காணொளி: விண்வெளிக்குச் சென்ற முதல் சக்கர நாற்காலி பயனர்
சக்கர நாற்காலி பயன்படுத்தும் ஜெர்மனியைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர் விண்வெளிக்கு சென்று திரும்பியுள்ளார். இதன் மூலம், விண்வெளிக்கு சென்ற உலகின் முதல் சக்கர நாற்காலி பயனர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார்.
விண்வெளி வீரராகும் கனவுடன் இருந்த மைக்கேலா பென்தாஸ் 7 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியதில் தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டது. இனிமேலும் தனது கனவு நனவாவது சாத்தியமா என்பதை அறிய, ஓய்வு பெற்ற ஒரு விண்வெளி பொறியாளரை அவர் இணையத்தில் தொடர்புகொண்டார்.
அந்த ஓய்வு பெற்ற விண்வெளி பொறியாளர், ஜெஃப் பெஸோஸ் நிறுவிய ப்ளூ ஆரிஜின் நிறுவனத்துடன் இணைந்து, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க 10 நிமிடப் பயணத்தை ஏற்பாடு செய்ய உதவினார்.
சனிக்கிழமை, பென்தாஸ் மற்றும் 5 பேர் டெக்சாஸிலிருந்து விண்கலத்தில் புறப்பட்டு, விண்வெளியின் எல்லை எனப்படும் கார்மான் கோட்டிற்கு சற்றே மேலான உயரத்தை அடைந்து பின் பூமிக்குத் திரும்பினர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு