• Thu. Sep 18th, 2025

24×7 Live News

Apdin News

காசா கொடூரத்தை தடுத்து நிறுத்த மொத்த உலகமும் ஒன்றிணைய வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் | Gaza is gasping, the world must not look away: MK Stalin

Byadmin

Sep 18, 2025


சென்னை: “காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடூரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்த சமூகவலைதளப் பதிவில், “காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன். அங்கிருந்து வெளிவரும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சைப் பதறச் செய்கிறது.

பச்சிளம் குழந்தைகளின் அழுகுரல், பட்டினியில் தவிக்கும் சிறார்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக அளித்துள்ள அறிக்கை ஆகிய அனைத்தும், எந்த மனிதரும் எப்போதும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை அங்கு அனுபவித்து வருவதையே காட்டுகிறது.

அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடூரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் காசா போரில் இதுவரை 65000-க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



By admin