பட மூலாதாரம், Getty Image/Roli Books
மகாத்மா காந்தி தனது வாழ்க்கையின் மிகப்பெரிய வருத்தமாக, இரண்டு பேரின் எண்ணங்களை மாற்ற முடியாததைத் தான் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் ஒருவர் முகமது அலி ஜின்னா, மற்றவர் அவரது மூத்த மகன் ஹரிலால் காந்தி.
காந்திக்கு 19 வயதானபோது ஹரிலால் பிறந்தார். குழந்தையாக இருந்த ஹரிலால், காந்தியுடன் மிகுந்த நெருக்கமாக இருந்தார்.
ஆனால், ஹரிலால் பிறந்த சில மாதங்களுக்குள், காந்தி தனது சட்டப் படிப்பிற்காக லண்டனுக்குப் புறப்பட்டார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தியா திரும்பினார்.
காந்தி அவர்களுடன் இல்லாத காலத்தில், அவரது குடும்பத்தினர், குறிப்பாக ஹரிலால், அவரது பாசத்தை மிகவும் இழந்தார்.
பின்னர், 1893-இல் காந்தி முதன்முறையாக தென்னாப்பிரிக்காவிற்குச் சென்றார். அங்கு மூன்று ஆண்டுகள் தனியாக வாழ்ந்த பிறகு, 1896-இல் இந்தியா திரும்பினார். திரும்பும்போது, தனது மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட முழு குடும்பத்தையும் தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றார்.
ஹரிலாலுக்கு அப்போது சுமார் எட்டு வயது, காந்திக்கு 27 வயது. கூடவே, தனது மருமகன் கோகுல்தாஸையும் முழு குடும்பத்துடன் அழைத்துச் சென்றார் காந்தி.
புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த ஹரிலால்
ஹரிலால் காந்தி, தனது தந்தை மகாத்மா காந்தியைப் போலவே உயர்கல்வி கற்க விரும்பினார். ஆனால், அவருக்குத் தேவையான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட விதம், அவரை மனதளவில் மிகுந்த அதிருப்திக்குள்ளாக்கியது.
“காந்தியின் பார்வையில் அவரது மகனும் மருமகனும் சமமானவர்கள். அவர்களைப் படிக்க அனுப்பும் முடிவு ஒரு விசித்திரமான முறையில் எடுக்கப்பட்டது. அவர் வீட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை மறைத்து வைத்தார். ஹரிலால் மற்றும் கோகுல்தாஸிடம் அதைத் தேடச் சொன்னார். யார் கண்டுபிடிக்கிறாரோ அவரைப் படிக்க அனுப்ப வேண்டும் என்று காந்தி முடிவு செய்தார். கோகுல்தாஸ் நாணயத்தைக் கண்டுபிடித்தார்”என பிரமோத் கபூர் தனது ‘Gandhi: An Illustrated Biography’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இந்தச் சம்பவம் ஒருமுறை மட்டும் அல்ல, இரண்டு முறை நடந்ததாகவும், இது ஹரிலாலுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாகவும் கபூர் குறிப்பிடுகிறார்.
இந்தச் சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஹரிலாலை மீண்டும் புறக்கணித்து, மற்றொரு மருமகன் சகன்லாலை உயர்கல்விக்காக லண்டனுக்கு அனுப்ப காந்தி முடிவு செய்தார்.
ஆனால், சகன்லால் நோய்வாய்ப்பட்டு படிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காந்தி ஒரு கட்டுரைப் போட்டியை ஏற்பாடு செய்து, அதில் வென்ற இளம் பார்சி மாணவர் சொராப்ஜி அடஜானியாவை லண்டனுக்கு அனுப்பினார்.
“காந்திக்கு தூய்மையான பிம்பம் மிக முக்கியமானதாக இருந்தது. உறவினர்களுக்கு எந்த சலுகையும் அளிக்காமல், நேர்மையான முறையில் முடிவுகளை எடுத்தார். ஆனால், இந்த அணுகுமுறைகள் ஹரிலாலின் மனதில் வலியை ஏற்படுத்தி, அவரது தந்தை மீது நீடித்த வெறுப்பை உருவாக்கின”என்றும் கபூர் பதிவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், ROLI BOOKS
தந்தைக்கு தெரிவிக்காமல் நடைபெற்ற திருமணம்
மெட்ரிகுலேஷன் தேர்வில் பிரெஞ்சு மொழியை பாடமாகப் படிக்க விரும்புவதாக ஆமதாபாத்திலிருந்து காந்திக்கு ஹரிலால் கடிதம் எழுதியபோது, காந்தி அவரை பிரெஞ்சு மொழிக்குப் பதிலாக சமஸ்கிருதம் படிக்குமாறு அறிவுறுத்தினார்.
இந்த அறிவுரை ஹரிலாலுக்குப் பிடிக்கவில்லை. அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் மெட்ரிகுலேஷன் தேர்வில் தோல்வியடைந்தார்.
படிப்பின் மீது விருப்பம் குறைந்து, சூதாட்டத்தில் ஈடுபடவும், மது அருந்தவும் தொடங்கினார்.
1906 மே 2ஆம் தேதி, 18 வயதில் ராஜ்கோட்டில் பிறந்த குலாபென் என்பவரை, தனது தந்தையிடம் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டார். ஹரிலால் திருமணம் செய்யும் நேரம் இது அல்ல என்று காந்தி கருதினார். அவர் ஹரிலால் தென்னாப்பிரிக்காவிற்கு வந்து தனது பணிகளில் உதவ வேண்டும் என்று விரும்பினார்.
இந்தத் திருமணம் குறித்து அறிந்த காந்தி, தனது மூத்த சகோதரர் லட்சுமிதாஸுக்கு ஒரு கடிதம் எழுதி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்தக் கடிதத்தில், “ஹரிலால் திருமணம் செய்தாலும் நல்லது, செய்யாவிட்டாலும் நல்லது. ஆனால் தற்போது, என்னைப் பொறுத்தவரை, அவன் என் மகன் அல்ல” என்று எழுதியிருந்தார்.
பட மூலாதாரம், Hulton Archive/Getty Images
தந்தை – மகன் கருத்து வேறுபாடுகள்
ஹரிலால் தனது மனைவியை மிகவும் நேசித்தார்.
“காந்திக்கு இது நல்ல விஷயமாகத் தெரியவில்லை, ஏனென்றால் பாலியல் உறவுகள் இனப்பெருக்கத்திற்கானவை மட்டுமே என்று அவர் நம்பினார். ஒரு உண்மையான சத்தியாக்கிரகி பிரம்மச்சரியத்தைப் பின்பற்ற வேண்டும்”என ராமச்சந்திர குஹா தனது ‘காந்தி: தி இயர்ஸ் தட் சேஞ்ச்ட் தி வேர்ல்ட்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“ஹரிலால் இதற்கு உடன்படவில்லை. ஒருவரை யோகியாக கட்டாயப்படுத்த முடியாது என்றும், அவர் விரும்பினால் மட்டுமே யோகியாக முடியும் என்றும் அவர் தனது தந்தையிடம் தெளிவாகக் கூறினார். காந்தி தனது குடும்பத்திற்குள் ஒரு பாரம்பரிய இந்து மூதாதையரைப் போல நடந்து கொண்டார். அவர் தனது மனைவி மற்றும் மகன்களின் விருப்பங்களை புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. அவர்கள் பெரியவர்களான பிறகும், அவர்கள் தனது வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார்.”
பட மூலாதாரம், Penguin Random House
காந்திக்கும் ஹரிலாலுக்கும் இடையேயான நீண்ட உரையாடல்
தொடக்கத்தில், ஹரிலால் காந்தி தனது தந்தை மகாத்மா காந்தியின் சமூக போராட்டங்களை முழுமையாக ஆதரித்தார். தென்னாப்பிரிக்காவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு ஒரே சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், ஹரிலால் எப்போதும் பொருளாதார ரீதியாக சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்பினார். வீட்டை விட்டு வெளியேறி இந்தியா திரும்ப அவர் முடிவு செய்தார்.
“வெளியேறுவதற்கு முன், நீங்கள் ஒரு நல்ல தந்தையாக நிரூபிக்கப்படவில்லை, எனவே குடும்பத்துடனான உறவை முறிக்கிறேன்’ என்று கூறியிருந்தார். ஆனால் காந்தியின் புகைப்படத்தை எடுத்துக்கொள்ள மறக்கவில்லை” என மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தி, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றான ‘மோகன்தாஸ்’-ல் குறிப்பிட்டுள்ளார்.
காந்தி ஜோகன்னஸ்பர்க் முழுவதும் அவரைத் தேட ஏற்பாடு செய்தார்.
ஹரிலால் மொசாம்பிக்கில் இருந்ததை அறிந்த காந்தி, அவரை அழைத்து வர தனது நெருங்கிய நண்பர் ஹெர்மன் கல்லென்பாக்கை அனுப்பினார். கல்லென்பாக் ஹரிலாலை மீண்டும் அழைத்து வந்தார்.
“தந்தையும் மகனும் இரவு முழுவதும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த உரையாடலில், ஹரிலால் தனது தந்தை, மகன்களை ஒருபோதும் புகழ்ந்து பேசவில்லை என்றும், உறவினர்களான மகன்லால் மற்றும் சாகன்லால் ஆகியோரை எப்போதும் ஆதரிப்பதாகவும் குற்றம் சாட்டினார்”என்றும் ராஜ்மோகன் காந்தி பதிவு செய்துள்ளார்.
பட மூலாதாரம், Viking/Penguin India
மது மற்றும் சூதாட்டப் பழக்கம்
அவரது வாழ்க்கை வரலாறான “மோகன்தாஸ்”இல் குறிப்பிட்டுள்ள படி, மறுநாள் ஹரிலால் இந்தியா திரும்புவதாக அறிவித்தார். மனம் உடைந்த காந்தி தனது மூத்த மகனைக் கட்டிப்பிடித்து, “உங்கள் தந்தை உங்களுக்கு ஏதாவது தீங்கு செய்ததாக நீங்கள் நினைத்தால் மன்னித்து விடுங்கள்” என்று கூறினார்.
அதன்பிறகு காந்தியும், அவரது மகனும் ஜனவரி 1915 வரை மீண்டும் சந்திக்கவில்லை.
இந்தியா திரும்பிய ஒரு வருடம் கழித்து, காந்தி தனது இளைய மகன் மணிலால், ஹரிலாலுக்கு ஆசிரமத்தின் பணத்தில் சிலவற்றை ஒரு தொழிலை நடத்துவதற்காகக் கடனாகக் கொடுத்ததை அறிந்தார். இதனால் காந்தி மிகவும் கோபமடைந்து உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார்.
கஸ்தூரிபாவும் அவரது இளைய மகன் தேவதாஸும் அவரை அவ்வாறு செய்ய வேண்டாம் என்று சமாதானப்படுத்த மிகவும் முயன்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஹரிலாலின் மனைவி திடீரென இறந்தார்.
காந்தி அவரை மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கவில்லை. அவரது மனைவி இறந்த பிறகு, ஹரிலாலின் வாழ்க்கை மாறியது. அவர் குடித்துவிட்டு சூதாடத் தொடங்கினார்.
வியாபாரம் செய்ய அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. காந்தியின் மகன் கடன் வாங்கும் பழக்கம் குறித்தும், கடனைத் திருப்பிச் செலுத்தக் கோருவது குறித்தும் பலர் காந்திக்குக் கடிதம் எழுதினர்.
பின்னர், ஹரிலால் கோத்ரெஜ் சோப்பின் விற்பனையாளராக வெற்றி பெற்றார்.
ஏபி கோத்ரேஜ் , அவரது வேலை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகும், ஹரிலாலுக்கு சிறிது பணத்தை அனுப்பிக் கொண்டே இருந்தார்.
காந்தி எழுதிய கடிதம்
1925ஆம் ஆண்டு, காந்தி தனது மகனுடனான உறவைப் பற்றி முதன்முறையாக ஒரு திறந்த கடிதத்தில் பேசினார். “ஹரிலாலின் வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத பல விஷயங்கள் உள்ளன, ஆனால் அவரிடம் தவறுகள் இருந்தபோதிலும் நான் அவரை நேசிக்கிறேன்”என அதில் அவர் எழுதினார்.
1935ஆம் ஆண்டு, தனது மனைவி இறந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, ஹரிலால் ஒரு ஜெர்மன் யூதப் பெண்ணான மார்கரெட் ஸ்பீகலை காதலித்தார்.
அவர் மகாத்மா காந்தியின் நெருங்கிய தோழி. அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினர், ஆனால் காந்தி அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.
“நான் எப்போதும் உடலுறவில் இருந்து விலகுவதை ஆதரித்து வருகிறேன். பிறகு நான் எப்படி உங்களை அவ்வாறு செய்ய ஊக்குவிக்க முடியும்?”என்று ஹரிலாலுக்கு எழுதிய கடிதத்தில் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விஷயத்தில் காந்தி, ஹரிலால் மற்றும் மார்கரெட் ஸ்பீகல் இடையேயான கடிதப் போக்குவரத்து பற்றிய எந்தப் பதிவும் இல்லை, ஆனால் இந்த உறவு அடுத்தக்கட்டத்துக்குச் செல்ல முடியவில்லை என்பதில் சந்தேகமில்லை.
காந்தி தனது மகனின் குடிப்பழக்கம் பற்றியும் பிற பழக்கங்களைப் பற்றியும் அறிந்திருந்தார். அவர் ஹரிலாலுக்கு கடிதம் எழுதி, “பசியால் இறந்தாலும் பிச்சை எடுக்காதே. தாகம் அதிகமாக இருந்தாலும் குடிக்காதே” என்று எச்சரித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு மாறிய ஹரிலால்
ஹரிலாலின் வாழ்க்கை வரலாறான ‘ஹரிலால் காந்தி: எ லைஃப்’-ல், ஹரிலாலின் மருமகள் சரஸ்வதி காந்தி கூறியதை சிபி தலால் மேற்கோள் காட்டுகிறார்.
“என் மாமனார் மிகவும் நகைச்சுவை உணர்வுள்ளவர், தாராள மனப்பான்மை கொண்டவர் மற்றும் விருந்தோம்பல் உள்ளவர். அவர் எங்களுடன் ஆறு மாதங்கள் வாழ்ந்தார்.
பின்னர் அவர் தனது தந்தைக்கு எழுதிய கடைசி கடிதத்தை ‘என் தந்தைக்கு எனது புகார்கள்’ என்று தலைப்பிட்டு எழுதினார். இந்த கடிதத்தை அவரால் முடிக்க முடியவில்லை”.
ஏப்ரல் 1936 இல், ஹரிலால் தனது தந்தை மற்றும் தாயார் கஸ்தூரிபாவை நாக்பூரில் சந்தித்தார். அவர்கள் தொழிலை நடத்துவதற்கு காந்தியிடம் கொஞ்சம் பணம் கேட்டார்கள். காந்தி மறுத்துவிட்டார். இது ஹரிலாலுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, அவரை மத மாற்றம் செய்யும் முடிவிற்கு அழைத்துச் சென்றதாகக் கருதப்படுகிறது.
மே 29, 1936 அன்று, பம்பாயில் (இப்போது மும்பை) உள்ள ஜமா மசூதியில், அவர் இஸ்லாத்திற்கு மாறியதாகக் கூறி அப்துல்லா என்ற புதிய பெயரையும் அறிவித்தார். இந்த அறிவிப்பு மகாத்மா காந்திக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவரது தாயார் கஸ்தூரிபா, இந்த நிகழ்வால் மிக ஆழமாக பாதிக்கப்பட்டார்.
பட மூலாதாரம், Dinodia Photos/Getty Images
மீண்டும் இந்து மதத்திற்கு மாறிய ஹரிலால்
கஸ்தூரிபா ஹரிலாலின் மகள் ராமிக்கு கடிதம் எழுதி, “நான் மிகவும் வேதனையடைந்துள்ளேன், ஆனால் என்னால் என்ன செய்ய முடியும்? உண்மையில், நான் மிகவும் வெட்கப்படுகிறேன். எங்கள் நகைகளில் ஒன்றை இழந்துவிட்டோம். அந்த நகை இப்போது இஸ்லாமியர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது” என்று எழுதினார்.
ஜூன் 6, 1936 அன்று வெளியான ஹரிஜன் இதழில் காந்தி ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார், அதில், “இந்த மதமாற்றம், பிற தாக்கங்களின் விளைவாக இல்லாமல் இதயத்திலிருந்து நடந்திருந்தால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அவர் அப்துல்லா என்று அழைக்கப்படுகிறாரா அல்லது ஹரிலால் என்று அழைக்கப்படுகிறாரா என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. இரண்டு பெயர்களும் கடவுளைக் குறிக்கும் என்பதால், எல்லா வகையிலும் அவர் கடவுள் பக்தர்.” என்று எழுதியிருந்தார்.
ஆனால் கஸ்தூரிபா தனது ஏமாற்றத்தை மறைக்க முயற்சிக்கவில்லை.
“நான் உயிர் வாழ்வது கூட மிகவும் கடினமாகிவிட்டது. உங்கள் பெற்றோரின் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் நீங்கள் எவ்வளவு வலியை ஏற்படுத்துகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். உங்கள் தந்தை இதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை, ஆனால் இந்த அதிர்ச்சி அவரது இதயத்தை துண்டுதுண்டாக கிழித்துவிட்டது. கடவுள் அவருக்கு மனவலிமையை அளித்துள்ளார். ஆனால் நான் ஒரு பலவீனமான வயதான பெண்மணி, இந்த மன வேதனையைத் தாங்கும் நிலையில் நான் இல்லை. உங்கள் தந்தை உங்களை மன்னித்துவிட்டார், ஆனால் கடவுள் இந்த செயலை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்” என்று தனது மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இந்த மதமாற்றம் நீண்ட காலம் நிலைக்கவில்லை. அந்த ஆண்டின் இறுதிக்குள், ஹரிலால் ஆரிய சமாஜ சடங்குகளின்படி மீண்டும் இந்து மதத்திற்கு மாறினார். தனது பெயரையும் ‘ஹிராலால்’ என்று மாற்றிக்கொண்டார்.
‘தாய் கஸ்தூரிபாவுக்கு கிடைத்த வெற்றி’
ஒரு முறை, மகாத்மா காந்தியும் கஸ்தூரிபா காந்தியும் காட்னி ரயில் நிலையம் வழியாக பயணித்துக் கொண்டிருந்தார்கள். இந்த தகவலை அறிந்த ஹரிலால், தனது பெற்றோரை ஒரு பார்வையாவது காண வேண்டும் என்ற ஆவலுடன் ரயில்நிலையத்திற்கு விரைந்தார்.
“ஹரிலால் கட்னி நிலையத்தை அடைந்தார், அங்கு அனைவரும் மகாத்மா காந்தியைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், ‘கஸ்தூரிபா மாதா கீ ஜெய்’ என்று கூச்சலிட்ட ஒரே நபர் ஹரிலால்தான்” என்று பிரமோத் கபூர் எழுதியுள்ளார்.
தன்னுடைய பெயரைக் கேட்ட கஸ்தூரிபா, குரல் வந்த திசையைப் பார்த்ததும், தன் மகன் ஹரிலாலை பார்த்து திகைத்துப் போனார்.
ஹரிலால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து, ‘பா, நான் இதை உனக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்றார்.
இதைக் கேட்ட காந்தி, ‘எனக்கும் ஏதாவது கொண்டு வந்திருக்கிறீர்களா?’ என்றார்.
“இல்லை, இது பாவுக்கானது” என்று ஹரிலால் பதிலளித்தார்.
ரயில் புறப்பட்டதும், “பா, நீங்கள் இந்த ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவீர்கள்” என்று தனது மகன் சொல்வதை கஸ்தூரிபா கேட்டார்.
பட மூலாதாரம், Universal History Archive/Universal Images Group via Getty Images
கஸ்தூரிபாவுடனான கடைசி சந்திப்பு
1944 வாக்கில், கஸ்தூரிபாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவர் தனது மூத்த மகனைப் பார்க்க வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
அவர் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு, ஹரிலால் புனேவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் அவரைச் சந்தித்தார். கஸ்தூரிபா இறப்பதற்கு ஒரு நாள் முன்பு, ஹரிலால் மீண்டும் அவரைச் சந்தித்தார்.
ஆனால், ஹரிலால் அந்த நேரத்தில் குடிபோதையில் இருந்தார். கஸ்தூரிபா அவரது நிலையைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டார். பின்னர் கஸ்தூரிபா இறந்தபோது ஹரிலால் உடனிருந்தார்.
பட மூலாதாரம், ROLI BOOKS
ஹரிலாலின் இறப்பு
ஜனவரி 31, 1948 அன்று, நாதுராம் கோட்சே மகாத்மா காந்தியைக் கொன்றார். இந்து மரபின்படி, மூத்த மகன் தான் இறுதிச் சடங்கை செய்ய வேண்டும்.
ஆனால், ஹரிலால் இல்லாத காரணத்தால், காந்தியின் இரண்டாவது மகன் ராம்தாஸ் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
இந்த நிகழ்வைச் சுற்றி வரலாற்றாசிரியர்கள் மாறுபட்ட தகவல்களை வழங்குகின்றனர்.
காந்தி இறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு, ஹரிலால் தனது சகோதரர் தேவதாஸ் காந்தியின் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சிலர் இதை எதிர்க்கின்றனர்.
காந்தி படுகொலை செய்யப்பட்ட செய்தி இந்தியா முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. ஹரிலாலுக்கு இது தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
காந்தி குடும்ப உறுப்பினர்கள் ஹரிலால் மீது கோபமாக இருந்தாலும், தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தனர்.
அப்படியென்றால், காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளமுடியாத அளவுக்கு அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாரா, அல்லது அவர் தன் தந்தையின் மீதுள்ள கோபத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லையா? என்ற கேள்வி எழுகிறது.
ஆனால் இந்த இரண்டுமே அதற்கான காரணமாகத் தெரியவில்லை.
மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ராபர்ட் பெய்ன், தனது ‘தி லைஃப் அண்ட் டெத் ஆஃப் மகாத்மா காந்தி’ என்ற புத்தகத்தில், “காந்தியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மகன்களில் அவரது மூத்த மகன் ஹரிலாலும் ஒருவர். காசநோயால் பாதிக்கப்பட்டு மெலிந்த ஹரிலால், அன்று மாலை கூடியிருந்த கூட்டத்தில் இருந்தார். அங்கு யாரும் அவரை அடையாளம் காணவில்லை. அவர் அன்றிரவு தனது தம்பி தேவதாஸ் காந்தியின் வீட்டில் தங்கியிருந்தார்” என்று பதிவு செய்துள்ளார்.
காந்தி இறந்த ஐந்து மாதங்களுக்குள், ஜூன் 18, 1948 அன்று, ஹரிலால் காந்தியும் பம்பாயில் மரணமடைந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.