படக்குறிப்பு, சாலையோர வடிகாலில் திரவத்தைக் கொட்டுவது சட்டவிரோதம் என்று அமலாக்க அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக பர்சு யெசிலியர்ட் தெரிவித்தார்.கட்டுரை தகவல்
தென்மேற்கு லண்டன் கவுன்சில் ஒன்று, தனது காபியின் மிச்சத்தை வடிகாலில் கொட்டியதற்காக ஒரு பெண்ணுக்கு விதிக்கப்பட்ட 150 பவுண்டு (ரூ.17,527) அபராதத்தைத் திரும்பப் பெறுவதாக முடிவெடுத்துள்ளது.
கியூவில் வசிக்கும் பர்சு யெசிலியர்ட் என்பவர், தான் வேலைக்குச் செல்ல வேண்டிய பேருந்தில் காபியைக் கொட்டிவிடாமல் தவிர்க்க, மீண்டும் பயன்படுத்தக்கூடிய கோப்பையில் இருந்து ஒரு சிறிய அளவு காபியை வடிகாலில் கொட்டியபோது, தான் பொறுப்புடன் நடந்து கொள்வதாக நினைத்ததாகக் கூறினார்.
ரிச்மண்ட் நிலையத்திற்கு அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் மூன்று அமலாக்க அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தினர்.
‘சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1990’ பிரிவு 33-ன் கீழ் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்தச் சட்டம், சாலை வடிகால்களில் திரவங்களைக் கொட்டுவது உட்பட, நிலம் அல்லது நீரை மாசுப்படுத்தும் வகையில் கழிவுகளை வைப்பது அல்லது அப்புறப்படுத்துவது ஒரு குற்றம் என்று கூறுகிறது.
ரிச்மண்ட்-அப்பான்-தேம்ஸ் கவுன்சில் இப்போது அபராதத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறியுள்ளது. ஏனெனில், யெசிலியர்ட்டின் முறையீடு “வெற்றி பெற்றிருக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளது.
இந்த விதிமீறல் “சிறிய அளவிலானது” என்றும், யெசிலியர்ட் “அதை மீண்டும் செய்யமாட்டேன் என்று ஏற்றுக்கொண்டுள்ளார்” என்றும் கவுன்சில் கூறியுள்ளது.
கவுன்சில் அபராதத்தை ரத்து செய்வதற்கு முன், யெசிலியர்ட் பிபிசி நியூஸிடம், தனது பேருந்து வருவதைக் கவனித்ததாகவும், அதனால் “மிகவும் சிறிய அளவு காபியை” கொட்டிவிட்டதாகவும் கூறினார்.
“நான் திரும்பிப் பார்த்தவுடனே, அமலாக்க அதிகாரிகள் மூன்று பேர் என்னைத் துரத்தி வந்து, உடனடியாக என்னை நிறுத்தினார்கள்.” என்றார்.
பேருந்தில் ஏதோ பிரச்னை குறித்துப் பேசப் போகிறார்கள் என்று தான் நினைத்ததாகவும், சாலையோர வடிகாலில் திரவத்தைக் கொட்டுவது சட்டவிரோதமானது என்று தனக்குத் தெரியாது என்றும் யெசிலியர்ட் கூறினார்.
இந்தச் சந்திப்பு மிகவும் பயமுறுத்துவதாக இருந்தது என்றும், வேலைக்குச் சென்றபோது தனக்கு “நடுக்கமாக” இருந்ததாகவும் அவர் கூறினார்.
“இது ஒரு அதிர்ச்சியாக இருந்தது,” என்று அவர் கூறினார்.
இந்தச் சட்டம் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை செய்யும் பலகைகள் அல்லது தகவல் ஏதேனும் இருக்கிறதா என்று தான் அமலாக்க அதிகாரிகளிடம் கேட்டதாகவும், ஆனால் எந்தப் பதிலும் வரவில்லை என்றும் யெசிலியர்ட் மேலும் கூறினார்.
ரிச்மண்ட் கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், இந்தச் சம்பவத்தின்போது அதிகாரிகள் உடலில் அணிந்திருந்த கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததாகவும், அமலாக்க அதிகாரிகள் பொருத்தமாகச் செயல்பட்டதாகக் கவுன்சில் திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரிச்மண்டின் நீர்வழிகளைப் பாதுகாப்பதற்குத் தாங்கள் “உறுதியுடன்” இருப்பதாகக் கவுன்சில் கூறியது.
மீதமுள்ள காபியை என்ன செய்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்டும்படி அவர்கள் தன்னிடம் கூறியதாக யெசிலியர்ட் கூறினார்.
தான் பொறுப்புடன் செயல்படவும், குப்பைகள் போடுவதைத் தவிர்க்கவுமே முயன்றதாக அவர் கூறினார்.
“இது மிகவும் நியாயமற்றதாக உணர்கிறேன். அபராதம் மிக அதிகம் என்று நினைக்கிறேன்.” என்றும் அவர் மேலும் கூறினார்.
புதன்கிழமை, கவுன்சிலில் இருந்து யெசிலியர்ட்டுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில்: “மறுஆய்வில், அபராத அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலை பிபிசி பார்த்தது.
“இதனால் உங்களுக்கு ஏற்பட்ட எந்த மனவருத்தத்திற்கோ அல்லது சிரமத்திற்கோ எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அபராத அறிவிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, யெசிலியர்ட் பிபிசி நியூஸிடம் “இந்தச் சூழலின் நிலையை கவுன்சில் அங்கீகரித்து, மறுபரிசீலனை செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று கூறினார்.
பிபிசி நியூஸ் முதன்முதலில் இந்தச் செய்தியை வெளியிட்டதில் இருந்து, இந்த விவகாரம் குறித்து எழுந்த எதிர்வினை “மிகப்பெரியது” என்றும், இந்த விவகாரம் பொது வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் கூறினார்.
“இது ஒரு கிரிமினல் குற்றம் என்று தெரிந்த ஒருவரையும் நான் சந்திக்கவில்லை,” என்றும் யெசிலியர்ட் மேலும் கூறினார்.
குப்பைத் தொட்டிகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களுக்கு அருகில் அறிவிப்புகள் மூலம் இந்தச் சட்டத்தை இன்னும் தெளிவுபடுத்த வேண்டும் என்று யெசிலியர்ட் அழைப்பு விடுத்துள்ளார்.
“நிலையிடப்பட்ட அபராத அறிவிப்புகள் (FPNs), அவற்றை எதிர்த்துப் போராட விரும்பும் எவருக்கும் ஒரு முறையீட்டு செயல்முறை கிடைக்கிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன,” என கவுன்சில் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
“இந்த வழக்கு அந்த வழியில் முன்னேறியிருந்தால், இந்த அறிவிப்பு சட்டரீதியாக ரத்து செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இது ஒரு சிறிய விதிமீறல். இந்த அபராதம் பெற்றவர் அதை மீண்டும் செய்யமாட்டேன் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.” என்று அவர் கூறினார்.