‘ஒரு ரூபாய் ஓர் உயிர்’ என்ற பெயரில், ஏராளமான ஏழை நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைக்கு தேவையான உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார் கோவையைச் சேர்ந்த சமையல் ஒப்பந்ததாரரான காஜா முகைதீன்.
விபத்தில் சிக்கிய சகோதரனை காப்பாற்ற பணம் இல்லாமல் தான் எதிர்கொண்ட சவால்களை போல மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த சேவையை 30 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் செய்து வருகிறார்.
நாளிதழ்கள், அட்டைப்பெட்டி, கொட்டாங்குச்சி போன்ற குப்பைகளை சேகரித்து அவற்றில் கிடைக்கும் தொகையை வைத்தும் பலருக்கு தேவையான உயிர் காக்கும் சிகிச்சைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யும் இவரை, ’காஜா பாய்’ என்று உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர்.
53 வயதான காஜா முகைதீன், கோவை குனியமுத்துாரைச் சேர்ந்தவர். கடந்த 1991ஆம் ஆண்டில், இவருடைய தம்பி முஜிபுர் ரஹ்மானுக்கு ஏற்பட்ட விபத்துதான் பல உயிர்களை காக்கும் இவரது சேவையை தொடங்குவதற்காக தொடக்கப்புள்ளி.
பிபிசி தமிழிடம் பேசிய காஜா முகைதீன், ‘‘எனக்கு அப்போது 20 வயது. செருப்புக்கடையில் மாதம் 300 ரூபாய்க்கு வேலை பார்த்து வந்தேன். 18 வயதான என் தம்பி பைக்கில் செல்லும் போது விபத்தில் சிக்கியதில் அவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. கோமா நிலைக்கு சென்ற அவனை காப்பாற்ற ஒன்றே முக்கால் லட்ச ரூபாய் தேவைப்பட்டது.” என்று நினைவுகூர்ந்தார்.
“ஊரெல்லாம் உதவி வாங்கி அவனைக் காப்பாற்றினோம். அந்த அனுபவம் தான், ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்தது,’’ என்று கூறினார்.
‘ஒரு ரூபாய் ஓர் உயிர் திட்டம்’
தொடர்ந்து பேசிய காஜா முகைதீன், ‘‘அடுத்த ஆண்டிலேயே தன்னுடைய பெண் குழந்தைக்கு இதயத்தில் பிரச்னை என்று உதவி கேட்டு ஒருவர் வந்தார். நாங்கள் அப்போது சித்தாப்புதூரில் குடியிருந்தோம். நடிகர் பாக்யராஜ் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால், தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த அவரிடம் அந்தக் குழந்தைக்காக உதவி கேட்டோம்.”
“விமான நிலையத்தில் அவசரமாக எங்கள் கடிதத்தை வாங்கிச் சென்ற அவர், ஒரு வாரம் கழித்து ‘பாக்யா’ இதழில் அந்தக் குழந்தையைப் பற்றி எழுதினார். அதைப் பார்த்து விட்டு, 150க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக உதவினார்கள்.’’ என்று கூறுகிறார்.
உதவிய நபர்களுக்கு கடிதம் வாயிலாக நன்றி தெரிவித்து, அவர்கள் மூலமாகவே மருத்துவ உதவித் தேவைப்படும் நபர்களுக்கு உதவும் பணியை தொடர்ந்ததாக கூறுகிறார் காஜா முகைதீன்.
மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை உதவும் நபர்களிடம் இருந்து நேரடியாக நோயாளிகளிடம் கொண்டு சேர்ப்பிக்கச் செய்யும் இவர், நேரடியாக எந்த பணமோ, காசோலையோ பெறுவதில்லை.
சிறிது, பெரிதுமாக உதவிகள் செய்து வந்த காஜாவுக்கு 2006ஆம் ஆண்டு ஒரு சிகிச்சைக்காக உதவ முயற்சி செய்யும் போது, நிதியுதவி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது அவரது யோசனையில் உருவானது தான் ஒரு ரூபாய் ஓர் உயிர் திட்டம்.
‘‘கடந்த 2006 ஆம் ஆண்டில், சிவநேசன் என்ற சிறுவனுக்கு, அவசரமாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்ட போது, நிதியுதவி கிடைப்பது சிரமமாக இருந்தது. அதனால் கோவையிலுள்ள பல்வேறு கல்லூரிகளுக்கும் சென்று அங்கிருந்த மாணவர்களிடம், ஆளுக்கு ஒரு ரூபாய் தருமாறு கோரினேன்.”
“அதற்கு நல்ல பலன் கிடைத்தது. ஒவ்வொரு கல்லுாரியிலிருந்தும் 8 ஆயிரம், 10 ஆயிரம் என்று நிதி சேர்ந்தது. அந்த மாணவர்களே, அந்த காசோலையை மருத்துவமனையில் நேரடியாகக் கொடுத்து சிவநேசனின் சிகிச்சைக்கு உதவினர்,’’ என்று இந்த திட்டம் குறித்து விவரித்தார்.
அதற்குப்பின் வேறு யாருக்கும் மருத்துவ உதவி வேண்டி இந்த பாணியில், பெரிய அளவில் நிதி சேகரிக்கவில்லை என்றாலும் அதுவே இவரது அடையாளமாகிவிட்டது.
காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உதவிகள்
கடந்த 2006–2011இல், கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழ்நாடு அரசின் காப்பீட்டுத் திட்டம் செயலுக்கு வந்தது. அந்த காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற தேவையான உதவிகளையும் தேவைப்படும் மக்களுக்காக செய்துள்ளார் காஜா முகைதீன்.
காப்பீட்டுத் திட்டத்தில் வரும் நிதியைத் தவிர்த்து, மருத்துவ சோதனைகள், மருந்துகளுக்கு பலரிடம் உதவி கேட்டு பெறும் இவர், சிகிச்சைக்குப் பின், வேலைக்குச் செல்ல முடியாதவர்களுக்கு வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தருவதாக பிபிசியிடம் கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய கோவை பீளமேட்டைச் சேர்ந்த ஜெயபாரதி, ‘‘என் தங்கை தங்கநிலாவுக்கு 20 வயதில் திருமணமானது. சில நாட்களில், அவளுக்கு இதய பாதிப்பு என்று, எங்கள் அப்பா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஸ்கேன் செய்தபோது, இதயத்தில் பிரச்னை இருப்பதாகச் சொன்னார்கள். எங்கள் குடும்பம் வறுமையானது. டாக்டர் அன்பழகன் என்பவர் சொல்லி, காஜா பாயைப் பார்த்தோம். அவர்தான் என் தங்கைக்கு இதய ஆபரேஷன் செய்ய முழுக்க முழுக்க உதவினார். இப்போது என் தங்கை ஆரோக்கியமாக இருக்கிறாள்’’ என்றார்.
தங்களுக்குத் தெரிந்த மேலும் 3 பேருக்கும் இதய ஆபரேஷன் செய்ய அவர் உதவியதையும் தெரிவித்தார் ஜெயபாரதி. சூலூரைச் சேர்ந்த கல்பனா, 10 ஆண்டுகளுக்கு முன்பு, காஜா முகைதீன் உதவியால் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்து, தற்போது நலமாக இருப்பதை பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
இதேபோல, ஒரு ரூபாய் ஓர் உயிர் அமைப்பால் பயன் பெற்ற நோயாளிகள் பலரிடமும் பிபிசி தமிழ் பேசியதில், அவர்கள் தங்களுக்குக் கிடைத்த உதவிகளைப் பற்றி கூறினர். 30 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு ஆபரேஷனுக்கு உதவியதாக காஜா முகைதீன் கூறுகிறார். இதற்கான தரவுகளை சேகரித்து வைத்துள்ளதாக அவர் கூறும் தகவலை, பிபிசி தமிழால் உறுதி செய்ய இயலவில்லை.
ப்ரீத்தி என்ற பெண்ணுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு காஜா உதவியிருக்கிறார். அவர் தற்போது நலமடைந்து ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தன்னுடைய முதல் மாதச்சம்பளம் 40 ஆயிரம் ரூபாயை மற்றொரு நோயாளிக்கு உதவுவதற்குக் கொடுத்திருக்கிறார்.
குப்பைகளால் காப்பாற்றப்பட்ட உயிர்
இந்த அமைப்பில் மருத்துவ உதவி பெற்றவர்களில் சோமனுாரைச் சேர்ந்த சக்திவேலின் அனுபவம் குறிப்பிடத்தக்கது. தற்போது 35 வயதாகும் சக்திவேல், டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, சிறுநீரகத்தில் பழுது ஏற்பட்டு டயலைசிஸ் சிகிச்சை பெற்றுள்ளார்.
அவருடைய தாயார் அவருக்கு கிட்னி தருவதற்கு ஒப்புக் கொண்டுள்ளார். அப்போதுதான் காஜா முகைதீனைச் சந்தித்து, உதவி கோரியுள்ளார் சக்திவேல். இவருக்கு பல இடங்களிலிருந்து நிதி திரட்டிக் கொடுத்துள்ளார் காஜா.
அதைப் பற்றி பிபிசி தமிழிடம் விளக்கிய சக்திவேல், ‘‘என் கைக்குழந்தையுடன் காஜா பாயிடம் சென்றேன். அவர்தான் எனக்கு ஆபரேஷனுக்கு எல்லா உதவிகளையும் செய்து கொடுத்தார். எனது அம்மா எனக்கு கிட்னி தானம் செய்வதாக இருந்தார். எங்கள் இருவருக்கும் பல லட்ச ரூபாய் செலவழித்து, எல்லா மருத்துவப் பரிசோதனையும் முடிந்த நேரத்தில்தான் கொரோனா துவங்கிவிட்டது. கொரோனாவில் என் அம்மா இறந்து விட்டார். நான் மொத்தமாக உடைந்து விட்டேன். காஜா பாய்தான் என்னைத் தேற்றினார்.’’ என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘‘அதன்பின் என் சித்தி எனக்கு சிறுநீரக தானம் செய்தார். அவருக்கும் எல்லா பரிசோதனையும் எடுத்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது நான் நன்றாக இருக்கிறேன். இன்னும் சில நாட்களில் மீண்டும் வேலைக்குச் சென்று விட முடியுமென்று நம்புகிறேன்.’’ என்றார்.
சக்திவேலுக்கு சிகிச்சைக்கு முழுக்க முழுக்க உதவியது, பழைய பேப்பர், அட்டை மற்றும் கொட்டாங்குச்சியில் கிடைத்த நிதிதான் என்று தெரிவித்தார் காஜா முகைதீன். கோவையிலுள்ள 10க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், ‘DON’T WASTE DONATE WASTE’ என்ற அறிவிப்புடன் பேப்பர், அட்டைகள் மற்றும் கொட்டாங்குச்சியை சேகரிப்பதற்கான தனித்தனி அமைப்புகளுடன் கூடிய பிரத்தியேகமான ஒரு பெட்டியை அவரது ஒரு ரூபாய் ஓர் உயிர் அமைப்பு வைத்துள்ளது.
அந்த குடியிருப்புகளில் உள்ள மக்கள், தங்கள் வீட்டிலிருக்கும் நாளிதழ்கள், புத்தகங்கள், அட்டைகள் போன்றவற்றை அந்த பெட்டியில் போடுகிறார்கள். சில வியாபாரிகள் அங்கேயே சென்று எடை போட்டு, அந்தத் தொகையை குடியிருப்போர் சங்கத்தினரிடம் கொடுத்து விடுகின்றனர். அத்தொகையை உதவி வேண்டும் நோயாளிகளுக்கு கிடைக்க காஜா ஏற்பாடு செய்கிறார்.
ஒரு ரூபாய் கூட நேரடியாக வாங்காமல் சேவை
காஜா முகைதீனை பார்க்க பிபிசி தமிழ் சென்றபோது, பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை செய்வதற்கான நிதியை, காஜா முகைதீன் முயற்சியின் பேரில் பழைய பேப்பர் வியாபாரி ஒருவர், நோயாளியின் உறவினரிடம் நேரடியாகக் கொடுத்ததைப் பார்க்க முடிந்தது.
‘‘கடந்த 34 ஆண்டுகளில், இதய ஆபரேஷன், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, ஹெரனியா, கேன்சர் கட்டி அகற்றம், விபத்து உட்பட குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேருக்கு மருத்துவ உதவிகளைச் செய்திருக்கிறோம். (இந்த தரவுகளை பிபிசியால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை) ஆனால் யாரிடமும் ஒரு ரூபாய் கூட நாங்கள் நேரடியாக வாங்கியதில்லை. எல்லாத் தொகையையும் நோயாளிகள் தரப்பினரே வாங்கிக் கொள்ள வழி காட்டுகிறோம்,’’ என்று கூறும் காஜா முகைதீன், பல நுாறு நோயாளிகளின் புகைப்படங்களையும், அவர்களின் தரவுகளையும் பிபிசி தமிழிடம் பகிர்ந்தார்.
‘ஒரு ரூபாய் ஓர் உயிர்’ அமைப்பின் தொடர் மருத்துவ சேவையில் மிக முக்கியமாக அங்கம் வகிப்பவர்கள் என்று ஜெயகாந்தன், ராஜசேகர், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் கந்தசாமி, இதய சிகிச்சை நிபுணர் மனோகரன், சிவகணேஷ் உள்ளிட்ட பலரை அடையாளம் காட்டுகிறார் காஜா முகைதீன். அவர்கள் பலரிடமும் பிபிசி தமிழ் பேசியது.
‘‘நானும் 2006 ஆம் ஆண்டிலிருந்து 10 ஆண்டுகள் அவருடன் இந்தப் பணிகளைச் செய்தேன். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் அதன்பின் முழு நேரமாக என்னால் உதவ முடியவில்லை. ஆனால் அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கிறார். ஒரு நாளுக்கு எத்தனை போன் அழைப்பு வந்தாலும் அத்தனையையும் பொறுமையாக கையாள்வார்,” என்றார் ஜெயகாந்தன்.
இதய சிகிச்சை நிபுணர் மனோகரன், ‘‘கடந்த 25 ஆண்டுகளில் 2 ஆயிரம் நோயாளிகளை காஜா அழைத்து வந்திருப்பார். அவர்களில் பல நூறு இதய நோயாளிகளுக்கு நான் ஆபரேஷன் செய்திருக்கிறேன். ஏழை என்பதைத் தவிர, சாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல் அவர் இந்த சேவையைச் செய்கிறார் என்பதுதான் நான் அவரிடம் கண்ட சிறப்பு அம்சம்,’’ என்றார்.
சமையல் ஒப்பந்தப் பணிகளுக்கு இடையில், இடைவிடாது காஜா முகைதீன் செய்து வரும் மருத்துவ சேவையை அங்கீகரித்து, கடந்த 2021 ஆம் ஆண்டில் சுதந்திர தின விழாவில் கோவை மாவட்ட நிர்வாகம் அவருக்கு பாராட்டுச் சான்று வழங்கி கெளரவித்துள்ளது.
‘‘மருத்துவ சேவை செய்வதில் கிடைக்கின்ற நிம்மதியையும், நலமடைகிறவர்களின் மகிழ்ச்சியைப் பார்ப்பதில் ஏற்படுகிற திருப்தியையும் வேறு எந்த விருதுகளாலும் தந்து விட முடியாது.’’ என்கிறார் ‘ஒரு ரூபாய் ஓர் உயிர்’ காஜா முகைதீன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.