பட மூலாதாரம், Getty Images
காத்தவராயன் என்ற நாட்டார் தெய்வம் குறித்து கிட்டத்தட்ட அனைவருக்குமே நன்கு தெரியும்.
ஆனால், இந்தக் காத்தவராயன் என்ற தெய்வமும் அதற்கான வழிபாட்டு முறையும் தொடங்கியதன் பின்னணியில் ஓர் ஆணவக்கொலை சம்பவம் இருக்கலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
காத்தவராயன் மட்டுமில்லை, தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டில் தவிர்க்க முடியாத அங்கமாக இருக்கும் நாட்டார் தெய்வங்கள் பலவற்றின் தோற்றுவாயாக ஆணவக்கொலை இருப்பதாக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான ஆ.சிவசுப்பிரமணியன் கூறுகிறார்.
நாட்டார் தெய்வ வழிபாடுகளுக்கும் சாதி ஆணவக்கொலைகளுக்கும் இருக்கும் தொடர்பு குறித்து எழுதியுள்ள அவர், “ஆணவக்கொலை மட்டுமல்ல, போர், குடும்பப் பெருமை, குற்றத்தைத் தடுத்தல் எனப் பல்வேறு காரணங்களின் விளைவாகக் கொல்லப்பட்டவர்களும் தெய்வங்களாக தமிழ்ப் பண்பாட்டில் வணங்கப்பட்டு வருகின்றனர்” என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல் துறையின் தலைவரும் பேராசிரியருமான ஆறு.ராமநாதன், “நாட்டார் தெய்வங்களின் பின்னணிக் கதைகள் பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டிருந்தாலும், அவற்றை நூறு சதவிகிதம் வரலாறாகக் கருத முடியாது. ஏனெனில், அவை அறிவியல்பூர்வமாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை,” என்கிறார்.
நாட்டார் தெய்வங்கள் என்றால் என்ன? தமிழ்ப் பண்பாட்டில் கருப்பசாமி, காத்தவராயன், புலைமாடன், மதுரை வீரன் என மக்கள் பல தலைமுறைகளாக வணங்கி வரும் தெய்வங்களுக்கும் சாதி ஆணவக் கொலைக்கும் என்ன தொடர்பு?
நாட்டார் தெய்வங்களின் தோற்றம்
பட மூலாதாரம், Getty Images
நாட்டார் தெய்வங்கள் தனித்துத் தெரியக் காரணம், அவற்றில் பெரும்பாலான தெய்வங்கள் முன்பு வாழ்ந்து மறைந்தவர்களாகவே இருப்பதுதான் என்கிறார் நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியர் சி. ஜ. செல்வராஜ்.
அவரது கூற்றுப்படி, தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக வழிபடப்படும் பல நாட்டுப்புற தெய்வங்கள் தொன்மங்களில் சொல்லப்படும் கடவுள்களாக இல்லாமல் தமிழ்ச் சமூக மக்களிடையே வாழ்ந்து, மறைந்தவர்களாகவே உள்ளனர்.
“இவர்களில் கன்னியாகவே வாழ்ந்து மறைந்தவர்கள், கர்ப்பத்திலேயே கரைந்தவர்கள், சிறு வயதிலேயே இறந்தவர்கள் ஆகியோர் தெய்வமாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான நாட்டுப்புற தெய்வங்கள், கொலையில் உதித்த தெய்வமாக மாறிய கதைகளும் உண்டு. அத்தகைய கொலைகளில் சாதிய அடக்குமுறை, சாதி மறுப்புக் காதல் போன்ற காரணங்களால் செய்யப்பட்ட நடந்தவற்றையும் குறிப்பிடலாம்” என்கிறார் சி. ஜ. செல்வராஜ்.
அப்படி ஆணவக்கொலைகளால் பலியானோர் எப்படி தெய்வமாக்கப்பட்டார்கள் என்பது குறித்து “ஆணவக் கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்” என்று நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், Ezhumalai
அவர் தனது நூலில், “சமூகத்தில் இருக்கும் பல்வேறு அடக்குமுறைகளின் காரணமாக ஆணவக் கொலை செய்யப்பட்டவர்களில் பலர், பிற்காலத்தில் நாட்டார் தெய்வங்களாக உருவெடுத்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆ.சிவசுப்பிரமணியன், “பெரும்பாலும் நாட்டார் தெய்வங்களின் கதைகளுக்குப் பல்வேறு வடிவங்கள் இருக்கும். ஒன்று கொலை செய்தவர்கள் தரப்பின் வரலாறு, இரண்டாவது கொலை செய்யப்பட்டவர்கள் தரப்பின் வரலாறு மற்றும் மூன்றாவதாக தங்களது சுயநினைவின்றி கொலைக்குத் துணை நின்றவர்கள் தரப்பின் வரலாறு,” என்று விளக்கினார்.
இதில், “கொலையுண்டவர்களைச் சார்ந்தவர்கள் அவர்களை தெய்வமாக்கி, கோவில் எழுப்பி வழிபடுவது மட்டுமின்றி, கொலை செய்தவர்களும் தாங்கள் கொன்றவர்களை வழிபடுவார்கள்” என்கிறார் அவர்.
“கொலை செய்தவர்கள், தாங்கள் செய்த கொலையால் தம் எதிர்காலச் சந்ததிகளுக்கு எந்தவிதப் பாவமும் சேர்ந்துவிடக் கூடாதே என்ற அச்சத்தில் இப்படியான பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கினர்” என்று அதுகுறித்து விளக்கினார் நாட்டுப்புறவியல் ஆய்வாளரான சி. ஜ. செல்வராஜ்.
காத்தவராயன் தெய்வமானது எப்படி?
“சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு காத்தவராயன் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துக் கரம்பிடிக்க முயன்றார். காவலர் படையின் தலைவனாக இருந்த பெண்ணின் தந்தை, இந்தச் செய்தியறிந்து காத்தவராயனை கழுவிலேற்றிக் கொலை செய்கிறார். இங்கு காத்தவராயன் என்ற சராசரி மனிதர், தனது சாதி மறுப்பு காதலின் விளைவாகக் கொல்லப்பட்ட பிறகு அவர் தனது மக்களால் தெய்வமாக்கப்பட்டு வழிபடப்படுகிறார்.” என்றார் பேராசிரியர் ராமநாதன்.
நாட்டார் தெய்வமான காத்தவராயனின் பின்னணிக் கதையை விவரித்த அவர் , “இங்கு காத்தவராயன் என்று ஒருவர் வாழ்ந்து வந்ததும், அவர் கதைகளில் குறிப்பிடப்படுவது போல சாதியின் பெயரால்தான் கொல்லப்பட்டார் என்பதும் உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் குறித்துச் சொல்லப்படும் கதைகளில் முற்றிலுமாக உண்மை உள்ளதாக நூறு சதவிகிதம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. காத்தவராயன் பெயரிலேயே பற்பல கதைகள் இருப்பதே அதற்குக் காரணம்,” என்கிறார்.
இப்படியாக ஒரே தெய்வம் குறித்துப் பற்பல கதைகள் தோன்றுவதன் பின்னணியை விளக்கிய போது, அதில் எப்படி குழுவின் பங்கு கலந்திருக்கிறது என்பதை விளக்கினார் செல்வராஜ்.
“ஒருவர் கொலை செய்யப்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்திய சமூகத்தில், சாதியும் அதற்கொரு காரணமாக இருக்கிறது. அப்படிக் கொலை செய்த பிறகு, கொலையுண்டவரை தெய்வமாக வணங்கும் மக்களின் அடுத்த தலைமுறைகள், அந்தக் கதைகளைப் பின்னாட்களில் தங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்வதும் உண்டு”.
மேலும் அதுகுறித்து விரிவாகப் பேசியபோது, “பொதுவாக, கொலையுண்ட ஒருவரை, அக்கொலையைச் செய்த குழுவினர் தெய்வமாக வணங்கத் தொடங்குகின்றனர். ஆனால், தலைமுறைகள் காலப்போக்கில் தங்கள் சமூகத்தின் அடையாளத்தை அந்த தெய்வத்துடன் சேர்த்து, கதையின் உள்ளடக்கத்தை மாற்றுவதும் இயல்பே. இதன்மூலம் எப்படியாவது, தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு, தாம் விரும்புவது போன்ற புனிதத்தைத் தந்துவிட முடியும்,” என்றார் அவர்.
இதோடு, காத்தவராயனை ஒப்பிட்டு விளக்கிய பேராசிரியர் ஆறு.ராமநாதன், “அடிப்படையில் தாழ்த்தப்பட்டவான காத்தவராயன், வேறு சாதிப் பெண்ணைக் காதலித்ததால் கொல்லப்படுகிறார். ஆனால், பின்னாளில் அவர் தேவலோகத்தைச் சேர்ந்தவர் எனவும், ஏதோவொரு காரணத்தால் தாழ்த்தப்பட்ட ஒருவரின் குடும்பத்தால் எடுத்து வளர்க்கப்பட்டதாகவும் திரிக்கப்பட்ட கதைகளும் சொல்லப்படுகின்றன. மேலும், தான் வேறு சாதிப் பெண்ணைக் காதலித்தது குற்றம் என்பதை உணர்ந்துகொண்டு, கடைசி நேரத்தில் காத்தவராயனே தன்னைக் கழுவேற்றச் சொன்னதாகவும் கதை சொல்லப்படுகிறது. இப்படியாகப் பல்வேறு திரிபுகள் நாட்டார் தெய்வங்களின் பின்னணியாக இன்று சொல்லப்படுகின்றன,” என்று கூறினார்.
நாட்டார் தெய்வமானோரின் கொலைக்கான காரணங்கள்
பட மூலாதாரம், Getty Images
மனிதர்கள் பல காரணங்களால் சக மனிதர்களால் கொல்லப்படுகின்றனர். ‘பூச்சியம்மன் வில்லுப்பாட்டு’ என்ற நூலின் முன்னுரையில், நாட்டார் தெய்வங்கள் மனிதர்களாக வாழ்ந்தபோது என்னென்ன காரணங்களுக்காகக் கொலை செய்யப்பட்டார்கள் என்பதை ஒன்பது விதமாக வகைப்படுத்தியுள்ளார் ஆ. சிவசுப்பிரமணியன்.
இந்தக் கொலைகளுக்கான காரணங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இவை அனைத்தையும் இணைக்கும் ஒரு கயிறாக இருப்பது ஆணவமும் அதிகார துஷ்பிரயோகமும்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வரையறுத்துள்ள கொலைகள்,
- நில உரிமையாளர்கள் உள்ளிட்ட அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுடனான பகையால் நடந்த கொலைகள்
- பொறாமை உணர்வால் நடந்த கொலைகள்
- நரபலி போன்ற மூடநம்பிக்கையால் நடந்த கொலைகள்
- குடும்ப பிரச்னைகளால் கொலைகள்
- நேரடியான போரில் கொலையுண்டவர்கள்
- வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, சில தவறுகளைச் செய்ததால் நடந்த கொலைகள்
- குற்றச் செயலில் ஈடுபடுபவர்களிடம் இருந்து மற்றவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் கொலையுண்டவர்கள்
- சாதி மீறிய காதல் மற்றும் திருமணத்தால் நடந்த கொலைகள்
- குடும்பத்தின் மானத்தைக் காப்பதாகக் கூறி நடத்தப்பட்ட கொலைகள்
- சாதி ஆணவக்கொலை
ஆணவக்கொலையால் உதித்த சாமிகள்
பட மூலாதாரம், Getty Images
‘நாட்டார் பெண் தெய்வ வழிபாட்டில் அரசியல் பொருளாதாரம்’ என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கோண்ட நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான முனைவர் ஏழுமலை, ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் தீப்பாஞ்சம்மன் (தீ பாய்ந்த அம்மன்) என்ற தெய்வ வழிபாடு குறித்து விளக்கினார்.
ராணிப்பேட்டையில் இருக்கும் கரிக்கல் என்ற கிராமத்தில் இந்தக் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலில், கரிக்கல், வீராமுத்தூர் ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த இருவேறு சமூகத்தினர் வழிபடுகின்றனர்.
“இங்குள்ள வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்து பார்த்தபோது, வீராமுத்தூர் பகுதியில் வாழ்ந்த பெண், கரிக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிற சாதி ஆண் ஒருவரைக் காதலித்துள்ளார். இதனால் அவர் தீயிட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதன் விளைவாகவே, அவருக்கு தீ பாய்ந்த அம்மன் எனப் பெயரிட்டு இரு சமூகங்களும் அவரை வழிபடத் தொடங்கினர். அதாவது, பெண்ணின் சொந்த சமூகம், அவர் காதலித்த ஆணின் சமூகம் என இரு தரப்பும் அந்தப் பெண்ணைத் தெய்வமாக வழிபடுகின்றனர். வழிபாட்டு முறைகள் மற்றும் சடங்குகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்,” என்று விளக்கினார் ஏழுமலை.
சாதிகளை கடந்து காதலிப்பவர்களும் சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்பவர்களும் கொலை செய்யப்படும் நிகழ்வுகள் இப்போதும் நடக்கின்றன. இதுபோன்ற கொலைகள் பல நூறு ஆண்டுகளாக நடந்து வந்திருக்கின்றன என்பதற்கான சாட்சியாக இத்தகைய நாட்டார் தெய்வங்கள் திகழ்வதாகக் கூறுகிறார் முனைவர் பகத் சிங்.
உடையாண்டியம்மா-சங்கரக்குட்டி, அழகம்மை-அழகப்பன், சாத்தான்-சாம்பான், ஒண்டி வீரன்-எர்ரம்மா என்பன போன்ற பல்வேறு பகுதிகளில் இருக்கும் நாட்டார் தெய்வங்கள் தோன்றக் காரணமாக இருந்தது சாதி மறுப்புக் காதல் மற்றும் அதன் விளைவாக நிகழ்த்தப்பட்ட ஆணவக் கொலைகள்தான் என்று தனது ‘ஆணவக்கொலை சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்’ நூலில் விவரிக்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.
இதுபோல நடந்த சில கொலைகளை அந்த நூலில் அவர் பட்டியலிட்டுள்ளார். அதற்கொரு சான்றாக இருப்பது பாப்பாத்தி – ஈனமுத்து என்ற நாட்டார் தெய்வங்கள்.
“சாதி மீறிய அவர்களது காதலை ஏற்க மறுத்த சமூகத்தினர் ஈனமுத்துவை கொலை செய்தனர். இதற்குப் பிறகு ஈனமுத்துவும் அவரின் காதலியும் தெய்வமாக வழிபடப்படுகின்றனர். அந்தப் பெண்ணின் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு அவரை பாப்பாத்தி அம்மன் என்று அழைப்பதுடன் அவருக்கு சர்க்கரைப் பொங்கல் போன்ற சைவ உணவையே படையலாகப் படைக்கின்றனர். ஆனால் ஈனமுத்துவுக்கு உயிர் பலி கொடுக்கும் பழக்கம் உள்ளது. இதுபோக, புலைமாடன் சாமி, குட்டிக் குலையறுத்தான், மங்களவடிவு என மேலும் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்பட்டவர்களும் தெய்வமாக வணங்கப்படும் வழக்கம் தமிழ்நாட்டில் காணப்படுகிறது” என்று தனது நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.
கொல்லப்பட்ட மனிதர்கள் தெய்வமாவது எப்படி?
பட மூலாதாரம், Ezhumalai
“உண்மையில் இவை மதத்தைத் தாண்டி வரலாற்றை எடுத்துரைக்கும் கதைகளாக உள்ளன,” என்கிறார் ஆ. சிவசுப்பிரமணியன்.
“ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மனிதர்களாக வாழ்ந்த நாட்டார் தெய்வங்களை சமயக் கடவுள்களோடு இணைத்து அவதார புருஷர்கள் ஆக்கிவிட்டனர். பெரும்பான்மையாக இந்தக் கோவில்களில் இருக்கும் வழிபாட்டு முறை எல்லாம், அவர்கள் கொலை செய்யப்பட்ட முறையுடன் தொடர்புடையதாக இருக்கும். நாட்டார் தெய்வங்கள் இறக்கும்போது அவர்கள் செய்த செயல்களை மீண்டும் வழிபாடுகள், சடங்குகளின் வாயிலாக நிகழ்த்திக் காட்டுவார்கள். படையலைப் பொறுத்தவரை கொல்லப்பட்டவர்கள் விரும்பி உண்டதைப் படையலாகப் போடுவர்” என்கிறார் அவர்.
‘நாட்டார் கதைகளும் வரலாறும் ஒன்றல்ல’
தமிழ்ச் சமூகத்தில் இப்படியாகப் பல்வேறு நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாகவும் கதைகளின் ஊடாகவும் சொல்லப்படும் விஷயங்களை வரலாறாகக் கருத முடியுமா? நாட்டார் தெய்வங்களின் கதைகளை வரலாறாக ஏற்றுக்கொள்ளலாமா?
இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன என்கிறார் பேராசிரியர் ஆறு.ராமநாதன்.
இப்படியாக நாட்டார் தெய்வங்களின் தோற்றத்திற்கான வரலாறாகப் பல கதைகள் சொல்லப்பட்டாலும், அவற்றில் நூறு சதவிகிதம் வரலாறு இல்லை என்கிறார் அவர்.
“அந்தக் கதைகளில் புனைவும் கலந்திருக்கும். அந்த மனிதர்கள் வாழ்ந்தது உண்மை, ஆணவக் கொலை செய்யப்பட்டது உண்மை. ஆனால், சில நேரங்களில் இந்தக் கதைகள் ஒரே மாதிரியான கதைப் போக்கைக் கொண்டிருக்கும். ஆகவே இவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும்” என்கிறார் அவர்.
பட மூலாதாரம், Getty Images
ஆறு. இராமநாதனின் கூற்றை ஆமோதிக்கும் வகையில் பேசிய சி. ஜ. செல்வராஜ், “நாட்டுப்புற வழக்காறுகளில் வாய்மொழியாகச் சொல்லப்படும் கதைகளில், காலப்போக்கில் அவரவர்களுக்கு ஏற்பப் பல துணைக் கதைகளை இணைத்துக் கொள்வதும் நடக்கும். ஆகையால் ஒரே தெய்வத்திற்குப் பல வட்டாரங்களில், பல வகையாகக் கதைகள் சொல்லப்படுவதும் உண்டு.
இந்தச் சூழலில் ஒரு குறிப்பிட்ட தெய்வம் குறித்துச் சொல்லப்படும் அனைத்து பழமரபுக் கதைகளையும், நாட்டுபுறக் கதைகளையும் தொகுத்து, அவற்றைப் பகுப்பாய்ந்து, அதிலுள்ள துணைக் கதைகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, திரிபுகளையும் கற்பனைகளையும் தனியாகப் பிரித்து ஆய்வு செய்யும்போது ஓரளவுக்கு உண்மையில் என்ன நடந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்” என்று விளக்கினார்.
இருப்பினும் அதை நூறு சதவிகிதம் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் ஆறு.ராமநாதன். அதாவது, “காத்தவராயனின் கதை உண்மையானது. ஆனால், நாட்டார் கதைகளில் சொல்லப்படுவது போலத் துல்லியமாக அப்படித்தான் நடந்திருக்கும் என உறுதியாகச் சொல்லிவிட முடியாது.”
ஆறு.ராமநாதனின் கூற்றுப்படி, இங்குதான் வரலாற்றில் இருந்து நாட்டார் கதைகள் வேறுபடுகின்றன.
“வரலாற்றை உண்மையென ஏற்றுக்கொள்ள, அதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் இருக்கின்றன. கல்வெட்டுகள், நாணயங்கள், பண்டங்கள், கட்டுமானங்கள் எனக் கிடைப்பவற்றை அறிவியல் உதவியுடன் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறோம். நாட்டார் கதைகளைப் பொறுத்தவரை அப்படிச் செய்வதற்கான வாய்ப்புகள் அனைத்து சூழல்களிலும் இருப்பதில்லை. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நபர் தெய்வமாக்கப்பட்டதன் பின்னணியில் இருக்கும் காரணத்தைத் தோராயமாக, ஓரளவுக்கு உறுதிப்படுத்த முடியும்,” என்று விளக்கினார் ஆறு.ராமநாதன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.