• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

காட்பாடி: 7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை | After 7 hours of waiting ED officials raids at Minister Duraimurugan house

Byadmin

Jan 3, 2025


வேலூர்: காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். பூட்டியிருந்த வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி திமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது. இந்த வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு, சிஆர்பிஎஃப் காவலர்கள் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் துரைமுருகனின் நெருங்கிய கட்சி பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன், இவரது உறவினர் தாமோதரன் ஆகியோர் வீடுகளில் இன்று காலை 7 மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.

ஆனால், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் இருந்தார். எம்.பி. கதிர் ஆனந்த் குடும்பத்துடன் விடுமுறைக்காக துபாய் சென்றுள்ளார். இதனால், அமைச்சரின் வீட்டில் மட்டும் சோதனை தொடங்கவில்லை. மற்ற இடங்களில் சிஆர்பிஎஃப் காவலர்கள் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்றது. அமைச்சர் துரைமுருகன் தரப்பில் இருந்து யார் முன்னிலையில் சோதனை நடத்துவது என்பதற்காக அமலாக்கத் துறை அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

அமலாக்கத்துறை பெண் அதிகாரியின் பையை சோதனையிட்ட திமுக நிர்வாகிகள்

7 மணி நேரம் காத்திருப்பு: அமைச்சர் துரைமுருகன் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் 2 பெண்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் வீட்டின் தாழ்வார பகுதியில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தனர். மேலும், அந்த வீட்டின் பின்பகுதி வழியாக யாராவது வந்து செல்ல வாய்ப்புள்ளதா? என்பதையும் வீட்டில் இருந்து ஏதாவது பொருட்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு மாற்றி கொடுக்க வாய்ப்புள்ளதா? என்பதையும் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணித்தபடி இருந்தனர்.

அதேநேரம், யார் முன்னிலையில் சோதனை நடத்துவது என்பது தொடர்பாக கதிர் ஆனந்த் தரப்பில் இருந்து அமலாக்கத் துறைக்கு இ-மெயில் அனுப்பினால் அதன் அடிப்படையில் சோதனை நடத்தப்படும் என்று திமுக முக்கிய நிர்வாகிகளிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் துரைமுருகன் வீட்டின் மாற்று சாவியை பயன்படுத்தி காட்பாடி பகுதி திமுக கிளை செயலாளர் வன்னியராஜா, வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், வழக்கறிஞர் பாலாஜி என்பவர் முன்னிலையில் சோதனை நடத்த கதிர்ஆனந்த் தரப்பில் இருந்து அமலாக்கத் துறைக்கு மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளித்தனர்.

அதன்படி, இன்று பகல் 2 மணியளவில் சோதனை நடத்துவதற்கான ஆவணங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கையெழுத்திட்டு வன்னியராஜா, சுனில்குமாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரிகளை அவர்கள் சோதனை செய்த பிறகே வீட்டினுள் அனுமதித்தனர். அமலாக்கத் துறை பெண் அதிகாரிகள் கொண்டு வந்த கைப்பைகளையும் சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். சுமார் 7 மணி நேரம் காத்திருப்புக்குப் பிறகு அமலாக்கத் துறை அதிகாரிகளின் சோதனை தொடங்கியது.

சோதனை ஏன்? கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, 2019-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ரூ.10 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதன் தொடர்ச்சியாக கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் பூஞ்சோலை சீனிவாசன், உறவினர் தாமோதரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ.11 கோடியே 51 லட்சத்து 800 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சுமார் ரூ.9 கோடி அளவுக்கு 200 ரூபாய் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது.

இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக காட்பாடி காவல் நிலையத்தில் தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர் முத்து சிலுப்பன் அளித்த புகாரின்பேரில் கதிர்ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை வேலூர் ஜெ.எம் 1-வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதேபோல், முறைகேடாக பணம் பதுக்கியது தொடர்பாக பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் மீது விசாரணை நடந்து வருகிறது.

மேலும், புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தொடர்பாக பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் மற்றும் காட்பாடி இந்தியன் வங்கி செஸ்ட் கிளை மேலாளர் தயாநிதி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2019-ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்திய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



By admin