• Tue. Sep 23rd, 2025

24×7 Live News

Apdin News

காரைக்குடியில் கழிவுநீரில் இறங்கி அதிமுக கவுன்சிலர் போராட்டம்! | AIADMK Councillor Protest Enter into Sewage at Karaikudi

Byadmin

Sep 23, 2025


காரைக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அதிமுக கவுன்சிலர் கழிவுநீருக்குள் இறங்கி போராட்டம் நடத்தினார்.

காரைக்குடி மாநகராட்சி 27-வது வார்டு காளவாய் பொட்டல் பாரதியார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதி பள்ளமாக இருப்பதால், மழைக் காலங்களில் கழிவுநீர் கலந்த தண்ணீர் தேங்குகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த வாரம் பெய்த மழையால் அப்பகுதி முழுவதும் கழிவுநீர் கலந்த தண்ணீர் தேங்கியது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பாம்பு போன்ற விஷஜந்துக்கள் வீடுகளுக்குள் நுழைகின்றன.

இது குறித்து அப்பகுதி அதிமுக கவுன்சிலர் பிரகாஷ் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிருப்தி அடைந்த அவர், நேற்று தேங்கியிருந்த கழிவுநீர் கலந்த தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நீடித்த நிலையில், அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டார். தொடர்ந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இது குறித்து கவுன்சிலர் பிரகாஷ் கூறியதாவது: தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற செப். 15-ம் தேதி மாநகராட்சி மேயர், ஆணயரிடம் மனு கொடுத்தேன். ஆனால் தண்ணீரை வெளியேற்றவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இதேபோல் எந்த மனு கொடுத்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. மேலும் பல இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவற்றை அகற்ற மறுக்கின்றனர். வரி வசூல் மட்டுமே மாநகராட்சி பணி போல் செயல்படுகின்றனர். மக்கள் பணிகளை செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



By admin