திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், கஸ்தூரிபா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவருமான கவுசல்யாதேவி (95) வியாழக்கிழமை வயது மூப்புகாரணமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் உள்ள கஸ்தூரிபா மருத்துவமனையில் 1969-ம் ஆண்டு முதல் மகப்பேறு நல மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர் கவுசல்யாதேவி.
காந்திகிராம அறக்கட்டளை வாழ்நாள் நிர்வாக அறங்காவலராகவும் இருந்துள்ளார். காந்தியவாதியான இவர், எளிமையான வாழ்க்கையை இறுதிவரை வாழ்ந்தார். சுற்றுப்புற கிராம மக்களின் நம்பிக்கையை பெற்றதால், இவரிடம் பிரசவம் பார்க்க வந்தவர்கள் அதிகம்.
குறைந்தது பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பிரசவங்களையாவது பார்த்திருப்பார். குழந்தை பிறப்பு, குடும்ப கட்டுப்பாடு, குழந்தை பராமரிப்புகளில் இந்த மருத்துவமனை சிறந்து விளங்கியது. இந்த மருத்துவமனையில் குழந்தை தத்தெடுப்பு மையமும் உள்ளது. கஸ்தூரிபா மருத்துவமனை சேவையை சுற்றுப்புற கிராம மக்களுக்கு விரிவுபடுத்தி கிராம மக்களுக்கு எளிதில் மருத்துவ சேவை கிடைக்க பாடுபட்டார்.
இவர் தனது மருத்துவத்தால் கிராம மக்களின் அன்பை பெற்றவர். குடும்ப கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக 1979-ம் ஆண்டு கஸ்தூரிபா மருத்துவமனைக்கு இந்திய அளவில் விருதுகள் கிடைக்க காரணமாக இருந்துள்ளார். மருத்துவமனை மாநில அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது. காந்திகிராம பல்கலை. இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. மேலும் தன்னார்வ அமைப்புகள் இவரது சேவைகளை பாராட்டி பல விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.
மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்த இவர், தனது 95-ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எளிய வாழ்வை விரும்பி வாழ்ந்தவர். பணம் , புகழுக்காக இல்லாமல் சேவைக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவர். தன்னுடைய சமூக சேவைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அன்னை மருத்துவர் கவுசல்யா தேவியை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் காந்திகிராமம் அறக்கட்டளை நிர்வாகத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.