காணொளி: உலகின் முதல் டிரில்லியனரான ஈலோன் மஸ்க்
பிரசுரிக்கப்பட்டது
உலகின் முதல் டிரில்லியனர் ஆனார் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஈலோன் மஸ்க்.
பங்குச்சந்தையில் அறிமுகமாகி உள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் நிறுவன பங்குகளின் மதிப்பு உயர்வால் ஒரு லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடையவர் என்ற பெருமையை ஈலோன் மஸ்க் பெற்றுள்ளார். இந்திய மதிப்பில் கூறவேண்டுமென்றால் இது சுமார் 95 லட்சம் கோடி ரூபாய்.
ப்ளூம்பெர்க் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு 1.11 டிரில்லியன் டாலர் எனக் கூறப்பட்டுள்ளது.
ராக்கெட், தொலைத்தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு துறைகளில் செயல்படும் ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், நாஸ்டாக் பங்குச் சந்தையில் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் பட்டியலிடப்பட்டது.
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தில் மஸ்க் 42% பங்கை வைத்துள்ளார். இதனால் நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் அவருக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது.
ஈலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் என்ற அந்தஸ்தை பெற்றதும், செல்வ ஏற்றத்தாழ்வு குறித்த விவாதமும் கிளம்பி இருக்கிறது. அவரது செல்வம் தற்போது போலந்து அல்லது சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கு இணையாக உள்ளது.
முன்னெப்போதும் இல்லாத இத்தகைய செல்வம், மஸ்க்கை உலக அரசியலில் சக்திவாய்ந்த மற்றும் பிளவுபடுத்தும் நபராக ஏற்கனவே மாற்றியுள்ளது.
அதே நேரம், மஸ்க் பெயரளவுக்கு மட்டுமே டிரில்லியனராக உள்ளார். ஏனெனில் அவரது செல்வம் பெரும்பாலும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் மதிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஓராண்டுக்கு தனது ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளை அவரால் விற்க முடியாது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு