• Wed. Mar 4th, 2026

24×7 Live News

Apdin News

காணொளி: ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவு

Byadmin

Mar 3, 2026


காணொளிக் குறிப்பு, ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவு

காணொளி: ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவு

இரான் மற்றும் அமெரிக்கா- இஸ்ரேல் இடையேயான மோதல் 4வது நாளை எட்டியுள்ளது. தற்காப்பு தொடர்பான தாக்குதல்களுக்காக தனது விமானப்படை தளங்களை பயன்படுத்திக்கொள்ள அமெரிக்காவுக்கு பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, இரான் வெளிநாடுகளிடமிருந்து எத்தகைய ஆதரவைப் பெற முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரானுடன் வலுவான ராஜீய, வர்த்தக மற்றும் ராணுவ தொடர்புகளை கொண்டுள்ள ரஷ்யா மற்றும் சீனா, தற்போதைய மோதலுக்குப் பின் இரானை எந்தளவு ஆதரிக்க தயாராக இருக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ரஷ்யா – சீனா – இரானுக்கு இடையேயான உறவு குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

யுக்ரேன் மீதான முழுமையான ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒன்றாக இரான் திகழ்ந்தாலும், ரஷ்யாவின் ஆதரவு பெரும்பாலும் வார்த்தைகளால் மட்டுமே உள்ளது.

அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து இரான் மீது நடத்திய தாக்குதல்களை ரஷ்யா கடுமையாக கண்டித்திருந்தாலும் , தன்னை நேரடியாக மோதலுக்குள் இழுக்கும் நடவடிக்கைகளை ரஷ்யா தவிர்த்து வருவதாக பிபிசியின் ரஷ்ய செய்தியாளர் செர்கெய் கோரியாஷ்கோ கூறுகிறார்.

“அமெரிக்கா மற்றும் இரான் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்தபோதிலும், நிலைமை ‘வெளிப்படையான தாக்குதலாக’ மாறியுள்ளதாக ரஷ்ய செய்தி தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். இதனால் “ஆழ்ந்த ஏமாற்றம்” ஏற்பட்டுள்ளதாகவும் , பாதிக்கப்பட்ட வளைகுடா நாடுகளுடனும், இரானின் தலைவர்களுடனும் ரஷ்யா தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இப்போது ரஷ்யா, அமெரிக்காவை எவ்வாறு நம்பும்?” என்ற கேள்விக்கு, பதிலளித்த பெஸ்கோவ் ” ரஷ்யா முதன்மையாக தன்னை மட்டுமே நம்புகிறது என்றும் , தனது நலன்களைப் பாதுகாக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் “தூண்டுதலற்ற தாக்குதலை” நடத்தியதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டி இருந்த நிலையில் , இறையாண்மை கொண்ட நாடுகளின் தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் “அரசியல் கொலைகள்” மற்றும் “வேட்டை” நடவடிக்கைகளையும் கண்டிப்பதாகவும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொலை தொடர்பாக, கடந்த ஞாயிறு அன்று இரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுக்கு ரஷ்ய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்த நிலையில் , இந்த கொலையை “மனித ஒழுக்கமும் சர்வதேச சட்டமும் மீறப்பட்ட செயல்” என குறிப்பிட்டிருந்தார்.

அதே நேரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து நேரடி தனிப்பட்ட விமர்சனங்களை ரஷ்யா தவிர்த்துள்ள நிலையில் யுக்ரேன் தொடர்பான அமெரிக்காவின் நடுநிலை முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தும் உள்ளது.

மாஸ்கோவுக்கு, இரான் வீழ்ச்சியடையக் கூடாது என்ற அளவுக்கு அது முக்கியமானது. ஆனால் அதற்காக நேரடியாகப் போரில் இறங்கும் அளவுக்கு அவ்வளவு முக்கியமல்ல.

காமனெயி கொல்லப்பட்டதை சீனா கடுமையாக கண்டித்துள்ள நிலையில் , உலகம் முழுவதும் அமெரிக்கா மேற்கொண்ட ஆட்சி மாற்று முயற்சிகளுக்கு சீனா வரலாற்று ரீதியாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

சீனா–இரான் உறவின் மையத்தில், இரு தரப்புக்கும் பயனளிக்கும் பொருளாதார கூட்டாண்மை இருப்பதாக பிபிசி உலக சேவையின் “குளோபல் சைனா” பிரிவைச் சேர்ந்த ஷான் யுவான் கூறுகிறார். சீனா, இரானின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி மட்டுமல்லாமல் , அதன் முக்கியமான எரிசக்தி வாடிக்கையாளராகவும் இருந்து வருகிறது.

இரானுக்கு எதிராக பல ஆண்டுகளாக அமெரிக்கா கடுமையான தடைகள் விதித்திருந்த போதிலும் , சீனா, இரானின் பொருளாதார தூணாக இருந்து வந்துள்ளது.

“கோஸ்ட் ஃப்ளீட்கள்” என அழைக்கப்படும், போலியாக பதிவு செய்யப்பட்ட கப்பல்களின் வலையமைப்பின் மூலம் தடைச் சட்டங்களைத் தவிர்த்து, தள்ளுபடி விலையில் அதிக அளவிலான எண்ணெயை இரானிடமிருந்து சீனா வாங்கி வருகிறது.

சீனாவின் இந்த கொள்முதல்களால் கிடைத்த வருவாய், மேற்கத்திய சந்தைகள் மூடப்பட்டிருந்த நிலையிலும், இரானின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், பாதுகாப்பு செலவுகளுக்கு நிதியளிக்கவும் உதவியுள்ளது.

வரலாற்று ரீதியாக, இரான்–இஸ்ரேல் மற்றும் இரான்–அமெரிக்கா இடையேயான பதற்றங்களுக்கு சீனா எடுத்த அணுகுமுறை “வியூக ரீதியான சமநிலையை பேணுவதாக” இருந்து வந்துள்ளது.

2025 ஆம் ஆண்டு நடந்த 12 நாள் இஸ்ரேல்–இரான் போர் உள்ளிட்ட முந்தைய பதற்றங்களின் போது, சீனா தொடர்ந்து “கட்டுப்பாட்டை ” கடைப்பிடிக்க வேண்டுமென அழைப்பு விடுத்ததுடன் “வெளிநாட்டு தலையீடு” குறித்தும் குற்றம் சாட்டியது; இது அமெரிக்காவின் கொள்கைகளை நேரடியாகச் சொல்லாமல் மறைமுகமாகக் குறிப்பதாக பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

முந்தைய இரான்–இஸ்ரேல் மோதல்களின் போது, ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களை பலவீனப்படுத்த தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதோ, அல்லது பயன்படுத்துவதாக அச்சுறுத்தியதன் மூலம், சீனா இரானுக்கு ராஜீய பாதுகாப்பு கவசமாக செயல்பட்டுள்ளது. ஆனால் நேரடி ராணுவ தலையீட்டை சீனா ஒருபோதும் வழங்கவில்லை.

அமெரிக்கா மத்திய கிழக்கில் நீண்ட காலம் சிக்கிக்கொள்ள வேண்டும் என்பதே சீனாவின் நிலையான வியூகமாக இருந்து வந்ததாக பிபிசி செய்தியாளர் குறிப்பிடுகிறார் . ஆனால் அதே நேரத்தில், உலகளாவிய எண்ணெய் விலைகளை திடீரென உயர்த்தக்கூடிய முழுமையான பிராந்திய சீர்கேட்டைத் தூண்டாத வகையில் அது செயல்பட்டு வருகிறது.

இரான், பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினராக உள்ளது. மேலும், மத்திய ஆசியா, காக்கசஸ் மற்றும் மத்திய கிழக்கை இணைக்கும் முக்கிய புவியியல் இணைப்பாகவும் செயல்படுகிறது. இஸ்லாமிய குடியரசு வீழ்ச்சியடைந்தால், மாஸ்கோவும் பெய்ஜிங்கும் வலுப்படுத்த முயற்சித்து வரும் பன்முக ஒத்துழைப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மை பாதிக்கப்படலாம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

By admin