பட மூலாதாரம், Getty Images
-
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி ஹிந்தி
-
அவர்கள் பொதுவாக மகாத்மா காந்தி மற்றும் முகமது அலி ஜின்னா என்று அழைக்கப்படுகிறார்கள். இருவரையும் பற்றி எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இருவரும் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் கழித்தனர்.
சமீபத்தில், புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் லார்ட் மேக்நாத் தேசாய் எழுதிய ‘மோகன் & முகமது: காந்தி, ஜின்னா அண்ட் பிரிட்டிஷ் இந்தியாவின் முறிவு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
அதில், “இந்த இரண்டு ஆளுமைகளின் முதல் பெயர்களை நான் வேண்டுமென்றேதான் பயன்படுத்தினேன். இதை அவர்களை அவமதிக்கும் நோக்கத்தில் செய்யவில்லை. அவர்கள் அவ்வளவு பிரபலமாக இல்லாதபோது இருந்த அவர்களுடைய வாழ்வின் பகுதிகளைக் காட்டவே அப்படிப் பயன்படுத்தினேன்” என்று தேசாய் எழுதியுள்ளார்.
“இந்த இருவரும் நீண்ட காலமாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்தது மட்டுமின்றி, பல விஷயங்களில் ஒற்றுமைகளையும் கொண்டிருந்தனர் என்பது சிலருக்குத் தெரிந்திருக்கும்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருவரும் குஜராத்தின் கத்தியவார் பகுதியில் தங்கள் பூர்வீக வேர்களைக் கொண்ட குஜராத்தி பேசும் குடும்பங்களில் இருந்து வந்தவர்கள்.
மோகனின் தந்தை கரம்சந்த், போர்பந்தர் இளவரசரின் திவானாக இருந்தார். மோகனுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அவரது தந்தை ராஜ்கோட்டுக்கு குடிபெயர்ந்து அங்கு திவான் ஆனார்.
முகமதுவின் தாத்தா பூஞ்சாபாய், ராஜ்கோட்டை சேர்ந்தவர். குஜராத்தியில் “பூஞ்சாபாய்” என்ற பெயர் கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியலாம். ஏனெனில், அதன் அர்த்தம் “குப்பை”. ஆனால் குஜராத்தில் மட்டுமின்றி, உண்மையில் அந்த நேரத்தில் இந்தியா முழுவதும், குழந்தைகளுக்கு கண் திருஷ்டியை தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் அத்தகைய பெயர்கள் வழங்கப்பட்டன.
பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images
லண்டன் சென்ற மோகனும் முகமதுவும்
முகமது 1876ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று கராச்சியில் பிறந்தார். அவர் மோகனைவிட ஏழு வயது இளையவர். முகமதுவின் தந்தைக்கு ஏழு குழந்தைகள் இருந்தபோதிலும், அவரது உடன் பிறந்தவர்களில் மிகவும் பிரபலமானவராக இருந்தவர் அவரது தங்கை பாத்திமா. அவர்கள், முகமதுவின் வாழ்நாள் முழுவதும் அவருடன் இருந்தனர்.
மேக்நாத் தேசாய், “மோகன், முகமது இருவரும் 16 வயதில் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இருவரும் சட்டம் படிக்க லண்டனுக்கு சென்றனர். லிங்கன்ஸ் இன்னில் முகமது படிக்கும்போது, இன்னர் டெம்பிளில் மோகன் படித்தார். மோகன் லண்டன் சென்றபோது 19 வயதை எட்டவிருந்தார். முகமது 1891இல் லண்டனை அடைந்தபோது அவருக்கு 16 வயதுதான்” என்று எழுதியுள்ளார்.
மோகன் தனது குடும்ப நண்பர் மாவ்ஜி டேவின் ஆலோசனைப்படி லண்டனுக்கு அனுப்பப்பட்டார். அதேநேரத்தில் முகமது தனது தந்தையின் ஆங்கிலேயே நண்பர் சர் ஃபிரடெரிக் கிராஃப்ட் மூலம் லண்டன் சென்று படிக்கத் தூண்டப்பட்டார்.
மோகன், முகமது இருவரும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள். மோகனுக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. முகமதுவுக்கு 15 வயதில் திருமணம் நடந்தது.
பட மூலாதாரம், Getty Images
மோகனுக்கு முன்பே காங்கிரசில் சேர்ந்த முகமது
மோகனும் முகமதுவும் லண்டனில் தங்கியதை எப்போதும் ஓர் இனிமையான நினைவாகக் கொண்டிருந்தனர். பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியலில் அதிருப்தி அடைந்த பிறகு முகமது 1930களில் லண்டனுக்கு குடிபெயர்ந்தார்.
பின்னர் அவர் இந்திய அரசியலில் நுழையவில்லை என்றால், லண்டனிலேயே வாழ விரும்பியிருப்பேன் என்று கூறினார். முகமது தனது சட்டப் படிப்பை மூன்று ஆண்டுகளில் முடித்தார்.
ஹெக்டர் போலித்தோ தனது ‘ஜின்னா: பாகிஸ்தானின் படைப்பாளர்’ என்ற நூலில், “லண்டனில் தங்கியிருந்தபோது, ஜின்னாவும் நாடகத் துறையில் ஈடுபட்டார். அவர் ஒரு ஆங்கிலேயரை போல் உடையணியத் தொடங்கினார். அரசியல் விவாதங்களைக் காண அவர் அடிக்கடி ஹவுஸ் ஆஃப் காமன்ஸின் பார்வையாளர் பகுதிக்குச் சென்றார். தாதாபாய் நௌரோஜி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையை நிகழ்த்திய போது ஜின்னா அங்கு இருந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த நேரத்தில், அவர் லிபரல் கட்சியால் ஈர்க்கப்பட்டார். ஜோசப் சேம்பர்லெய்ன் அவரது நாயகனாக இருந்தார். லண்டனில் படித்த பிறகு, மோகன் தென்னாப்பிரிக்கா சென்றார். அதே நேரத்தில் முகமது வழக்கறிஞராகப் பணியாற்ற பம்பாய்க்கு திரும்பினார்.
லண்டனில் இருந்து திரும்பிய உடனேயே, இருவரும் தங்கள் பணிகளில் கணிசமான போராட்டங்களை எதிர்கொண்டனர். ஆரம்பத்தில் யாரும் அவர்களைத் தங்கள் வழக்குகளுக்காக அணுகவில்லை.
கடந்த 1905ஆம் ஆண்டு முகமது காங்கிரசில் உறுப்பினர் ஆனார். அங்கு கோபால கிருஷ்ண கோகலே, திலகர் போன்ற தலைவர்களைச் சந்தித்தார். அவர் திலகரை பிரதிநிதித்துவப்படுத்தி வழக்குகளில் வாதாடினார். வங்கப் பிரிவினை தொடர்பாக காங்கிரஸ் பிளவுபட்ட போது, அவர் மிதவாத பிரிவை ஆதரித்தார்.
அந்த நாட்களில், காங்கிரஸில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. 1896ஆம் ஆண்டில், மொத்தம் 709 உறுப்பினர்களில் 17 முஸ்லிம்கள் மட்டுமே இருந்தனர். ஜின்னா, காங்கிரசில் உறுப்பினராகி ஏழு ஆண்டுகளுக்கு, அதாவது 1913ஆம் ஆண்டு வரை முஸ்லிம் லீக்கில் உறுப்பினராகவில்லை.
முஸ்லிம் லீக்கில் உறுப்பினரான பிறகும், காங்கிரஸுடன் ஒத்துழைக்குமாறு லீக்கை அவர் வலியுறுத்தினார். தனது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையில் அவர் இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் வலுவான ஆதரவாளராக இருந்தார்.
பட மூலாதாரம், FRANCE/Gamma-Rapho via Getty Images
மோகன், முகமதுவின் முதல் சந்திப்பு
மோகன் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பிறகு 1915ஆம் ஆண்டில் இருவரும் முதல்முறையாகச் சந்தித்தனர்.
இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 16, 1914ஆம் தேதி லண்டனில் மோகன் கௌரவிக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் முகமது கலந்து கொண்டார். அந்த நேரத்தில் இருவருக்கும் இடையே நேரடி உரையாடல் நடக்கவில்லை.
