17
காதலர் தினத்தையொட்டி, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் தம்பதி தங்களின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
கருப்பு-வெள்ளை நிறத்தில் எடுக்கப்பட்ட அந்த அழகான புகைப்படம் கடந்த ஆண்டு ஏப்ரலில் நார்ஃபோக்கின் அன்மர் பகுதியில் புகைப்படக் கலைஞர் ஜோஷ் ஷின்னர் எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் காதலர்கள் கொண்டாடும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, இந்த படம் தம்பதியரின் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது.
“Happy Valentine’s Day” என்ற வாசகத்துடன் இதய எமோஜியும் சேர்த்து அந்தப் பதிவு வெளியிடப்பட்டது. பொதுமக்கள் முன் காதலர் தினத்தை இவ்வாறு அவர்கள் குறிப்பது தொடர்ச்சியாக இது இரண்டாவது ஆண்டாகும்.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட புகைப்படம் 2024 செப்டம்பரில் வெளியான ஒரு வீடியோவிலிருந்து எடுக்கப்பட்டது. அப்போது, இளவரசி தனது புற்றுநோய் சிகிச்சை முடிந்ததை அறிவித்திருந்தார். அந்த படத்தில் இளவரசர் வில்லியம், கேத்தரினின் கன்னத்தில் முத்தமிடும் தருணம் இடம்பெற்றது.
மேலும், கடந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையில், வில்லியம்-கேத்தரின் தம்பதியரும் அவர்களின் குழந்தைகள் — Prince George, Princess Charlotte of Wales மற்றும் Prince Louis of Wales ஆகியோர் இணைந்த குடும்பப் புகைப்படமும் வெளியிடப்பட்டது. அது கேத்தரின் புற்றுநோய் சிகிச்சைக்குப் பிறகு பொது வாழ்க்கைக்குத் திரும்பி வருவதை சுட்டிக்காட்டும் முக்கிய தருணமாக பார்க்கப்பட்டது.
இதேவேளை, அமெரிக்காவில் மேகன், தன்னுடைய காதலர் தின புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் இளவரசர் ஹாரி, தங்கள் மகள் லிலிபெட்டை தூக்கிக்கொண்டு செல்வது இடம்பெற்றுள்ளது. குழந்தை சிவப்பு பலூன்களை பிடித்திருந்தது. “These two + Archie = my forever Valentines” என்று மேகன் குறிப்பிட்டிருந்தார்.
