• Thu. Jan 22nd, 2026

24×7 Live News

Apdin News

காசாவுக்கான “அமைதி வாரியம்” தொடக்கம்: டாவோஸில் ட்ரம்ப் அறிவிப்பு, உலக நாடுகளிடையே சர்ச்சை!

Byadmin

Jan 22, 2026


காசாவுக்கான “அமைதி வாரியத்தை” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (22) அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த முயற்சிக்கான கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுள்ளது.

இந்த அமைதி வாரியத்தில் இணையுமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக புட்டின் பங்கேற்பு தொடர்பான கவலைகளை முன்வைத்து இங்கிலாந்து இந்த முயற்சியில் கையெழுத்திட மறுத்துள்ளது.

இதனுடன், இங்கிலாந்து மட்டுமன்றி பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளும் கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளன.

அதேவேளையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, துருக்கி உள்ளிட்ட சுமார் 35 நாடுகள் இந்த அமைதி வாரியத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் வாரியத்தில் அங்கம் வகிக்க விரும்பும் நாடுகள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிக்க வேண்டும் என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், ரஷ்யா அதற்கு இணங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காசா மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் தொலைநோக்கு பார்வையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது போர்நிறுத்தத்துக்கும், அதிகரித்த மனிதாபிமான உதவிகளுக்கும் வழிவகுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

By admin