• Mon. Oct 27th, 2025

24×7 Live News

Apdin News

காணொளி: டிரம்பின் ஆசிய பயணம் – சீனாவின் சவாலை சமாளிப்பாரா?

Byadmin

Oct 27, 2025


காணொளிக் குறிப்பு, டிரம்பின் ஆசிய பயணம் என்ன தாக்கம் ஏற்படுத்தும்?

காணொளி: டிரம்பின் ஆசிய பயணம் – சீனாவின் சவாலை சமாளிப்பாரா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பயணத்தின்போது சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களைச் சந்திக்க உள்ளார்.

ஏசியான் (Association of Southeast Asian Nations) உச்சி மாநாட்டிற்காக மலேசியா வந்தடைந்த டிரம்புக்கு கோலாலம்பூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இங்கிருந்து ஜப்பான், தென்கொரியா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. தென்கொரியாவில் அக்டோபர் 30-ஆம் தேதி ஜின்பிங்கை டிரம்ப் சந்திக்க உள்ளார்.

டிரம்பின் இந்த ஆசிய பயணம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்? யாருக்கு என்ன மாதிரியான வெற்றி, தோல்விகள் இருக்கும் என்பது குறித்து பிபிசி செய்தியாளர்கள் ஒரு கட்டுரை எழுதி உள்ளனர். அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளவற்றை இந்த காணொளியில் பார்க்கலாம்.

இந்தப் பயணம் பற்றி விளக்கும் பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் அந்தோணி ஸுர்ச்சர், டிரம்பின் ஆசிய சுற்றுப்பயணத்தில் வர்த்தகம்தான் முக்கிய நோக்கமாக இருக்கும் எனக் கருதுகிறார்.

உலக வர்த்தகத்தில் பல நாடுகள் இருந்தாலும், டிரம்பின் வெற்றி தோல்வியில் சீனாவின் பங்கு முக்கியமானது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஷி ஜின்பிங்குடனான டிரம்பின் திட்டமிடப்பட்ட இந்த சந்திப்பு, டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் அமெரிக்க – சீன உறவுகளுக்கு ஒரு பாதையை அமைக்கக்கூடும்.

டிரம்ப் ஒப்புக்கொண்டது போல சீன இறக்குமதிகள் மீதான கடுமையான வரிகளை நீண்ட காலத்துக்கு தொடர முடியாது. டிரம்ப் இதை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், அவர்களின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியுடன் அதிகரித்து வரும் பொருளாதார போர் அமெரிக்கா, சீனா மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

டிரம்பை பொறுத்தவரை இந்தச் சந்திப்புகள் அனைத்தையும் முடித்துவிட்டு அடுத்த வாரம் அமெரிக்கா திரும்பும் போது தென்கொரியாவுடன் வணிக ஒப்பந்தம் மற்றும் ஜப்பானில் இருந்து அதிக முதலீடுகளை பெற்றுவிட்டால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவார்.

ஆனால், இந்தப் பயணத்தில் டிரம்பின் பிரதான நோக்கங்களாக அமெரிக்க விவசாய ஏற்றுமதி பொருட்களை மீண்டும் வாங்கவும், அரிய வகை கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும், வர்த்தகப் போரைத் தவிர்த்து, அமெரிக்க நிறுவனங்களுக்கு சீன சந்தையில் அதிக வாய்ப்புகளை வழங்கவும் ஜின்பிங்கை சமாதானப்படுத்துவது இருக்கும் என்கிறார் அந்தோணி ஸுர்ச்சர்.

இது பற்றி விளக்கும் பிபிசி சீன செய்தியாளர் லாரா பிக்கர், 30-ஆம் தேதி டிரம்புடன் நடக்கும் சந்திப்பில் ஷி ஜின்பிங் கடுமையான பேச்சுவார்த்தையாளராக இருக்க விரும்புகிறார். அதனால் தான் அரிய தாதுக்கள் மீது சீனாவின் பிடியை கெட்டியாக வைத்துள்ளார். அரிய தாதுக்கள் இல்லாமல் செமிகண்டக்டர்ஸ், கார்கள், ஸ்மார்ட்போன்களை கூட உருவாக்க முடியாது. இது அமெரிக்காவின் பலவீனம் என்கிறார்.

டிரம்பின் கடந்த ஆட்சியிலேயே ஜின்பிங் பாடம் கற்றுக்கொண்டார். அதனால் இம்முறை அமெரிக்காவின் வரிவிதிப்பை சமாளிக்க அவர் தயாராக உள்ளதுபோல் தெரிகிறது. ஏனெனில் ஒரு காலத்தில் சீன ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்கைப் கொண்டிருந்த அமெரிக்கா, தற்போது அவ்வளவு முக்கியமான சந்தையாக இல்லை.

மேம்பட்ட AI சிப்களை ஏற்றுமதி செய்ய டிரம்ப் அனுமதித்தாலோ, தைவானுக்கு அமெரிக்க ராணுவ ஆதரவைக் குறைக்க ஒப்புக்கொண்டாலோ, அமெரிக்காவுடன் சீனா ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

“ஆனால் இது சாதாரண விஷயம் அல்ல. ஒருபுறம் டிரம்ப் ஆபத்தான முடிவுகளை எடுக்கத் தயாராக இருக்கிறார். மறுபுறம் ஷி ஜின்பிங் பொறுமையாக தனது ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். எனவே கேள்வி என்னவெறால் டிரம்ப் காத்திருக்க முடியுமா என்பதே” என்கிறார் லாரா பிக்கர்.

இது ஒரு புறம் என்றால் மறுபுறம் ஆசியாவின் முக்கிய உற்பத்தி நாடுகள் டிரம்பின் வரி விதிப்பில் இருந்து விடுபட விரும்புகின்றன.

இது பற்றி கூறும் பிபிசியின் ஆசிய வர்த்தக செய்தியாளர் சுரஞ்சனா திவாரி, “டிரம்ப், ஷி ஜின்பிங் இடையே நடக்க உள்ள சந்திப்பு, முன்னேற்றத்தைக் காட்டுகிறது. ஆனால் வரிவிதிப்பு, ஏற்றுமதி கட்டுப்பாடுகள், AI மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் இருக்கும் போட்டி, பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன. இந்த பதற்றத்தை தணிப்பது தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பெரிதும் உதவும்.” என்கிறார்.

ஏனெனில் 10 – 40% வரிவிதிப்பு வியட்நாம், இந்தோனீசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் உள்ள உற்பத்தியாளர்களைப் பெரிதும் பாதிக்கிறது.

ஜப்பானை பொறுத்தவரை, “டிரம்புடனான சந்திப்பு, புதிய பிரதமர் சனே டாக்காய்ச்சி தலைமைத்துவத்தையும், அமெரிக்காவுடன் நிலையான உறவை மேம்படுத்துவதற்கு இவர் எடுக்கும் முயற்சிகளையும் சோதிக்கும் வகையில் இருக்கும்” என பிபிசியின் ஜப்பான் செய்தியாளர் ஷைமா காலீல் கூறுகிறார்.

ஜப்பான், அமெரிக்கா என இரு நாடுகளும் வரி ஒப்பந்தத்தை இறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தென்கொரியாவும் டிரம்பின் பயணத்தை முக்கியமாகப் பார்க்கிறது.

“தென் கொரியாவுக்கு டிரம்பின் வரிகள்தான் முக்கிய கவலையாக உள்ளது.” என்கிறார் பிபிசியின் சியோல் செய்தியாளர் ஜேக் க்வான்.

தென் கொரிய பொருட்கள் மீதான வரிகளை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தென் கொரிய அதிபர் லீ திட்டமிட்டுள்ளார். தென்கொரியா அமெரிக்காவில் 350 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார். இது தென்கொரிய பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு. அதனால் இது நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என தென்கொரியா அஞ்சுகிறது.

அதே நேரம் டிரம்ப் மற்றும் லீ இடையே புதன்கிழமைக்குள் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தென்கொரிய அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



By admin