பிரபல வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவருமான கே.எம்.முன்ஷி ஏற்பாடு செய்த கூட்டத்தில், ஆமதாபாத்தில் 1915ஆம் ஆண்டு அவர்கள் இருவரும் சந்தித்தனர். 1916இல் லக்னௌவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மோகனை அன்னி பெசன்டுடன் மேடையில் அமர்வதற்கு ஜின்னா அழைத்தார்.
ராமச்சந்திர குஹா தனது ‘காந்தி: உலகத்தை மாற்றிய ஆண்டுகள்’ என்ற புத்தகத்தில், “குஜராத் மாநில மாநாடு 1916 அக்டோபரில் ஆமதாபாத்தில் நடைபெற்ற போது, கூட்டத்திற்குத் தலைமையேற்க முகமதுவின் பெயரை மோகன் முன்மொழிந்தார். முகமதுவை பற்றி அவர் நமது காலத்தின் கற்றறிந்த முஸ்லிம் என்று கூறினார்.” என்று எழுதியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், குஜராத்தியில் உரையாற்றுமாறு முகமதுவை மோகன் கேட்டுக்கொண்டார். காந்தியின் வேண்டுகோளை ஏற்ற முகமது, தனது உடைந்த குஜராத்தி மொழியில் உரை நிகழ்த்தினார்.
பின்னர், காந்தி ஒரு நண்பருக்கு எழுதிய கடிதத்தில், “அன்றிலிருந்து ஜின்னா என்னை வெறுக்கத் தொடங்கினார்” என்று கூறினார்.
இருப்பினும், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு அவர்கள் ஒரே மேடையில் ஒன்றாகப் பணியாற்றினர். இந்தியா திரும்பியதும், மோகன் முதல் உலகப் போரில் போராடும் பிரிட்டிஷ் ராணுவத்தில் இந்திய வீரர்களைச் சேர்க்கும் பிரசாரத்தை தொடங்கினார்.
இந்தப் பிரசாரத்தில் முகமது அவரை ஆதரிக்கவில்லை. மோகனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் கைசர்-இ-ஹிந்த் என்ற பட்டத்தை வழங்கியது. ஆனால் 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பிறகு அதை அவர் திருப்பிக் கொடுத்தார்.
மோகன், முகமதுவின் பாதைகள், 1920களில் வேறுபடத் தொடங்கின. மோகன் காங்கிரஸின் மறுக்க முடியாத தலைவராக ஆனார். அதை சாதாரண இந்தியர்களின் கட்சியாக அவர் மாற்றினார்.
பட மூலாதாரம், Penguin Random House India
லண்டனில் இருந்து இந்தியா திரும்பிய முகமது
இங்கிருந்து முகமதுவுக்கும் மோகனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் தொடங்கின. மோகனை “மகாத்மா” என்று அழைக்க மறுத்து அவர் காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார்.
மோகன் காங்கிரஸின் தலைவராகவே இருந்தார். 1930களில் காங்கிரஸை விட்டு வெளியேறிய பிறகும், இந்தியா சுதந்திரம் அடையும் வரை காந்தியின் கருத்துதான் கட்சி விஷயங்களில் இறுதி வார்த்தையாகக் கருதப்பட்டது.
காங்கிரஸில் காந்தியின் ஆதிக்கத்தால் முகமது மிகவும் ஏமாற்றமடைந்து லண்டனுக்கு திரும்ப முடிவு செய்தார். அவர் ஒரு வழக்கறிஞராகத் தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார்.
கடந்த 1930 நவம்பரில் இந்தியா குறித்த முதல் வட்டமேசை மாநாடு லண்டனில் நடைபெற்ற போது, முகமது ஒரு முஸ்லிம் தலைவராக அழைக்கப்பட்டார். முழு இந்தியாவின் ஒரே பிரதிநிதியாக அழைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் காங்கிரஸ் பங்கேற்க மறுத்துவிட்டது.
இரண்டாவது வட்டமேசை மாநாடு 1931இல் நடந்தது. அதில் கலந்துகொள்ள மோகன் லண்டனுக்கு சென்றார். முகமது அதில் பங்கேற்கவில்லை. மூன்றாவது வட்டமேசை மாநாடும் லண்டனிலேயே நடைபெற்றது. அதில் இருவருமே பங்கேற்கவில்லை.
1935ஆம் ஆண்டு இந்தியாவில் இந்திய அரசு சட்டம் இயற்றப்பட்ட போது, ஜின்னா இந்தியா திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். 1937 தேர்தல்களில் அவர் முஸ்லிம்களை வழிநடத்தினார்.
முஸ்லிம் லீக் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவான இடங்களையே வென்றது. முஸ்லிம்களின் ஒரே பிரதிநிதி என்ற அதன் கூற்றுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. பல மாநிலங்களில் காங்கிரஸ் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. ஆனால், முஸ்லிம் லீக்குடன் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் யோசனையை அது நிராகரித்தது.
பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கும் யோசனையை முதன்முதலில் இங்குதான் முகமது உருவாக்கினார். அவர் லண்டனை விட்டு வெளியேறி பம்பாயில் உள்ள தனது மலபார் ஹில் வீட்டில் குடியேறினார்.
பட மூலாதாரம், Keystone/Getty Images
பாகிஸ்தான் என்ற கருத்தாக்கத்தின் பிறப்பு
மோகனும் முகமதுவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களிடையே இருந்த வேறுபாடுகளைத் தீர்த்துக்கொள்ள முயன்றனர். அதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறவில்லை. அவர்களின் கருத்து வேறுபாடு இந்தியா ஒரு தேசமா அல்லது இரண்டு தேசங்களா என்பதில் மையம் கொண்டிருந்தது.
“இந்தியா தெளிவாக ஓர் இந்து தேசமோ அல்லது முஸ்லிம் தேசமோ அல்ல. ஆனால், இரு சமூகங்களைச் சேர்ந்த மக்களும் அதில் வாழ்ந்தனர். இந்தியா பல நூற்றாண்டுகளாக இத்தகைய வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு என்றே காங்கிரசில் பலரும் நம்பினர். ஜவஹர்லால் நேருவும் மௌலானா ஆசாத்தும் இதை நம்பியவர்களில் அடங்குவர். ” என்று எழுதியுள்ளார் மேக்நாத் தேசாய்.
மறுபுறம், முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருப்பதால், அவர்களின் நலன்கள் இந்து பெரும்பான்மையினரின் மேலாதிக்கத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று முகமது கருதினார். வாக்களிப்பதன் மூலம் ஓர் அரசாங்கத்தை அமைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டால் முஸ்லிம்கள் ஆட்சிக்கு வரவே முடியாது என்று கருதிய அவர், அதனால் முஸ்லிம்களின் நலன்களைப் பாதுகாக்க ஒரு தனி நாட்டை நிறுவ வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
“முகமது ஒரு மதவாதி இல்லை. அவர் தொடர்ந்து மசூதிகளுக்கு சென்றதில்லை. ஆனால் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து அவர் அக்கறை கொண்டிருந்தார்,” என்று குறிப்பிட்டுள்ளார் தேசாய்.
மோகன் மற்றும் முகமதுவின் கடைசி குறிப்பிடத்தக்க சந்திப்பு 1944ஆம் ஆண்டு செப்டம்பரில் பம்பாயில் நடந்தது. “காங்கிரஸ், முஸ்லிம் லீக் இடையே ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டால், ஆங்கிலேயர்களுக்கு இந்தியாவை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்காது” என்று மோகன் நம்பினார்.
பட மூலாதாரம், Kulwant Roy/Topical Press Agency/Hulton Archive/Getty Images
மோகன் மற்றும் முகமதுவின் கடைசி சந்திப்பு
கடந்த 1944ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி முதல் சந்திப்புக்காக முகமதுவின் வீட்டிற்கு மோகன் வந்தார். சந்திப்பு தனது வீட்டிலேயே நடக்க வேண்டுமென்று முகமது வலியுறுத்தினார்.
பிரமோத் கபூர் தனது ‘காந்தி: ஒரு விளக்கப்பட வாழ்க்கை வரலாறு’ என்ற நூலில், “செப்டம்பர் 9 மற்றும் 27க்கு இடைப்பட்ட நாட்களில் பிர்லா ஹவுஸில் இருந்து அருகிலுள்ள ஜின்னாவின் வீட்டிற்கு காந்தி 14 முறை நடந்து சென்றார். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டார்கள். இதற்கிடையில், மோகன், முகமதுவை தனது மருத்துவரிடம் அனுப்பினார். இடையே ஈத் பண்டிகை வந்தபோது, மோகன் அவருக்கு கஞ்சி பாக்கெட்டுகளை அனுப்பினார். முகமது தனக்கு என்ன கொடுத்தார் என்று பத்திரிகையாளர்கள் மோகனிடம் கேட்டபோது, ‘பூக்கள் மட்டுமே’ என்று மோகன் பதிலளித்தார்” என்று எழுதியுள்ளார்.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு, முகமது ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில், “காந்தியை சமாதானப்படுத்தும் எனது நோக்கத்தில் நான் தோல்வியடைந்தேன் எனச் சொல்வதற்கு நான் வருத்தப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
வைஸ்ராய் லார்ட் வேவல் தனது நாட்குறிப்பில், “இந்த உரையாடலில் இருந்து நான் சிறப்பாக ஏதாவது வெளிவருமென்று எதிர்பார்த்தேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். நிச்சயமாக இரண்டு பெரிய மலைகள் சந்தித்தன. ஆனால் அதனால் எதுவும் நடக்கவில்லை. இது நிச்சயம் ஒரு தலைவராக காந்தியின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும். இது நிச்சயமாக ஜின்னாவின் ஆதரவாளர்களிடையே அவரது நிலைப்பாட்டை ஒத்த பார்வையை அதிகரிக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால், விவேகமான மனிதர் என்ற அவரது நற்பெயரை அது அதிகரிக்காது,” என்று எழுதினார்.
பட மூலாதாரம், Keystone-France/Gamma-Rapho via Getty Images
மோகன் மற்றும் முகமதுவின் மரணம்
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்த முறையான அறிவிப்பு 1947-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி இரவில் நடந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் ஜவஹர்லால் நேரு, முகமது அலி ஜின்னா, லார்ட் மவுன்ட்பேட்டன் ஆகியோர் இந்திய மக்களுக்கு வானொலியில் உரையாற்றினார்கள்.
ஸ்டான்லி வோல்பர்ட் தனது ‘ஜின்னா ஆஃப் பாகிஸ்தான்’ என்ற நூலில், “நேரு ஆற்றிய அன்றைய உரையின் கடைசி வார்த்தைகள், ஜெய் ஹிந்த். அதே நேரத்தில் ஜின்னா தனது உரையை ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்று கூறி முடித்தார். ஆனால் இதைச் சொல்லும்போது, ஜின்னாவின் தொனி, பாகிஸ்தான் இப்போது நம் கைகளில் உள்ளது எனச் சொல்வதைப் போல் இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 7, 1947 அன்று காலையில், முகமது டெல்லியில் இருந்து என்றென்றைக்குமாக விடைபெற்றார். தனது சகோதரியுடன், வைஸ்ராயின் டகோட்டா விமானத்தில் ஏறி டெல்லியில் இருந்து கராச்சியை அவர் அடைந்தார்.

“இவ்வாறு, லண்டனில் இருந்து படித்துவிட்டுத் திரும்பிய இரண்டு குஜராத்திகள், தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை, இந்தியாவின் சுயராஜ்ஜியத்திற்கான பிரசாரத்திற்காக அர்ப்பணித்தனர். ஆனால் இந்த முயற்சியில், அவர்கள் எதிர்பார்த்தது அவர்களுக்குக் கிடைக்கவில்லை,” என்று மேக்னாத் தேசாய் எழுதியுள்ளார்.
“காந்தி இந்தியாவின் தேசத் தந்தையாகக் கருதப்பட்டார். ஆனால் அவர் தனது வாழ்நாள் முழுவதும் அறிந்திருந்த தேசம் இதுவல்ல. ஜின்னாவும் ஆரம்பத்தில் எந்த சுதந்திரத்திற்காகப் போராடினாரோ அந்த நாட்டைப் பெறவில்லை. ஒரு புதிய நாட்டை உருவாக்குவதில் அவர் வெற்றி பெற்றார்.”
இந்தியா சுதந்திரம் அடைந்த 13 மாதங்களுக்குள், இரு தலைவர்களும் என்றென்றைக்குமாக கண்களை மூடிக்கொண்டனர்.
முதலில், ஜனவரி 30ஆம் தேதியன்று மோகன் படுகொலை செய்யப்பட்டார். செப்டம்பர் 11ஆம் தேதி முகமது இந்த உலகிலிருந்து விடைபெற்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு