காணொளி: வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?
பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. அதற்கு ஒரு மாதத்திற்குப் பின், ஜூலையில் வங்கதேச மக்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராடினர்.
இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாற, ஒரு கட்டத்தில் ஷேக் ஹசீனா தனது உயிரைக் காப்பற்றிக் கொள்ள இந்தியா வந்தார்.
வங்கதேசத்தின் நிறுவனரான ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman), இந்தியாவுடன் வரலாற்று ரீதியான உறவைக் கொண்டிருந்தவர். ஷேக் ஹசீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவும் அப்படித்தான் இருந்தது. இந்தியாவின் ஆதரவில்தான் அவர் அதிகாரத்தில் நீடித்ததாக ஷேக் ஹசீனாவின் எதிர்ப்பாளர்கள் நம்புகின்றனர்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தபோது, வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வு அதிகரித்தது.
இந்தியா எப்போதும் வங்கதேசத்தை ஷேக் ஹசீனா குடும்பத்தின் கண்ணாடி வழியாகவே பார்த்து வருவதாகவும், அதற்கு அப்பால் பார்க்க ஒருபோதும் பார்க்க முயலவில்லை என வங்கதேச ஊடகங்களில் கூறப்படுகிறது.
டிசம்பர் 23-ஆம் தேதி, இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப் என்ற லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனம், இந்தியா-வங்கதேச உறவுகள் குறித்து After the Golden Era: Getting Bangladesh-India Ties Back on Track என்ற தலைப்பில் 51 பக்க ஆய்வறிக்கையை வெளியிட்டது.
அதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில், வில்லியம் வான் ஷெண்டலின் A History of Bangladesh என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம் மேற்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரு நாடுகளும் ஒன்றையொன்று எவ்வாறு பார்க்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.
வில்லியம் வான் ஷெண்டல் அந்த புத்தகத்தில், பின்வருமாறு எழுதியுள்ளார்:
வங்கதேச சுதந்திரத்திற்கு இந்தியா ஆதரவளித்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பெரும்பாலும் பதற்றமாகவே இருக்கின்றன. சில நேரங்களில் வெளிப்படையான பகைமையுடனேயே இருந்துள்ளன. வங்கதேசம் ஒரு சுதந்திர நாடாக உருவெடுத்ததில் ஒன்றுக்கொன்று ஆற்றிய பங்கைக் குறைத்து மதிப்பிடும் விஷயங்களையே இரு நாடுகளும் முன்னிறுத்தியுள்ளன.
சுதந்திரப் போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்புக்கு வங்கதேசம் போதுமான நன்றியைக் காட்டவில்லை என்ற பொதுவான கருத்து இந்தியாவில் நிலவுகிறது. அதேநேரம், இந்தியா தனது சொந்த உத்தி சார்ந்த நலன்களுக்காக மட்டுமே தலையிட்டது என்றும், சுதந்திர வங்கதேசத்தை தன்னால் கட்டுப்படுத்தப்படும் நாடு போல அலட்சியமாக நடத்தியதாகவும் வங்கதேசத்தில் பரவலான நம்பிக்கை உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘தி டெய்லி ஸ்டார்’, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சீர்குலைந்து வருவது குறித்து டிசம்பர் 22 அன்று ஒரு தலையங்கம் எழுதியது.
அதில், “பல ஆண்டுகளாக இந்தியா, வங்கதேசம் இடையிலான உறவின் அடித்தளம், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு இந்தியா அளித்த அசைக்க முடியாத ஆதரவால் பலப்படுத்தப்பட்டது. தற்போது அந்த அடித்தளம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. இப்போது பரஸ்பர சந்தேகங்களால் நிறைந்த ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. வங்கதேசத்திற்கு எதிராகச் சதி செய்பவர்களுக்கு இந்தியா பாதுகாப்பான புகலிடமாக இருப்பதாக வங்கதேசம் கருதுகிறது. மறுபுறம், அண்டை நாடு பெரும்பான்மைவாத போக்குக்குள் சென்று கொண்டிருப்பதாக இந்தியா கருதுகிறது. சிறுபான்மையினர் பாதுகாப்பு விஷயத்தில் இடைக்கால அரசின் அணுகுமுறையை இந்தியா சந்தேகத்துடன் பார்க்கிறது மற்றும் வங்கதேசத்தின் உறுதிமொழிகள் போதுமானதாக இல்லை என்று நிராகரிக்கிறது.” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜியா வுர் ரஹ்மான் (Zia-ur-Rahman), காலிதா ஜியா (Khaleda Zia) போன்ற வங்கதேச தலைவர்கள் இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதால், ஆரம்பத்தில் இந்தியா ஷேக் ஹசீனாவை கட்டாயத்தின் பேரில் ஆதரித்ததாக நம்புகிறார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய ஆய்வுகளுக்கான மைய பேராசிரியர் மகேந்திர பி. லாமா.
“கிழக்கு பாகிஸ்தான் காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்தன. வங்கதேசத்தின் உருவாக்கம் ஒரு நம்பிக்கையைத் தந்தது. இந்த நம்பிக்கை ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஷேக் ஹசீனாவின் பதவிக்காலத்தில் உயிர்ப்புடன் இருந்தது. இருப்பினும், வங்கதேசத்தில் ஜியா வுர் ரஹ்மான், எர்ஷாத் ஆகியோரின் எழுச்சி இந்தியாவின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது. எனவே, ஷேக் ஹசீனாவையும் அவாமி லீக்கையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது,” என்கிறார் பேராசிரியர் லாமா.
“ஆனால், ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் தனது செல்வாக்கை இழந்தபோது, இந்தியா தனது கொள்கையை மாற்றியிருக்க வேண்டும். தேர்தலில் இந்தியா ஷேக் ஹசீனாவை ஆதரித்திருக்கக் கூடாது. சரிவு ஏற்படும் அபாயம் இருந்தபோதிலும், இந்தியா தனது அனைத்து நம்பிக்கைகளையும் அவாமி லீக் மீதே வைத்தது. வங்கதேசத்தில் மட்டுமல்ல, மாலத்தீவு மற்றும் நேபாளத்திலும் இதையே செய்தது.” என்கிறார் அவர்.
டிசம்பர் 25 அன்று, வங்கதேசத்தின் முன்னணி நாளிதழான ‘புரோதோம் ஆலோ’வில், ‘இந்தியா தனது அவாமி லீக் சார்பு நிலையைக் கடந்து நகருமா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது.
அதில் செல்வாக்கிழந்த ஆட்சியாளருடன் இந்தியாவின் நெருங்கிய உறவு, வங்கதேசத்தில் இந்திய எதிர்ப்பு உணர்வை மேலும் அதிகரித்தது. வெகுஜன இயக்கத்தின் மூலம் ஷேக் ஹசீனா அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, சூழல் இந்தியாவுக்கு பாதகமாக மாறியது, என கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கான வங்கதேச முன்னாள் தூதர் ஹுமாயூன் கபீர், புரோதோம் ஆலோவிடம் பேசுகையில், “வங்கதேசம், இந்தியா இடையே இவ்வளவு பெரிய அளவிலான சந்தேகத்தையும் அவநம்பிக்கையையும் நான் இதுவரை பார்த்ததில்லை. இரு அண்டை நாடுகளும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதால், இந்தியா எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, வங்கதேசத்துடனான உறவில் நம்பிக்கையை மீட்டெடுக்க முயற்சி எடுக்க வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
ஷேக் ஹசீனா அளவுக்கு இந்தியாவுடன் சுமூகமான உறவை கொண்டிராத ஜியா வுர் ரஹ்மானின் வங்கதேச தேசியவாத கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 25 அன்று லண்டனில் இருந்து வங்கதேசத்திற்குத் திரும்பினார். இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால், அவர் வங்கதேசத்தின் புதிய பிரதமராக வாய்ப்புள்ளது. வங்கதேச தேசியவாத கட்சி உடனான இந்தியாவின் உறவு என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இருப்பினும், அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்து, உதவி செய்வதாக உறுதியளித்தார். இந்தச் செயலை வங்கதேச தேசியவாத கட்சி வரவேற்றது குறிப்பிடத்தக்கது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு