய் எரியும் நெருப்புடன் மிருகமானது
என் நெஞ்சுள்
கூடைக் கட்ட ஈனக்குரலில்
கத்தித் திரிகிறது
குருதியில் நனைந்து நடுங்கியபடி
அடைக்கலான்குருவி…
தனியாய் வலையோடு செல்கிறேன்
கடல் என்மனசு போல கதறுகிறது
மீன்கள் வானில் துள்ளுகின்றன
கடவுள் முன்னால் வந்தார்
கடவுள் பின்னால் போனார்
கடவுள் எனக்குள் மட்டும் வரவில்லை.
வசந்ததீபன்
The post கவிஞனாய் இருப்பதற்கு | வசந்ததீபன் appeared first on Vanakkam London.