காந்தாரா திரைப்படம் வெளியான பிறகு, பூத வழிபாடு பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது.
சமீபத்தில், திருப்பதி திருமலை பிரம்மோற்சவத்தின் போது மாடவீதியில் சிலர் பூத வேடமணிந்து தெருக்களில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பூத வழிபாடு என்றால் என்ன? அது கடவுளை வழிபடுவதா அல்லது ஆவிகளை வழிபடுவதா? இந்த வழிபாட்டை யார், எங்கே செய்கிறார்கள் , ஏன் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
பூத வழிபாடு எங்கே நடைபெறுகிறது ?
பூத கோலா அல்லது தெய்வ கோலா என்பது துளுநாடு பகுதியைச் சேர்ந்த துளு பேசும் மக்களின் பாரம்பரிய வழிபாட்டு முறை.
இது தெற்கு கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா எல்லைப் பகுதிகளில் காணப்படுகிறது.
இந்த வழிபாடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் அரேபியக் கடலோரத்துக்கும் இடையே, குறிப்பாக தட்சிண கன்னடா, உடுப்பி (கர்நாடகா) மற்றும் காசர்கோடு (கேரளா) மாவட்டங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது.
துளு மக்களுடன் சேர்ந்து, சில மலையாளிகளும் இந்த வழக்கத்தை பின்பற்றுகிறார்கள்.
கேரளாவின் தெய்யம் என்ற கலை வடிவம் ஆவிகளை மையமாகக் கொண்டது, இது பூத கோலாவுடன் நெருக்கமான தொடர்புடையது.
இந்த வழிபாட்டு மரபு, கர்நாடகாவின் யட்சகான கலை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பூத கோலா என்றால் என்ன?
‘கோலா’ எனும் சொல் செயல்திறன், திருவிழா அல்லது ஒரு கலை வடிவம் என்பதைக் குறிக்கிறது.
‘பூதா’ என்பது தெலுங்கு மற்றும் இந்தியில் ‘பேய்’ என்று பொருள் கொண்டாலும், சமஸ்கிருதத்தில் இது ஆன்மா, பண்டைய, தெய்வீக, பஞ்சபூதம், தூய்மை, உண்மை போன்ற பல அர்த்தங்களை கொண்டுள்ளது.
பூத வழிபாடு மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது
- மூதாதையர் வழிபாடு
- இயற்கை சக்திகளை வணங்குதல்
- தெய்வங்களை வணங்குதல்
துளு மரபின்படி உலகம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது:
- கிராமப்புறம் – விவசாய நிலம்
- காடு – இயற்கை வனங்கள்
- பேய் (பூதம்) – கிராமத்தையும் காட்டையும் இணைக்கும், வழிபடப்படும் சக்தி
இந்த பூதங்களும் தெய்வங்களும் உள்ளூர் தலைவர்களின் அதிகாரத்தைத் தீர்மானிக்கின்றன. பக்தர்கள், கிராம பிரச்னைகள் மற்றும் தனிப்பட்ட சிக்கல்களை இந்த தெய்வங்களிடம் கூறுகிறார்கள். பூத கோலா நிகழ்வுகளில், இந்த தெய்வங்கள் தீர்ப்புகள் வழங்குவதாக நம்பப்படுகிறது.
இந்த வழிபாடு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது. மற்றவர்களுக்கு இது ஒரு மாறுவேடம் போல தோன்றலாம். ஆனால், துளு மக்களுக்கு, இது தெய்வீகமான வடிவம். அதனால், இதை வெளி உலகிற்கு காட்சிப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை.
மாறுவேடமாகக் காட்சிப்படுத்தப்படுவதையும் அவர்கள் ஏற்பதில்லை. பக்தியுடன் பயத்தையும் ஏற்படுத்துவதே இந்த வழிபாட்டின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
“ஒவ்வொரு பிரிவுகளுக்கும் வெவ்வேறு தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இயற்கை தெய்வங்கள், தெய்வங்களாக மாறிய மூதாதையர்கள் போன்ற பலர் உள்ளனர். இந்த வழிபாடு துளுநாட்டில் உள்ள மக்களின் உடல் மற்றும் மன நலனுக்காக செய்யப்படுகிறது” என்று ‘பேய்களை விரட்டுபவராக’ நம்பப்படும் தயானந்த ஜி கட்டல்சர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“பூதம்” என்ற வார்த்தைக்கு பல அர்த்தங்கள் இருந்தாலும், “தெய்வீக வழிபாடு” என்றே துளு மக்கள் பெரும்பாலும் குறிப்பிடுகிறார்கள். இந்த பகுதிகளில் பொதுவாக நவம்பர் முதல் மே மாதம் வரை பருவமழை பெய்கிறது.
வெவ்வேறு தெய்வங்கள்
இந்த வழிபாட்டில் பல வகையான தெய்வங்கள் உள்ளன.
கிராமங்கள், சில கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள், சாதிகள், மற்றும் குடும்பங்களுக்கு என தனித்தனி தெய்வங்கள் இருக்கின்றன.
மூதாதையர் தெய்வங்கள், விலங்கு தெய்வங்கள், கிராம தெய்வங்கள், வீரர்கள் மற்றும் வரலாற்று நபர்கள் தெய்வமாக வழிபடப்படுகிறார்கள்.
சமணர்களும் இந்த தெய்வத்தை வழிபடுகிறார்கள். ஆண் தலை மற்றும் பெண் உடல், பன்றி தலை மற்றும் பெண் உடல், பயிர்களைப் பாதுகாக்கும் கடவுள், கடல் தெய்வங்கள் மற்றும் வன தெய்வங்கள் போன்ற சிறப்பு வடிவங்களையும் அவர்கள் கொண்டுள்ளனர்.
இந்த தெய்வங்கள் தினசரி வீடுகளில் வழிபடப்படுவதில்லை. வருடாந்திர திருவிழாக்களில் இவை ஒன்றாக வழிபடப்படுகின்றன. ஆனால், அந்தந்த தெய்வங்களின் பொருட்கள் மற்றும் ஆபரணங்களை தொடர்ந்து வழிபடப்படுகின்றன.
இந்த தெய்வங்களில் மொத்தம் மூன்று வகைகள் உள்ளன.
1. இயற்கை சக்திகள் மற்றும் விலங்கு தெய்வங்கள்
உதாரணம்: பஞ்சுர்லி, குலிகா, மல்லராய, ஜுமாதி
2. வரலாற்று மற்றும் வீர மனிதர்கள்
ஒரு காலத்தில் பூமியில் வாழ்ந்து, பிறகு இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைப் பெற்றவர்கள். இவர்கள் பழங்குடி பாதுகாவலர்கள் என்றும் கருதப்படுகிறார்கள். உதாரணமாக, கொரகஜ்ஜா, கொரடப்பு, அன்னப்பா ஆகியோரைக் கூறலாம்.
3. மூதாதையர்கள் இறந்த மூதாதையர்கள்.
இந்து வேத மற்றும் புராண மரபுகளுடன் நேரடியாக தொடர்புடையதாக இல்லாவிட்டாலும், பல தெய்வங்களின் கதைகள் இந்து புராணங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளன.
உதாரணமாக, இங்குள்ள மக்கள் சிவபெருமான், பஞ்சுர்லி என்ற கடவுளை பூமிக்கு அனுப்பியதாக நம்புகிறார்கள்.
பஞ்சுர்லி என்பது பன்றியின் வடிவம். ஆனால், அது விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் உள்ள வராஹ அவதாரம் அல்ல. இதற்குப் பின்னால் ஒரு தனி கதை உள்ளது.
கைலாயத்தில், சிவனின் தோட்டத்தில் ஒரு காட்டுப்பன்றி இறக்கிறது. பார்வதி தேவி அதன் குட்டியை வளர்க்கிறார்.
ஆனால், அது தோட்டத்தை அழிக்கத் தொடங்குகிறது. சிவன் அதை கொல்ல முடிவு செய்கிறார். உடனே பார்வதி சிவனை தடுத்து நிறுத்தி, மன்னிப்பு கேட்கிறார்.
அதனால், அந்த பன்றியை பூமிக்கு அனுப்பி, அதை மனிதர்களால் வழிபடப்படும் காவல் தெய்வமாக மாற்றுகிறார் சிவன். இதுதான் பஞ்சுர்லி, மேலும் இது ‘சிவ சம்புதா’ எனவும் அழைக்கப்படுகிறது.
பஞ்சுர்லி தெய்வம், பயிர்களை காட்டுப்பன்றிகளிடமிருந்து பாதுகாக்க வழிபடப்படுகிறது.
