ராஜபாளையம்: சமூக நீதி, சுயமரியாதை பேசும் அதிமுக, திமுக, இந்து ஒற்றுமை பேசும் பாஜக என யாருமே கவின் படுகொலையை கண்டிக்காததால், அவர்களை ஒரே தட்டில் வைத்து தான் பார்க்க வேண்டும், என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நீதி, சமத்துவம், சுதந்திரம், மதச்சார்பற்ற தன்மை என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. இது இந்திய அரசியல் சாசனத்தின் ஆன்மா. தற்போது அதற்கு நேர் விரோதமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
ஜூலை 27-ல் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்களத்தை சேர்ந்த மென் பொறியாளர் கவின், தன்னை நேசிக்கும் பெண்ணுடன் பழகியதால் படுகொலை செய்யப்பட்டார்.
தங்களது கொள்கைக்கு எதிராக நடக்கும் இதுபோன்ற படுகொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த திமுக, அதிமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்து ஒற்றுமை பேசும் பாஜக அதற்கு எதிராக உள்ள சாதி வேறுபாடுகளை களைய முன்வர வில்லை. சமூக நீதி, சுயமரியாதை பேசும் திமுக, அதிமுக, இந்து ஒற்றுமை பேசும் பாஜக என எவருமே கவின் படுகொலையை கண்டிக்கவில்லை. அனைவருமே அடிப்படையில் சாதியவாதிகளாகவே உள்ளனர்.
திமுக பல தவறுகளை செய்து வருகிறது. 525 வாக்குறுதிகளில் முக்கிய அம்சங்களை கூட நிறைவேற்ற வில்லை. 2009-ல் பட்டியல் பிரிவை பிரித்து அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியது திமுக. கடந்த திமுக ஆட்சியில் அரசு துறை பணிகளை ஒன்றிய வாரியாக பிரித்து அனைத்து பணிகளையும் முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியர் சமூகத்திற்கு ஒதுக்கி உள்ளனர்.
கவின் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஒன்றியங்கள் தோறும் போராட்டம் நடத்த திட்டமிட்டு, முதலாவதாக திருச்சியில் ஆகஸ்ட் 17-ல் போராட்டம் நடத்த உள்ளோம்.
தூய்மை பணியாளர்கள் 10 ஆண்டுகள் பணி செய்தால் பணி நிரந்தரம் என்ற வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. பேரிடர் காலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை ஏமாற்ற கூடாது.
டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு, உங்களுடன் ஸ்டாலின் என்பது ஏமாற்று வேலை. திமுக அரசுக்கு இறுதி தீர்ப்பு வழங்கும் நேரம் வந்து விட்டது.
ராஜபாளையம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. வத்திராயிருப்பில் உள்ள தாலுகா தலைமை மருத்துவமனையை சீரமைக்கக்கோரி செப்டம்பரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ராஜபாளையம் எம்.எல்.ஏ அரிசி ஆலையில் இருந்து மட்டுமே தான் நெல் அரவை செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவதால் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை தடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும், என்றார்.