படக்குறிப்பு, கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை ஒரு கும்பல் சூறையாடியது.
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் கராச்சியில் போராட்டங்கள் நடந்தன.
பிபிசி உருதுவின்படி அங்குள்ள அமெரிக்க துணை தூதரகத்திற்கு வெளியே நடந்த வன்முறை ஆர்ப்பாட்டங்களில் 9 பேர் கொல்லப்பட்டனர்
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்களில், சிலர் துணை தூதரகத்தின் நுழைவாயிலை உடைத்து உள்ளே நுழைவதையும், வரவேற்பு மற்றும் பாதுகாப்பு அறையின் ஜன்னல்களை உடைப்பதையும் காண முடிகிறது.
இது ஆயத்துல்லா அலி காமனெயின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு வெளியே மக்கள் கூடிய ஒரு பொது ஆர்ப்பாட்டம் என்றும், தூதரகத்திற்குள் இருந்து தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் மஜ்லிஸ்-இ-வஹ்தத் முஸ்லிமீனின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
முன்னதாக, ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், எட்டு பேர் காயமடைந்ததாகவும் காவல்துறை அதிகாரி சமி சையத் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஜியாவுல் ஹசன் லஞ்சார், அமெரிக்க துணை தூதரகம் முன் நடந்த போராட்டம் குறித்து கராச்சியின் கூடுதல் ஐஜி-யிடம் விரிவான தகவல்களைக் கேட்டுள்ளார்.
சட்டத்தை யாரும் கையில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கியமான நிறுவனங்களின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு அவர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
பல பகுதிகளில் போராட்டங்கள்
ஞாயிற்றுக்கிழமை கராச்சியில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை நூற்றுக்கணக்கான இரான் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதாக ஏஎப்ஃபி செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் கூற்றுப்படி, இளைஞர்கள் கும்பல் ஒன்று துணைத் தூதரகத்தின் முக்கிய நுழைவாயிலில் ஏறி குதித்து, வளாகத்தின் உள்ளே நுழைந்து சில ஜன்னல்களை உடைத்தனர். போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.
சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், இளைஞர்கள் துணைத் தூதரகத்தின் முக்கிய கட்டடத்தின் ஜன்னல்களை உடைப்பதைக் காண முடிந்தது.
சனிக்கிழமையன்று இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் ஆயத்துல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதை, இரான் அரசுத் தொலைக்காட்சி ஞாயிற்றுக்கிழமை காலை உறுதிப்படுத்தியது.
பிபிசி உருது செய்தியின்படி, கமேனியின் மரணத்திற்குப் பிறகு பாகிஸ்தானின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கில்கிட் பால்டிஸ்தானில் வன்முறை போராட்டங்கள் நடந்துள்ளதாகவும், அதில் ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் எரிக்கப்பட்டுள்ளதாகவும் பத்திரிகையாளர் முகமது ஜுபைர் கான் பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, மக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டாம் என்றும், அமைதியான முறையில் தங்கள் போராட்டத்தை பதிவு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.