மூதாதையர் வழிபாடா? ஆவிகள் வழிபாடா?
துளு நாட்டில் மூதாதையர் வழிபாடு என்பது ஒரு மிகப் பெரிய ஆன்மிக செயல்முறை. தங்கள் விருப்பங்கள் நிறைவேறாமல் இறந்த முன்னோர்களின் பெயரில் சிறப்பு சடங்குகள் செய்யப்படுகின்றன.
சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த மூதாதையர்கள் ‘பேய்களாக’ மாறுகிறார்கள். பின்னர், அவர்கள் பண்டைய தர்ம தெய்வங்களுடன் இணைந்து, ‘காலே’, ‘குலே’ போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
“பூதம் என்பது பேய் அல்ல, அனைத்து சடங்குகளையும் முடித்து தெய்வீக நிலையை அடைந்த மூதாதையர். அவர்களை வழிபடுவது பூத வழிபாடு எனப்படும்.
ஆனால், பஞ்சுர்லி, குலிகா, மைசந்தயா போன்ற இயற்கை சக்திகளை வணங்குவது பூத வழிபாடு அல்ல, அவை கடவுளை வணங்கும் வழிபாடுகள்.
எனவே, இந்த வழிபாட்டில் இயற்கை சக்திகள், மூதாதையர்கள், வரலாற்று மற்றும் வீர மனிதர்கள் வணங்கப்படுகிறார்கள். முழு பூத கலாசாரம் ஒரு கடவுளுக்காக மட்டுமல்ல. இது பல தெய்வங்களை உள்ளடக்கியது.” என்று தயானந்தா கூறுகிறார்.
மங்களூரில் வசிக்கும் பம்படா சாதியைச் சேர்ந்தவர் தயானந்தா. தபால் துறையில் இளநிலை ஊழியரான அவருக்கு தற்போது 50 வயதாகிறது. தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பம் இந்தச் சடங்குகளை செய்து வருகிறது.
சுருக்கமாகச் சொன்னால், இந்த வழிபாடு துளுநாட்டின் வரலாறு, கலாசாரம், ஆன்மீகம் மற்றும் சமூக ஒழுங்கு ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு செயல்முறை.
இந்த வழிபாட்டு முறை எப்போது தொடங்கியது?
இந்த வழிபாட்டு முறையின் தொடக்க காலம் குறித்து தெளிவான தகவல் இல்லை. ஆனால், சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய, 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில், இந்த வழிபாட்டின் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
யார் இந்த வழிபாட்டில் பங்கேற்கிறார்கள்?
நளிகே, பம்படா, பரவா போன்ற தலித் மக்களே இந்த பூத கோலா வழிபாட்டில் பங்கேற்கிறார்கள். ஆனால், இப்பகுதியில் உள்ள பிற சாதியினரும் இந்த தெய்வங்களை பக்தியுடன் வழிபடுகிறார்கள்.
வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த வழிபாடு, கிராமங்களிலும், உள்ளூர் கிராம தெய்வங்களின் கோயில்களிலும் செய்யப்படுகிறது.
இந்த வழிபாட்டில் ஈடுபடும் மக்கள், அரசுப் பணி, தொழிற்துறை என பல்வேறு தொழில்களில் பணிபுரிகின்றனர். இவற்றின் செலவுகளை சில உள்ளூர் நில உரிமையாளர்கள் ஏற்கும் பாரம்பரியமும் உள்ளது.
இந்தக் கலைஞர்கள் தயாராகும் போது, அந்தக் குடும்பத்தையோ, அல்லது சாதியையோ சேர்ந்த இளைஞர்கள் உதவுவதோடு மட்டுமல்லாமல், அந்தக் கலையைப் பார்த்து கற்றும் கொள்கிறார்கள்.
“இந்தக் கடவுளை வணங்கும் நாங்கள் அனைவரும் தலித்துகள். இங்குள்ள 16 சாதியினரும் இந்த வழிபாட்டில் பங்கேற்கிறார்கள், அவர்களுக்கென்று மரியாதையும் வழங்கப்படுகிறது. யாராவது நம்மை வணங்குகிறார்கள் என்றால், அது ஒரு தனிநபராக எங்களை வழிபடுவது அல்ல, கடவுளையே வணங்குவதாகும்” என்று தயானந்தா கூறினார்.
இதில் சாதி வாரியான சில விதிகள் உள்ளன.
“எங்கள் சாதியில், இதைச் செய்பவர்கள் கைகளில் முத்திரை, கால்களில் மோதிரம், தலையில் முடி, கைகளில் வளையல்கள் அணிவார்கள். சாப்பிடும்போது விளக்கு அணைந்துவிட்டால், மறுநாள் துறவு செய்து பூஜை செய்யும் வரை அரிசி சாப்பாடு சாப்பிட மாட்டார்கள். நோய்வாய்ப்பட்டவர்களை தொட மாட்டார்கள். பசு மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிட மாட்டார்கள். மற்ற இறைச்சிகளை சாப்பிடலாம். நான் தனிப்பட்ட முறையில் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். மதுவுக்கு தடை இல்லை, ஆனால் நான் அதை குடிப்பதில்லை” என்கிறார் தயானந்தா.
“பொதுவாக, அதற்கென்று பரம்பரை பரம்பரையாக சில கிராமங்கள் இருக்கும். அங்குள்ள குடும்பங்கள் மட்டுமே அதைச் செய்வார்கள். இது துளுநாட்டில் மட்டுமே செய்யப்பட வேண்டும். சிலர் இதை வெளியே செய்கிறார்கள். ஆனால் நான் அதைச் செய்வதில்லை. என் தந்தை இதை என்னிடம் சொன்னார்,” என்றும் அவர் பகிர்ந்து கொண்டார்.
இந்த வழிபாட்டில் பங்கேற்கும் சில சாதிகளுக்கென்று சில விதிகள் இருக்கின்றன. பண்டைய தாய்வழி சமூகத்தின் தடயங்கள் இன்னும் சில சாதிகளில் காணப்படுகின்றன. சில வாரிசுரிமைகள் தந்தைவழியிலிருந்து இல்லாமல், தாய்வழி மாமாவிடமிருந்து வருகின்றன.
இந்தச் சடங்குக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவாகிறது. உடைகள், அலங்காரங்கள், மற்றும் வேடங்கள் வாங்குவதற்கு அதிகப் பணம் செலவாகிறது. சிலரிடம் போதுமான பணம் இருக்கும், சில இடங்களில், இருக்காது. ஆனால், பணம் போதுமானதாக இல்லாவிட்டாலும், சடங்கு நிறைவேற்றப்படுகிறது.
“நாங்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் அல்ல. ஆன்மீகக் கலைஞர்கள். என் தந்தை ஒரு குடிசையில் வசித்து வந்தார். தினசரி கூலி வேலைக்குச் செல்வார். அவர் அதிகம் சம்பாதிக்கவில்லை. எனக்கு நன்றாகப் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் நான் பாரம்பரியத்தை கைவிடவில்லை,” என்கிறார் தயானந்தா.
வழிபாட்டு முறை
தெய்வத்தின் வேடத்தை அணிவதற்கு முன், அந்த நபர் அந்த தெய்வம் வழிபடப்படும் பகுதி அல்லது கோவிலுக்குச் செல்கிறார். அங்கு, துளு மொழியில் அந்த தெய்வத்தின் வரலாறு அல்லது கதையைப் பாடுகிறார். இந்த பாடல் பத்தனா என்று அழைக்கப்படுகிறது.
சில நேரங்களில், அவர் தானாகவே சிறிய டிரம்மை அடித்து, சிறிது நேரம் பாடி, பின்னர் தெய்வ வடிவம் பெறுகிறார்.
அவர்கள் தாங்கள் சித்தரிக்கும் தெய்வத்தின் வடிவத்திற்கு ஏற்ற முகக்கவசம் அல்லது அலங்காரத்தை அணிந்துகொள்கிறார்கள். உதாரணமாக, ராகேதேஸ்வரியின் வடிவத்தைச் சித்தரிக்கும் ஒருவர், ஆணாக இருந்தாலும் கூட, பல புடவைகள் அணிந்து பெண் வடிவம் பெறுகிறார்.
இது மிகவும் சிறப்பு வாய்ந்த செயல்முறை.
அவர்களே அந்த வேடத்துக்குத் தேவையான வண்ணங்களைத் தயாரிக்கிறார்கள். அவை அனைத்தும் இயற்கையான பொருட்களால் ஆனவை.
சில நேரங்களில், தெய்வத்துடன் தொடர்புடைய ஆபரணங்களையும் அணிகிறார்கள்.
அதேபோல் அவர்கள் வழக்கமாக சிவப்பு நிற ஆடைகளை அணிந்து முகங்களுக்கு மஞ்சள் வண்ணம் தீட்டுவார்கள். இறுதியாக, உள்ளூர் பாரம்பரியத்தின் படி, அவர்களுக்கு ஒரு வாள், ஒரு கொப்பரை மற்றும் ஒரு மணி ஆகியவை வழங்கப்படுகின்றன.
தென்னை அல்லது பனை ஓலைகளால் செய்யப்பட்ட வெள்ளி ஆபரணங்களும் உள்ளன. போக்கா மரங்களிலிருந்து வரும் பூக்கள் மற்றும் மூங்கிலும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வடிவத்தை அணிய சில மணிநேரங்கள் ஆகும்.
முக அலங்காரம் செய்வதற்கு மட்டும் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை ஆகும். உடை மற்றும் அலங்காரம் அவர்கள் அணிய விரும்பும் தெய்வத்தைப் பொறுத்து மாறுபடும்.
தெய்வம் அணியும் மிக முக்கியமான நகை சலங்கை.
அதை அணிந்த பிறகு, ஆன்மா அல்லது தெய்வம் அந்த நபரை ஆட்கொள்கிறது என நம்பப்படுகிறது.
முழு அவதாரமும் முடிந்த பிறகு, சலங்கை அவரது கைகளில் வைக்கப்படுகிறது. பின்னர் அவர் அதை தனது கணுக்காலில் கட்டுகிறார்.
நடனக் கலைஞர் நடனமாடத் தொடங்கியதும், ஒரு கடவுள் அல்லது பூதம் அவர்களை ஆட்கொண்டுவிடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்தக் கலைஞருக்கு இருபுறமும் இரண்டு உதவியாளர்கள் இருப்பர்.
பிறகு நடனத்தின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கும். அதில் சில வார்த்தைகள் சத்தமாக உச்சரிக்கப்படும். இந்த நடனம் சில மணி நேரம் நீடிக்கும். இது ஒரு பூனகம் (ஆன்மீக பரவசநிலை) போன்றது.
சில நேரங்களில் இறைச்சியையும், மற்ற நேரங்களில், கொட்டைகள், தேங்காய் துண்டுகள், வாழைப்பழங்கள், வெற்றிலை, பூக்கள் என பக்தர்கள் தெய்வத்திற்கு பல்வேறு பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.
‘நாங்கள் கூடுதல் பலத்துடன், கடவுளின் கட்டுப்பாட்டில் இருப்போம்..’
பூத கோலா நிகழ்வின் போது, தெய்வம் கிராம மக்களுடனும், கிராமத் தலைவருடனும் பேசுகிறது. பின்னர், ஒவ்வொரு பக்தரும் தங்கள் பிரச்னைகள், சிக்கல்கள் போன்றவற்றை தெய்வத்திடம் கூறுகிறார்கள்.
சில நேரங்களில், தெய்வம் தீர்ப்புகளையும் வழங்குகிறது. இந்த நிகழ்வு மாலை முதல் விடியும் வரை தொடர்கிறது.
“பூத கோலா நடக்கும் போது, நாங்கள் என்ன செய்கிறோம் என்பது ஓரளவு நினைவில் இருக்கும். ஆனால், ஏதோ ஒரு சக்தி எங்களை ஆட்கொள்கிறது. எனது உடல் எடை 60 கிலோ, ஆனால் நான் 100 கிலோ எடையுள்ள ஆபரணங்கள், அலங்காரங்கள் அணிந்து, 13 மணி நேரம், உணவு உண்ணாமல், இரவு முதல் காலை வரை இருப்பேன். அந்த சக்தி எங்கிருந்து வருகிறது? நாங்கள் கடவுள் அல்ல, ஆனால் அந்த நேரத்தில், கடவுளின் கட்டுப்பாட்டில், கூடுதல் சக்தியுடன் இருக்கிறோம். இயற்கையில் காற்று இருப்பது போல, அது கண்ணுக்குத் தெரியாத சக்தி. அந்த சக்தியால் தான் மக்களுக்கு நீதி வழங்க முடிகிறது,” என்கிறார் தயானந்தா.
“இது உடலை உறிஞ்சும் அனுபவத்தைப் போன்றது. அப்போது என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. அதிக எடையுடன், கையில் நெருப்புடன், முழுமையாக எங்களது கட்டுப்பாட்டில் இல்லாமல் செய்கிறோம். ஆபரணங்கள் பல கிலோ எடையுள்ளவை. பல்லாயிரக்கணக்கான ஆடைகள் கட்டப்பட்டிருக்கும். முக அலங்காரம் செய்துகொள்ள மட்டும் பல மணி நேரம் ஆகும். அதெல்லாம் எப்படி சாத்தியம்?
அந்த நேரத்தில், இயற்கையின் சக்தியாலும், கடவுளின் சக்தியாலும் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம்.
பின்னர் ஒரு லீலையாக, கொஞ்சம் கொஞ்சமாக என்ன நடக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்கிறோம். பக்தி பயத்துடன் வருகிறது. பயமின்றி பக்தி வராது. கடவுள் மீதான பயம் என்பது அறிவை நோக்கிய முதல் படி.
ஆனால், அந்த பயம் ஒரு ஆசிரியர் மீதான பயத்தைப் போன்றது.
அதற்கு உங்களை காயப்படுத்தும், அடிக்கும் அல்லது அழிக்கும் என்று அர்த்தமல்ல” என்கிறார் தயானந்தா.
காந்தாரா திரைப்படத்தின் தாக்கம் என்ன?
பட மூலாதாரம், X/Rishabh Shetty
மங்களூர் பகுதி மக்களிடம் காந்தாராவைப் பற்றி பரவலான கருத்துக்கள் காணப்படுகிறது.
ஒருபுறம், அந்தப் படத்தின் மூலம் தங்கள் பிராந்திய கலாசாரத்தைப் பற்றி உலகம் அறிந்ததில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள்.
மற்றொரு பக்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் பிற மேடைகளிலும், ரீல்ஸ்களிலும் தெய்வீக வடிவங்களை உடைகளாக பயன்படுத்துவது குறித்து அங்குள்ள மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பூதகோல நிகழ்ச்சியின் போது அங்கிருந்த இளைஞர்களிடம் காந்தாராவைப் பற்றிக் கேட்டபோது, அவர்களுடைய கருத்தும் இதேபோன்று தான் இருந்தது.
பொது மேடைகளில் இதை நிகழ்த்தக்கூடாது என்று அம்மக்கள் கூறுகிறார்கள்.
“பிற பகுதிகளுக்குச் சென்ற இந்தப் பகுதி மக்களுக்கு அவர்களுக்கென்று ஒரு செயல்முறை இருக்கிறது என்பதை காந்தாரா மூலம் நான் தெரிந்து கொண்டேன். அவர்கள் இப்போது அதை ஏற்றுக்கொள்கிறார்கள். அது நல்ல விஷயம் தான்.”
“ஆனால், இது பொது மேடைகளில் நிகழ்த்தப்படக்கூடாது. இது யட்சகானம், நாடகம் அல்லது திரைப்படம் போன்ற கலை வடிவம் அல்ல. இது கடவுளை வழிபடும் செயல்முறை. இதற்கென்று சில முறைகள் உள்ளன. இது ஒரு பொது நிகழ்ச்சி அல்ல, ஆன்மீகக் கலை.” என்கிறார் தயானந்தா.
“கல்லூரி மேடைகளில் இளைஞர்கள் இதுபோல செய்து ரீல்ஸ் எடுப்பது வருத்தமளிக்கிறது. பக்திக்கும் ஆர்வத்துக்கும் வித்தியாசம் உள்ளது. இளைஞர்கள் அந்த வித்தியாசத்தை அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கு இருப்பது பக்தி அல்ல, ஆர்வம். சிலர் இது உண்மையா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.”
“ஆனால் முனிவர், நதி, கடவுள் ஆகியோரின் தோற்றத்தை அறிய முயற்சிக்கக்கூடாது. அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். இப்போது சிலர் இதன் மீது ஆர்வத்துடனும் சிலர் பக்தியுடனும் வருகிறார்கள். வேறு சிலர் தங்கள் தொலைபேசிகளில் வீடியோ எடுக்க மட்டுமே வருகிறார்கள்,” என்று பகிர்ந்து கொண்டார் தயானந்தா.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு