திருச்சி: கும்பமேளாவை சிறப்பாக நடத்திய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மரியாதை செய்யும் விதமாக காஞ்சி சங்கர மடத்துக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். அங்கு புனித நீராடிய பின்னர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திருச்சி வந்தார்.
பின்னர், விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பிரயாக்ராஜில் நடைபெற்றவரும் மகா கும்பமேளா, நமது தேசத்தின் முக்கியமான ஆன்மிக நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளேன். இந்த கும்பமேளா இந்திய ஒருமைப்பாட்டுக்கும், கலாச்சார பாரம்பரியத்துக்கும், சேவை மனபான்மைக்கும் உதாரணமாக இருக்கக் கூடிய தேசிய திருவிழாவாக உள்ளது. கம்ப்யூட்டர் யுகத்திலும் மக்கள் மத்தியில் பக்திநெறி ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக கும்பமேளா அமைந்துள்ளது.
அங்கு காஞ்சி மடத்தின் சார்பில் கடந்த 40 நாட்களாக உலக நன்மைக்காக ஹோமங்கள், புனித பூஜைகள் மற்றும் அன்னதானம் நடத்தப்படுகிறது. இதில், நடைபெற்ற பூர்ணாஹூதி நிகழ்ச்சியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் குறித்தும், தென்னாட்டுக்கும், வடநாட்டுக்கும் உள்ள பராம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்று தொடர்புகள் குறித்தும் அவர் கருத்துகளை பரிமாறிக் கொண்டார்.
கும்பமேளாவை சிறப்பாக நடத்திய உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு மரியாதை செய்யும் விதமாக காஞ்சி சங்கர மடம் சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக அவர் தமிழகத்துக்கு வர வேண்டும் என்று விடுக்கப்பட்ட அழைப்புக்கு, இசைவு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். காஞ்சிபுரத்துக்கும், கும்பமேளாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மகா சிவராத்திரி விழா நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, சகடபுரம் மடம் ஸ்ரீ கிருஷ்ணானந்த தீர்த்த சுவாமிகள் உடனிருந்தார்.