• Thu. Jun 25th, 2026

24×7 Live News

Apdin News

காங்கோவில் பரவும் எபோலா வைரஸ் தொற்று: முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்ஸில் பதிவு!

Byadmin

Jun 25, 2026


காங்கோ மக்களாட்சிக் குடியரசில் பரவி வரும் கொடிய எபோலா வைரஸ் தொற்று தொடர்பாக கவலைக்கிடமான புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பிய நோயாளி பிரான்ஸில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தகவல்களின் படி, காங்கோ மக்களாட்சிக் குடியரசில் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த ஒரு மருத்துவருக்கே எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் அங்கு சுகாதார மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த மருத்துவர் உடனடியாக பிரான்ஸில் உள்ள விசேட தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது திருப்திகரமாகவும், மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் பிரான்ஸ் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், காங்கோ மக்களாட்சிக் குடியரசில் எபோலா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதுவரை அந்நாட்டில் எபோலா தொற்றினால் 260க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000ஐ கடந்துள்ளதாகவும் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மேலும், இதற்கு முன்னரும் காங்கோவில் பணியாற்றிய ஓர் அமெரிக்க மருத்துவருக்கும் எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனுடன், காங்கோவின் அண்டை நாடான உகாண்டாவிலும் எபோலா பரவல் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, உகாண்டாவில் இதுவரை 20 பேர் எபோலா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் மற்றும் சுகாதார அமைப்புகள் அவசர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

By admin