- எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
- பதவி, பிபிசி தமிழ்
-
கேரள மாநிலம் மலம்புழா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க மது ஆலைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருப்பதற்கு அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் இத்திட்டத்துக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ஆளும் இடது ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர சோசலிசக்கட்சி (ஆர்எஸ்பி) ஆகியவையும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன
மது தொழிற்சாலையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று கேரள அரசு கூறினாலும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அங்கு என்ன நடக்கிறது?
கேரளாவின் நெற்களஞ்சியம்
கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை இணையதள விவரங்களின்படி, இந்த அணை மூலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 52,755 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன.
பாலக்காடு நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம ஊராட்சிகளுக்கும் இங்கிருந்தே குடிநீர் எடுக்கப்படுகிறது.
பாலக்காடு மாவட்டம், கேரளாவின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவதற்குக் காரணம், மலம்புழா அணைதான் என்கிறார், தேசிய விவசாயி சங்கத்தின் (தேசிய கர்ஷக சமாஜம்) கேரள மாநிலத் தலைவரான முத்தலம்தோடு மணி.
ஓயாஸிஸ் என்ற நிறுவனம் அமைக்கவுள்ள மது ஆலைக்கு, இந்த மலம்புழா அணையிலிருந்து தண்ணீர் எடுக்க கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு அனுமதியளித்துள்ளது. இதனைக் கண்டித்து, தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கேரள காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா தான், இந்த பிரச்னையை முதலில் எழுப்பினார்.
மதுபான தயாரிப்பு நிறுவனத்துக்கு சாதகமாக கேரள பஞ்சாயத்து ராஜ் (தொழிற்சாலைகள், வர்த்தகங்கள், தொழில் முனைவோர் செயல்பாடுகள் மற்றும் பிற சேவைகளுக்கான உரிமம் வழங்குதல்) விதிகள் 1996-ஐ திருத்தியிருப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மழை குறைவாகவே பெய்யக் கூடிய பாலக்காடு மாவட்டத்தில் நிலத்தடி நீரை காலி செய்யவும், மாசுபடுத்தவும் அரசு முயற்சிக்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு.
இதனை கேரள கலால் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் ராஜேஷ் மறுத்தார். உள்ளாட்சி அமைப்புகளை முதலீட்டுக்கு ஏற்றதாக மாற்றவே விதிகளில் திருத்தம் செய்ததாகவும், இதற்காக ஒரு குழுவை நியமித்து ஆய்வு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், அந்த நிறுவனத்துக்கு அனுமதி தந்துள்ளதை அவர் மறுக்கவில்லை. அதற்குப் பின்பே, பாலக்காட்டில் போராட்டம் வெடித்தது.
என்ன நடக்கிறது?
மலம்புழா அணையிலிருந்து மதுபான தொழிற்சாலைக்கு தண்ணீர் வழங்குவது தொடர்பாக, கடந்த இரு மாதங்களாக, பாலக்காட்டில் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் அங்குள்ள நிலவரத்தை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
பாலக்காட்டிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள எலப்புள்ளி என்ற இடத்தில்தான், இந்த மதுபான தொழிற்சாலை வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புதிய தொழிற்சாலை அமைவதற்கான எந்த அறிவிப்புப் பலகையும் இல்லை. ஆயத்தப் பணிகளும் நடக்கவில்லை என்பது பார்க்க முடிந்தது.
எலப்புள்ளி கடைவீதிப் பகுதியைத் தாண்டி, ஊருக்கு வெளியே விவசாய நிலங்கள் சுற்றிலும் உள்ள ஒரு பகுதியில்தான் இந்தத் தொழிற்சாலை அமையவிருப்பதாகக் கூறப்படும் இடம் உள்ளது. அப்பகுதிக்கு செல்லும் சாலையின் நுழைவுவாயிலில் சிறிய பந்தல் அமைக்கப்பட்டு, பல்வேறு பேனர்களுடன் போராட்டக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Special Arrangement
பிரதான சாலையிலிருந்து 100 மீட்டர் தொலைவில், சுற்றிலும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் அந்த நிலம் உள்ளது.
அதை அடையாளப்படுத்தும் விதமாக, பல்வேறு அரசியல் கட்சிகள், மதம் மற்றும் சமூக அமைப்புகளின் கொடிகள், பேனர்கள் அந்த நிலத்தில் நடப்பட்டுள்ளன.
”ஓயாஸிஸ் நிறுவனமே கேரளாவிலிருந்து வெளியேறு, விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டும்; மது தொழிற்சாலை வேண்டாம்” என்கிற வகையில் ஆங்கிலம் மற்றும் மலையாள வாசகங்கள் கொண்ட பேனர்கள் அங்கு ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன.
தற்போது கடுமையான வெப்பம் நிலவும் சூழ்நிலையில், அந்நிலத்தில் வெடிப்புகள் தென்படுகின்றன. அதற்கு அருகிலேயே மலம்புழா அணையிலிருந்து விவசாயத்துக்கு நீர் கொண்டு செல்லப்படும் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல் விளையும் ஒரு வயல்வெளியில் சமீபத்தில் நெல் அறுவடை முடிந்து. வைக்கோல் குவிக்கப்பட்டுள்ளது. அந்த வயல்வெளியிலுள்ள ஒரு கிணற்றில், இந்த கோடையிலும் தண்ணீர் நிரம்பி இருந்ததை பார்க்க முடிந்தது.
பட மூலாதாரம், Special Arrangement
இடைவிடாமல் தொடரும் போராட்டம்
எலப்புள்ளியில் சிறிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் நிலையில், பாலக்காடு உள்ளிட்ட மலம்புழா அணையால் பயன்பெறும் மற்ற பகுதிகளில் பல்வேறு கட்சிகளால் பல விதங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. மகிளா காங்கிரஸ், முஸ்லிம் இளைஞர் லீக் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா சார்பில், காலவரையற்ற ஆர்ப்பாட்டத்தை கட்சியின் மாநிலத் தலைவர் சுரேந்திரன் தொடங்கி வைத்தார். தற்போது பஞ்சாயத்து வாரியாக அக்கட்சி பரப்புரை மேற்கொண்டு வருகிறது. திட்டத்தை நிறுத்தும் வரை போராட்டம் தொடரும் என்று கூறும் பாலக்காடு மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் பிரசாந்த் சிவன், இதற்காக சட்டரீதியான முயற்சியையும் மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவித்தார்.
இதேபோல, ஃபார்வர்டு பிளாக் கட்சியின் விவசாய அமைப்பான ஆக்ரகாமி கிசான் சபா சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடந்துள்ளது. பாலக்காடு கிறிஸ்தவ மறை மாவட்ட கூட்டமைப்பு சார்பில், இந்த தொழிற்சாலை அமைவதைத் தடுத்து நிறுத்தக் கோரி, ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்கப்பட்டுள்ளது. காந்தி தர்சன் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
பட மூலாதாரம், Special Arrangement
எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் இடதுசாரி கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புரட்சிகர சோசலிசக் கட்சி (ஆர்எஸ்பி) ஆகியவையும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எலப்புள்ளியில் ஆர்எஸ்பி போராட்டம் நடத்திய நிலையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பினாய் விஸ்வம் கூறியுள்ளார்.
பிபிசி தமிழிடம் பேசிய தேசிய விவசாயி சங்க மாநிலத் தலைவர் முத்தலம்தோடு மணி, ”பாசனத்துக்காக மட்டுமே கட்டப்பட்ட இந்த அணை நீரை நம்பி, 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதிலிருந்தே குடிநீருக்கும், ரயில்வே, ஆரிய வைத்திய தொழிற்சாலை, கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (KINFRA) ஆகியவற்றுக்கும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. பல நாட்கள் பாசனத்துக்கே தண்ணீர் இல்லை. இதில் மது தொழிற்சாலைக்கு தண்ணீர் தர வேண்டிய அவசியமென்ன?” என்று கேட்கிறார்.
இந்த அமைப்பின் போராட்டத்துக்கு நர்மதா அணை எதிர்ப்பியக்கத்தின் முக்கிய ஆர்வலராக விளங்கும் மேதா பட்கர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார்.
கேரள அமைச்சர் விளக்கம்
இதுபற்றி விளக்கமளித்த கேரள உள்ளாட்சி மற்றும் கலால் துறை அமைச்சர் ராஜேஷ், வேளாண் சார்ந்த பொருட்களை மூலப்பொருட்களாகப் பயன்படுத்தும் வகை-1 தொழிற்சாலையைத் தொடங்குவதற்கான விண்ணப்பத்தை உள்ளாட்சி அமைப்புகள் முற்றிலுமாக நிராகரிக்க முடியாது என்பதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.
மழைநீர் சேகரிப்பு மூலம் தொழில்துறை நோக்கங்களுக்காக கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கு (கின்ஃப்ரா) ஏற்கெனவே 10 மில்லியன் லிட்டர் தண்ணீர், அணையிலிருந்து விநியோகிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்டதாக தெரிவித்தார். மற்ற தொழில்களைப் போலவே ஓயாசிஸ் நிறுவனமும் அதன் பங்கைப் பெறும் என்று அவர் விளக்கம் அளித்திருந்தார்.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கி, அதிலிருந்து தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுக்கவே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், கொகோ கோலா ஆலைக்கு எதிராக நீர் சுரண்டல் என்று போராடியவர்கள், இப்போது மதுபான உற்பத்தி நிறுவனத்தை ஆதரிப்பதாக காங்கிரஸின் ரமேஷ் சென்னிதாலா குற்றம்சாட்டியிருந்தார். இதே குற்றச்சாட்டை முன்வைத்து பாஜகவும் பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
”இதே பாலக்காடு மாவட்டத்தில் முன்பு பெப்சி நிறுவனம் இருந்தபோது, நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சியதால் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குப் போனது. அப்போது வறட்சி மிகுந்த பகுதியில் இந்த தொழிற்சாலை வேண்டாமென்று போராடிய ராஜேஷ், இப்போது அதே பாலக்காட்டில் மது தொழிற்சாலைக்குத் தண்ணீர் எடுக்க அனுமதிப்பதிலிருந்தே இதில் ஊழல் நடந்திருப்பது புரிகிறது.” என்று பிபிசி தமிழிடம் பாரதிய ஜனதா கட்சியின் பாலக்காடு மாவட்டத் தலைவர் பிரசாந்த் சிவன் குற்றம்சாட்டினார்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய கேரள எதிர்க்கட்சித் தலைவர் சதீசன், ”ஓயாசிஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கும் முன், நிதி, நீர்வளம், தொழில் மற்றும் உள்ளாட்சி போன்ற துறைகளிடமிருந்து எந்த ஆலோசனையும், அனுமதியும் பெறப்படவில்லை. எதுவுமே பெறாமல் அமைச்சரவையால் முன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.” என்று குறை கூறியதுடன், அதற்கான ஆதாரமாக அமைச்சரவை குறிப்பையும் காண்பித்தார்.
கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தும், அமைச்சரவை இதற்கு அனுமதி வழங்கியதில் இருந்தே ஊழல் நடந்திருப்பது உறுதியாகியுள்ளதாக சதீசன் கூறியுள்ளார்.
இதை மறுத்துள்ள அமைச்சர் ராஜேஷ், ”கேரளாவுக்கு ஆண்டுதோறும் 9.21 கோடி லிட்டர் கூடுதல் நியூட்ரல் ஆல்கஹாலும், 30.26 கோடி லிட்டர் எத்தனாலும் பல மாநிலங்களிலிருந்து வாங்கப்படுகிறது. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்த எத்தனால் அளவு 75 கோடி லிட்டரை எட்டும். அதன் மதிப்பு ரூ.600–ரூ.1,000 கோடி வரை உயரும். அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவு இதில் சேர்க்கப்படவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
கேரளாவில் ஸ்பிரிட் உற்பத்தி செய்து மதுபானங்களை ஏற்றுமதி செய்வதும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுமே அரசின் குறிக்கோள் என்று கூறியுள்ள அமைச்சர் ராஜேஷ், இந்த தொழிற்சாலையால் கேரள அரசுக்கு 100 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் கிடைக்குமென்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
பட மூலாதாரம், Special arrangement
உள்ளூர் மக்களிடம் எழுந்துள்ள ஆதரவும் எதிர்ப்பும்
ஆனால் மதுபான ஆலைக்கு 80 MLD (ஒரு நாளுக்கு மில்லியன் லிட்டர்) தண்ணீர் தேவைப்படுவதால், அந்த திட்டம் அப்பகுதியின் நிலத்தடி நீரையும், குடிநீர் வழங்குவதையும் பாதிக்கும் என்று சதீசன் கூறியுள்ளார்.
மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் அல்லது அணை நீர் இந்த மூன்றில் ஒன்றில்தான் தண்ணீர் கிடைக்கும் என்று கூறும் பிரசாந்த் சிவன், இதில் அணை நீரை எடுக்கவே வாய்ப்பு அதிகம் என்கிறார்.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய பிரசாந்த், ”அதே பகுதியிலுள்ள அகல்யா மருத்துவமனையில் உள்ளது போன்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதாக அமைச்சர் கூறுகிறார். அந்த மருத்துவமனையில் 10 ஏக்கர் பரப்பளவில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த கட்டமைப்பில் இப்போதுதான் பலன் கிடைத்துள்ளது. இந்த நிறுவனம் 25 ஏக்கரில் 5 ஏக்கரில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைத்தால் பலனில்லை. அதனால் நிலத்தடி நீரை உறிஞ்சுவது அல்லது அணையிலிருந்து தண்ணீர் எடுப்பார்கள்.” என்றார்.
ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதற்காக, பல லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என்று கூறும் பிரசாந்த் சிவன், இதே பகுதியில் இருந்த கேரள அரசின் மலபார் டிஸ்டிலரிஸ் நிறுவனத்தையே தண்ணீர் பற்றாக்குறையால்தான் அரசு மூடியதைச் சுட்டிக்காட்டுகிறார்.
அரசியல் ரீதியான இந்த மோதல்கள் ஒரு புறமிருக்க, உள்ளூர் மக்களிடம் ஆதரவும் எதிர்ப்புமாக கருத்துகள் வெளிப்படுகின்றன.
எலப்புள்ளி அருகேயுள்ள நல்லேபிள்ளியைச் சேர்ந்த விவசாயி கோபு, ”மக்களுக்கு உணவாகும் பயிர் விளையுமிடத்தில் குடிப்பதற்கு மது தயாரிப்பதற்கு தண்ணீர் தர அரசே முயற்சி செய்வது அநியாயம். ” என்றார்.
எலப்புள்ளியைச் சேர்ந்த டெய்லர் அசோகன், ”வேலைவாய்ப்பே இல்லாத பகுதி இது. இங்கே ஒரு தொழிற்சாலை வந்தால் 2 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும். ஊரும் வளர்ச்சியடையும். ” என்றார்.
நிலத்தடி நீரை உறிஞ்சாமல், அணையிலிருந்து தண்ணீர் எடுக்காமல் தொழிற்சாலை அமைந்தால் நல்லது என்று பிபிசி தமிழிடம் கூறிய காய்கறி வியாபாரி பாலசுப்ரமணியன், அதற்கான உத்தரவாதத்தை அரசு பெற வேண்டும் என்கிறார்.
இந்த அச்சம் தேவையில்லை என்று பிபிசி தமிழிடம் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மலம்புழா தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், அணையிலிருந்தும், நிலத்தடியிலிருந்தும் தண்ணீர் எடுக்கப்படாது என்ற நிபந்தனையின்பேரில்தான் மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி தரப்பட்டுள்ளது; அதனால் ஆயிரம் பேருக்கும் மேலே வேலை கிடைக்கும் என்று உறுதியளித்தார்.
இதுபற்றி சட்டசபையில் விளக்கமளித்துள்ள அமைச்சர் ராஜேஷ், ”மலம்புழா அணையிலுள்ள 13.19 சதவிகிதம் மட்டுமே குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தொழிற்சாலையால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது. மதுபான உற்பத்தி அலகுக்கு ஒரு சொட்டு நிலத்தடி நீர் கூட எடுக்கப்படாது என்பதை உறுதி செய்த பின்பே, ஒயாசிஸ் நிறுவனத்தின் முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.” என்று கூறியுள்ளார்.
கடந்த காலங்களில் பெப்சி மற்றும் கோலா நிறுவனங்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியதைப் பற்றி அவர் கூறுகையில், அந்த போராட்டங்கள் நிலத்தடி நீரை சுரண்டுவதற்கும் நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவதற்கும் எதிரானவை என்று தெரிவித்துள்ளார்.
தமிழக–கேரள எல்லையை ஒட்டி, கேரளாவில் அமைந்துள்ள பாலக்காடு மாவட்டத்தில் மலம்புழா அணை அமைந்துள்ளது. கேரள மாநிலத்தின் ஒரு பகுதி, முன்பு சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது இந்த அணை கட்டப்பட்டது.
இதன் கட்டுமானப் பணி நிறைவு பெற்று, 1955 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதியன்று, அன்றைய மெட்ராஸ் மாகாண முதலமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான கல்வெட்டு இன்றும், அணையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பூங்காவில் துாணில் பதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு