காணொளி: ரஷ்யாவை நெருங்க முயலும் பாகிஸ்தான் – இந்தியா கவலைப்பட வேண்டுமா?
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை திங்களன்று சந்தித்துப் பேசினார். அடுத்த நாளே, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃபும் புதினைச் சந்தித்தார்.
அந்த சந்திப்பில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகளை தாங்கள் மதிப்பதாகவும், ஆனால் பாகிஸ்தானும் ரஷ்யாவுடன் வலுவான உறவுகளை உருவாக்க விரும்புவதாகவும் ஷெபாஸ் ஷெரீஃப் புதினிடம் கூறினார். ஷெரீஃப் இவ்வாறு கூறும்போது, அதை ஏற்றுக்கொள்வதுபோல் புதின் தலையசைத்தார்.
ஷெபாஸ் ஷெரிஃப் புதின் சந்திப்பு உணர்த்துவது என்ன? இதனால் இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவு பாதிக்குமா?
புரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூஷன் ( Brookings Institution) என்ற சிந்தனைக் குழுவின் மூத்த ஆய்வாளர் தன்வி மதன், “புதின் ஒரு நாட்டுடன் மட்டும் பிணைக்கப்படவில்லை. அவர் ஷெபாஸ் ஷெரீஃபை சந்தித்து, பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புவதாக கூறினார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எல்லோரும் டிரம்ப் மீது கவனம் செலுத்தியதால், ரஷ்யாவின் நிலைப்பாட்டை யாரும் கவனிக்கவில்லை” என்று கூறினார்.
புதின் பாகிஸ்தானை பாரம்பரிய நட்பு நாடு என்று கூறியுள்ளார். உண்மையில் பாகிஸ்தான் ரஷ்யாவின் பாரம்பரிய நட்பு நாடாக இருந்ததா?
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் ராஜன் குமார் இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், “பாகிஸ்தான் ஒருபோதும் ரஷ்யாவின் பாரம்பரிய நண்பராக இருக்கவில்லை. சோவியத் யூனியன் காலத்திலும் கூட இல்லை. புதின் இப்போது சொல்வது வரலாற்று உண்மைக்கு மாறானது” என்கிறார்.
“பாகிஸ்தானுடனான ரஷ்யாவின் நெருக்கம் அதிகரித்தால், நிச்சயமாக நமது உறவுகள் பாதிக்கப்படும் என ரஷ்யாவிடம் இந்தியா தெளிவாகக் கூறியுள்ளது. ஆனால் சீனாவை பயன்படுத்தி ரஷ்யாவுடன் நெருக்கத்தை அதிகரிக்க பாகிஸ்தான் முயன்று வருகிறது” என பேராசிரியர் ராஜன் குமார் கூறுகிறார்.
பாகிஸ்தானும் ரஷ்யாவும் சீனாவின் முக்கிய நட்பு நாடுகள். இந்த கண்டத்தில் இந்தியாவின் சமநிலையை சீர்குலைப்பதுதான் பாகிஸ்தானின் உத்தியாக இருப்பதாக கூறும் ராஜன் குமார், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா ஒன்றிணைவது இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து என்கிறார்.
இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் வரலாற்று ரீதியில், ரஷ்யா எப்போதும் சமநிலையான நிலைப்பாட்டையே எடுத்துள்ளது.
1965-ல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடந்த போரின்போது, ரஷ்யா சமநிலையான நிலைப்பாட்டையே எடுத்தது. தாஷ்கண்டில் (Tashkent) ரஷ்யா செய்த ஒப்பந்தமும் இந்தியாவுக்கு எதிராகவே இருந்தது.
1991-ல் ஐக்கிய நாடுகள் சபையில் ‘தெற்காசிய அணு ஆயுதமற்ற பகுதி’ என்ற முன்மொழிவை பாகிஸ்தான் முன்வைத்தது, இதை இந்தியா எதிர்த்தது. ஆனால் சோவியத் யூனியன் இதை ஆதரித்தது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், புதின் பாகிஸ்தானுக்கு எப்போதும் சென்றதில்லை. ஏன், சோவியத் யூனியன் காலகட்டம் உட்பட எந்த காலகட்டத்திலும் இதற்கு முன் எந்த ரஷ்ய அதிபரும் பாகிஸ்தான் செல்லவில்லை.
ரஷ்ய அதிபர்கள் யாரும் பாகிஸ்தான் செல்லவில்லை என்றாலும், 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி, ரஷ்ய பிரதமர் மிகைல் ஃப்ராட்கோவ் (Mikhail Fradkov) பாகிஸ்தானுக்குப் பயணம் மேற்கொண்டார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு