• Sat. Sep 6th, 2025

24×7 Live News

Apdin News

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்?

Byadmin

Sep 5, 2025


ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக காணாமல் போனோர் தொடர்பிலும்,மனித புதைகுழிகள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்வங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். செம்மணி மனித புதைகுழி சர்வதே தரத்துடன் முறையாக ஆராயப்படுகிறது முழுமையான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குவோம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்? களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வழங்கப்படும் தகவல்கள் பாதுகாக்கப்படுவதுடன் தகவல் வழங்குபவரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிக்குடி மற்றும் குருக்கள்மடம் ஆகிய பகுதிகளில் மனித புதைகுழிகள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய அப்பகுதிகளை அண்மித்த பகுதிகளுக்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் கண்காணிப்பு விஜயத்தை வியாழக்கிழமை (4) மேற்கொண்டிருந்தார்.

கள கண்காணிப்பின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில்  முறையாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அரசாங்கத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.இதனால் கடந்த காலங்களை காட்டிலும் காணாமலாக்கபட்டோர் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழியின் அகழ்வு பணிகள் சர்வதேச தரத்துடன் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தின் கண்காணிப்புடன் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனைய மனித புதைகுழிகள் இடத்தை காட்டிலும் குருக்கல்மடத்தின் நிலைமை மாறுப்பட்டது.2014 ஆம் ஆண்டு இந்த இடம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.2019 ஆம் ஆண்டு இந்த இடத்தை பரிசோதனை செய்வதற்கு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்பு மற்றும் அகழ்வு பணிகளுக்கு தேவையான நிதியை வழங்குமாறு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் குறித்த தரப்பினருக்கு வலியுறுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மற்றும் அந்த அரசாங்கம் அதற்குரிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை.கடந்த காலத்தை பற்றி பேசி இனி பயனில்லை.இருப்பினும் அந்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்பதை தெளிவாக குறிப்பிட முடியும்.

எமது அரசாங்கம்; ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் கடந்த கால முறைப்பாடுகள் காணாமல் போனோர் அலுவலகத்தின் தலையீட்டுடன் முறையாக விசாரிக்கப்படுகிறது.காணாமல் போனோர் அலுவலகம் தமது பணிகளுக்குரிய கட்டளைகளை பெற்றுக்கொண்டு எதிர்வரும் இரண்டு வாரத்துக்குள் கொழும்பில் இருந்து நீதிமன்ற சட்டவைத்திய அதிகாரிகளை அழைத்து வந்து கண்காணிப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.

இந்த அகழ்வு பணிகளுக்குரிய நிதி மற்றும் ஏனைய வசதிகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காகவே இன்று (நேற்று) இவ்விடயத்துக்கு வருகைத் தந்தேன்.முறையான கண்காணிப்புக்களை தொடர்ந்து முறையான வழிமுறைகள் ஊடாக நிதி வழங்க தயாராகவே உள்ளோம்.

நடுநிலையான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன், சர்வதேச தரத்துடன் பரிசோதனை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நீதியமைச்சு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.நீதி மற்றும் உண்மையை கண்டறிவது அரசாங்கத்தின் பிரதான கடப்பாடாகும்.தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின் கடந்த கால சம்வங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.குருக்கள்மடம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் பொதுமக்கள் அதனை எமக்கு வழங்க வேண்டும்.வழங்கப்படும் தகவல் பாதுகாக்கப்படுவதுடன், தகவல் வழங்குபவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அகழ்வு பணிகள் தொடர்பில் வைத்திய அதிகாரிகள் உட்பட துறைசார் நிபுணர்கள் வழங்கும் பரிந்துரைக்கு அமைய எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றமே தீர்மானிக்கும்.இங்கு நிதி பிரச்சினையில்லை.மனிதாபிமானம் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

சகல மனிதப்புதைகுழிகள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறோம்.ஐக்கிய நாடுகள் சபை, தென் ஆபிரிக்கா, சுவிஸ்லாந்து போன்ற நாடுகள் உட்பட சர்வதேச அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன.

இம்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது இவ்விடயங்கள் பேசப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.நாட்டு மக்களுக்காக  விசாரணைகளை மேற்கொள்கின்றோமே தவிர,சர்வதேச சமூகத்தை மகிழ்விப்பதற்காகவல்ல என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறோம்.

நீதி மற்றும் நியாயத்தை நிலைநாட்டுவதற்கு இந்த ஒருவருட காலத்தில் பலவற்றை செய்துள்ளோம்.ஐக்கிய நாடுகள் சபையையோ அல்லது சர்வதே சமூகத்தையோ திருப்திப்படுத்துவதற்காக இந்த விசாரணைகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை.எமது அரசாங்கத்தின் பிரதான தரப்பான மக்கள் விடுதலை முன்னணியினர் 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டுகாலப்பகுதிகளில் இவ்வாறே பாதிக்கப்பட்டார்கள்.

காணாமலாக்கப்பட்டோருக்கு எமது அரசாங்கத்தில் நீதி கிடைக்காவிடின், எந்த அரசாங்கத்தில் நீதி கிடைக்கும்? சகலருக்கும் நீதி மற்றும் நியாயம் கிடைக்கும் வகையில் செயற்படுவோம்.களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் முறைப்பாடளிக்குமாறு பொதுக்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.நிச்சயம் நீதியை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

By admin