• Fri. Oct 3rd, 2025

24×7 Live News

Apdin News

காந்தி சிலைக்கு காவி ஆடை அணிவிப்பதா? – பாஜகவினருக்கு வைகோ கண்டனம் | Vaiko condemns BJP for dress gandhi statue in saffron

Byadmin

Oct 3, 2025


சென்னை: மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காந்தி சிலைக்கு பாஜகவினர் காவி ஆடை அணிவித்ததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மதுரையில் கடந்த 1959-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் நேருவால் தொடங்கப்பட்டது என்ற பெருமை கொண்டது காந்தி அருங்காட்சியகம். கடந்த 1921 செப்டம்பர் 21-ம் தேதி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த காந்தியடிகள், மதுரை மேலமாசி வீதியில் தங்கியிருந்தார்.

அப்போது மதுரையில் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் மேலாடை அணியக்கூட வசதி இல்லாமல் வறுமையில் இருந்ததை கண்டு மனம் வருந்திய அவர், ‘நாடு முழுமைக்கும் என்றைக்கு நம் மக்கள் மேலாடை அணியும் நிலை வருமோ, அன்று வரை நானும் மேலாடை அணிவதில்லை’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உறுதிமொழியை செப்டம்பர் 22-ம் தேதி எடுத்தார்.

காந்தியை கோட்சே சுட்டபோது காந்தியடிகள் தன் உடலில் அணிந்திருந்த ஆடை, மதுரை காந்தி அருங்காட்சியகத்துக்குத்தான் கொண்டு வரப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு அவரது பிறந்தநாள் அன்று பாஜகவினர் காவி ஆடை அணிவித்துள்ளனர்.

காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் விநாயக கோட்சே, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர் என்பதும், மதவாதக்கூட்டம் காந்தியின் கொலைக்கு திட்டம் வகுத்துக் கொடுத்ததும் வரலாற்றில் ரத்த அத்தியாயங் களாக எழுதப்பட்டுள்ளன. மதநல்லிணக்கத்துக்காக உயிரையே தியாகம் செய்த மகாத்மா காந்தியின் சிலையை தொடுவதற்கே அருகதை அற்ற கூட்டம் மதுரையில் அவரது சிலைக்கு காவி ஆடை அணிவித்தது கடும் கண்ட னத்துக்குரியது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



By admin