• Wed. May 21st, 2025

24×7 Live News

Apdin News

காணி பற்றிய வர்த்தமானி அறிவிப்பு உடன் வாபஸ் பெறப்பட வேண்டும்! – சுமந்திரன் மீள வலியுறுத்து

Byadmin

May 21, 2025


வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எனவே அந்த வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் மீள வலியுறுத்தியுள்ளார்.

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின்கீழ் 28.03.2025 திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5 ஆயிரத்து 940 ஏக்கர் காணிகளை 3 மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக வாபஸ் பெறுமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அதனையடுத்து அந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் எவரேனும் காணிகளுக்கான உரிமையை நிறுவுவதற்குத் தவறும் பட்சத்தில் அல்லது காணிகளுக்கு உரிமை கோராதவிடத்து, அந்தக் காணிகள் கட்டாயமாக அரசுடைமையாக்கப்படவேண்டும் என காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 5 (1) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே, அரசு அறிவித்துள்ளவாறு தற்காலிக இடைநிறுத்தம் எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத் தராது எனவும், ஆகையினால் மேற்குறிப்பிட்ட வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

By admin