காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடந்துவரும் நிலையில், வரதராஜ பெருமாளின் வீதி உலாவின்போது வடகலை வைணவர்களுக்கும் தென்கலை வைணவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சில நூற்றாண்டுகளாகவே இத்தகைய மோதல்கள் தொடர்கின்றன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலை முன்வைத்து வடகலை – தென்கலை வைணவர்களுக்கு இடையில் நடக்கும் மோதலின் பின்னணி என்ன?
பிரச்னையின் அடிப்படை என்ன?
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலை முன்வைத்து அந்தக் கோவிலோடு தொடர்புடைய வடகலை ஐயங்கார்களுக்கும் தென்கலை ஐயங்கார்களுக்கும் இடையிலான மோதல் சில நூற்றாண்டு கால வரலாற்றைக் கொண்டது என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் இந்த மோதல் உச்சத்தை எட்டியிருக்கிறது.
எல்லா வைணவக் கோவில்களிலும் காலையிலும் மாலையிலும் இறைவனுக்கு முன்பாக பிரபந்தப் பாடல்கள் பாடப்படும்.
இந்தப் பிரபந்தங்களைப் பாடுவதற்கென முறைகள் உண்டு. பிரபந்தக் கோஷ்டியில் மூத்தவராக இருப்பவர், ‘ஆரம்பிக்கலாம்’ என்ற சொன்னதும் பிரபந்த சேவை துவங்கும். முதலில், தாம் சார்ந்த பிரிவின் ஆச்சாரியாரைப் போற்றிப்பாடிவிட்டு, பிரபந்தங்களைப் பாடுவார்கள்.
தென்கலை வைணவர்களைப் பொறுத்தவரை, பிரபந்தங்களைத் துவங்குவதற்கு முன்பாக, மணவாள மாமுனிகளை போற்றும் “ஸ்ரீ சைலேஷ தயாபாத்திரம்” என்ற மந்திரத்தைச் சொல்லி துவங்குவார்கள்.
வடகலை வைணவர்களைப் பொறுத்தவரை, “ஸ்ரீ ராமானுஜ தயாபாத்திரம்” என்ற மந்திரத்தைச் சொல்லித் துவங்குவார்கள்.
இதற்குப் பிறகு இரு தரப்புமே பொதுவான பிரபந்தங்களைப் பாடுவார்கள். இதனை முடிக்கும்போது, தென்கலையார் “மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டிரும்” என்ற வாழித் திருநாமத்தைச் சொல்லி முடிப்பார்கள். அதேபோல வடகலையார் தங்களுக்கென ஒரு வாழித் திருநாமப்பாடலை வைத்துள்ளனர்.
வரதராஜப் பெருமாள் கோவிலைப் பொருத்தவரை, இந்த பிரபந்தம் பாடுவதை தொடர்ச்சியாக தாங்களே செய்துவருவதாக தென்கலை பிரிவினர் கூறுகின்றனர். ஆனால், அந்த உரிமையைத் தாங்களே வழங்கியதாகவும், ஆகவே முதன்மை உரிமை தங்களுடையது என்கிறார்கள் வடகலை பிரிவினர். இதுதான் இந்தப் பிரச்சனையின் அடிப்படை.
வரலாற்றுப் பின்னணி என்ன?
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், வடகலை வைணவ சம்பிரதாயத்தின்படி நிர்வகிக்கப்படும் ஒரு கோவில்.
இந்தக் கோவில் துவக்கத்தில் தாத்தாச்சாரியார் என்ற குடும்பத்தின் வசம் இருந்தது. இந்த தாத்தாச்சாரியார் என்போர் வடகலை வைணவப் பிரிவைச் சேர்ந்தவர்கள். வரதராஜப் பெருமாள் கோவிலின் அர்ச்சகர்கள் அனைவரும் வடகலைப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இப்படியிருக்கும்போது, இந்தக் கோவிலில் இறைவனின் திருவுருவுக்கு முன்பாக பாடும் உரிமை தென்கலை வைணவர்களுக்கு எப்படிக் கிடைத்தது?
இதற்கு ஒரு வரலாற்றுப் பின்னணியைச் சொல்கிறார்கள் வைணவர்கள். முகலாயப் படையெடுப்பின்போது, வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்த திருமேனி, உடையார்பாளையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கிருந்த பாளையக்காரரின் வசம் இருந்தது.
இந்தத் திருமேனிகளைத் தேடிவந்த தாத்தாச்சாரியார்கள், அவை அங்கிருப்பதை கண்டனர். ஆனால், அந்தப் பாளையக்காரர் அதனைத் தர மறுத்துவிட்டார். அப்போது அந்த ஊரில் இருந்த ஆத்தாஞ்ஜீயர் என்பவர், ஹைதராபாதில் இருந்த நவாபின் உதவியை நாடி, அந்தத் திருமேனிகளைப் பெற்றுக்கொடுத்தார்.
அதற்குப் பிரதிபலனாக, தினமும் இறைவனின் திருவுருவுக்கு முன்பாக பிரபந்தங்களைப் பாடும் உரிமை ஆத்தாஞ்ஜீயரின் வம்சத்திற்கு அளிக்கப்பட்டது. பிறகு, அந்த உரிமை, ஆத்தாஞ்ஜீயரின் வம்சத்தினர் மட்டுமல்லாது பல தென்கலையாருக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தென்கலை பிரிவினர் இது தொடர்பாக சொல்வது என்ன?
அவர்களைப் பொறுத்தவரை, ஆண்டாண்டு காலமாக தாங்கள் இந்தச் சேவையைச் செய்து வருவதாகவும் பல நீதிமன்றத் தீர்ப்புகள் தங்களுக்குச் சாதகமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ‘ஸ்ரீ சைலேஷ தயாபாத்திரம்’ முடிந்த பிறகு வடகலையார் தங்களோடு சேர்ந்து பிரபந்தம் பாடலாம் என்றும் வடகலையார் தங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
வடகலைப் பிரிவினரின் வாதம் என்ன?
இந்தக் கோவில் வடகலை கோவில் என்பதால் பிரபந்தம் பாடும் உரிமை தங்களுடையது என்கிறார்கள் வடகலை பிரிவினர். தாங்கள்தான் அவர்களுக்கு பிரபந்தம் பாட அனுமதி கொடுத்த நிலையில், அவர்கள் மட்டுமே அதைப் பாடுவோம் எனச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார்கள்.
மேலும் அப்படிக் கொடுக்கப்பட்ட அனுமதியும் இப்போது உள்ள தென்கலை பிரிவினருக்கோ, அவர்களது முன்னோருக்கோ கிடையாது என்றும் கூறுகின்றனர். தாங்கள் ஆத்தாஞ்சீயருக்கு கொடுத்த அனுமதியை மற்ற தென்கலையாருக்கும் வழங்கியதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார்கள்.
வடகலை – தென்கலை பிரிவினையின் அடிப்படை என்ன?
வைணவப் பண்பாட்டில் நாதமுனிகளுடன் துவங்கும் ஆச்சார்ய பரம்பரையில் ஆளவந்தாருக்கு அடுத்து வந்தவர் ராமானுஜர்.
தற்கால வைணவ நடைமுறைகளை உருவாக்கி, அவற்றுக்கு கருத்துகளின் அடிப்படையில் உயிர் கொடுத்தவராக, ராமானுஜரை வைணவர்கள் கருதுகின்றனர்.
ராமானுஜரின் காலத்திற்குப் பிறகே வைணவத்தில் வடகலை – தென்கலை என இரு பிரிவுகள் ஏற்பட்டன.
காஞ்சிபுரத்தை மையமாகக் கொண்ட ஆச்சார்யார்களைப் பின்பற்றுபவர்கள் வடகலை என்றும் திருவரங்கத்தை மையமாகக் கொண்ட ஆச்சார்யார்களைப் பின்பற்றுவோர் தென்கலை என்றும் பொதுவாகக் குறிக்கப்படுகின்றனர்.
இதனை வேறுவிதமாகவும் சொல்வதுண்டு. வைணவர்களைப் பொருத்தவரை கோவில் என்ற சொல் திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி திருக்கோவிலையே குறிக்கும். இதற்குத் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலியில், ஆழ்வார் திருநகரியில் 1370இல் பிறந்த மணவாள மாமுனிகளைப் பின்பற்றும் வைணவர்கள் தென்கலையார் என்றும் அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, 1268ல் காஞ்சிபுரம் அருகில் உள்ள தூப்புல்லில் பிறந்த வேதாந்த தேசிகரை பின்பற்றும் வைணவர்கள் வடகலையார் என்றும் அழைக்கப்படுகிறார்கள் என்ற கருத்தும் உண்டு.
திருவரங்கத்திற்கு வடக்கே காஞ்சிபுரமும் தெற்கே ஆழ்வார் திருநகரியும் உள்ளதால், நிலவியல் சார்ந்து இந்தப் பெயர்கள் அளிக்கப்பட்டதாக கருதலாம்.
வடகலை – தென்கலை பிரிவினரிடையில் சமய நம்பிக்கைகளில் வேறுபாடு இருக்கிறதா?
வேதாந்த தேசிகரை பின்பற்றுவோர் வடகலையார் எனவும் மணவாள மாமுனிகளைப் பின்பற்றுவோர் தென்கலையார் எனவும் கூறப்பட்டாலும் வடகலை வைணவர்களுக்கும் தென்கலை வைணவர்களுக்கும் அடிப்படையில் 18 தத்துவ வேறுபாடுகள் இருக்கின்றன.
‘அஷ்டதசபேத நிர்ணயம்’ என இந்த வேறுபாடுகள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றில் 10 வேறுபாடுகள் மிக முக்கியமானவை.
1. பெருமாளின் கருணையை அடைவது 2. மகாலட்சுமியின் நிலை, 3. கைவல்ய (பற்றற்ற) நிலை, 4. பக்தியும் சரணாகதியும், 5. சரணாகதி, 6. பாவம், 7. நித்ய கடமைகள், 8. சரம ஸ்லோகம், 9. ஜீவர்களுக்காக வருத்தப்படுதல், 10. வேதங்களைப் புரிந்துகொள்வது.
இந்தப் பத்து வேறுபாடுகளில் மிக முக்கியமானது பெருமாளின் கருணையை அடைவது.
“ஆண்டவனின் கருணையைப் பெறுவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். குட்டிக் குரங்கு எப்படி தன் தாயின் வயிற்றை விட்டுப் பிரிவதில்லையோ அதுபோல பகவானை நாம் பற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் முக்தியடைய முடியும்” என்பது வடகலையாரின் தத்துவம். இதற்கு ‘மார்க்கட நியாயம்’ என்று பெயர்.
ஆனால், தென்கலையாரைப் பொருத்தவரை, “இறைவனே நமக்கு சரணாகதி என்பதை உணர்ந்தாலே போதும்; தனியாக ஏதும் செய்ய வேண்டியதில்லை. தாய்ப் பூனை எப்படி தன்னுடைய குட்டிகளை கவ்வி எடுத்து தான் செல்லும் இடங்களுக்குத் தூக்கிச் செல்கிறதோ, அப்படி பெருமாள் நம்மைக் காப்பார்” என்பது தென்கலையாரின் தத்துவம். இதற்கு ‘மார்ச்சல நியாயம்’ என்று பெயர்.
இதுபோல, தத்துவ வேறுபாடுகள் இருந்தாலும் இவற்றில் பலரும் அறிந்திருப்பது வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் திலகத்தில் உள்ள வேறுபாடுகள்தான்.
வைணவர்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் நாமம், பெருமாளின் பாதங்களைக் குறிக்கிறது. அதனை வெறுமனே நெற்றியில் வரையக்கூடாது எனக் கருதி, ஒரு சிறிய தாமரை மலரை நாமத்திற்குக் கீழ் வரைந்தனர் தென்கலையினர். இது நாமத்தோடு இணைந்து Y வடிவிலானது.
ஆனால், வடகலையினர் இதனை ஏற்கவில்லை. அவர்கள் வெறுமனே U வடிவில் நாமத்தை இட்டுக் கொள்வதையே தொடர்கின்றனர்.
வடகலையைச் சேர்ந்தவர்கள், வேதாந்த தேசிக பிரபந்தங்களைப் பின்பற்றி நடக்கின்றனர். தென்கலையாரைப் பொருத்தவரை, பிள்ளை லோகாச்சாரியார் அருளிய நூல்களையும் மணவாள மாமுனிகள் அருளிய விரிவுரைகளையும் பின்பற்றுகின்றனர்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு