சென்னை: சென்னை காசிமேட்டில் வெளி மாநில மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மீன்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த 15-ம் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால், காசிமேட்டில் இருந்து விசைப் படகுகள் ஆழ்கடலுக்குச் செல்லவில்லை. சிறிய மற்றும் மீன்பிடி படகுகள் மூலம் மீனவர்கள் அண்மைக் கடல் பகுதியில் இருந்து மீன்பிடித்து வருகின்றனர். இதனால், குறைந்த அளவு மீன்களே வருகின்றன.
இதனால், மீனவர்கள் வெளி மாநிலத்தில் இருந்து மீன்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்களா என மீன்வளத் துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்தனர். ஆனால், இந்த சோதனையில் வெளிமாநில மீன்கள் ஏதும் சிக்கவில்லை. மேலும், காசிமேட்டில் நேற்று பெரிய மீன்களின் வரத்து குறைவாக இருந்தது.
இதனால், மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது. வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ.1,400-க்கும், ஷீலா, சங்கரா, கொடுவா ஆகிய மீன்கள் கிலோ ரூ.800-க்கும், பால் சுறா ரூ.700-க்கும், நவரை மற்றும் காணாங்கத்தை ரூ.500-க்கும், நெத்திலி, கடுமா, நண்டு ஆகிய ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதனால், பெரிய மீன்களை வாங்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிறிய மீ்ன்களும் கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டன. மேலும், நேற்று அமாவாசை என்பதால், காசிமேட்டில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.