பட மூலாதாரம், olympics.com
ஆசிய இளையோர் போட்டிகளில் கபடியில் இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் ஆகிய இரு அணிகளும் தங்கம் வென்றுள்ளன. அந்த அணிகளில் தமிழகத்தை சேர்ந்த கார்த்திகா ரமேஷ் மற்றும் அபினேஷ் மோகன்தாஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், பஹ்ரைனில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் இரானை எதிர்த்து விளையாடி இந்திய அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கார்த்திகா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா ரூ.25 லட்சம் ஊக்கத்தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவர்கள் விமானத்தில் சென்னை வந்தவுடன் கோலாகலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த செய்தி வெளியானது முதலே, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை குறித்த விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற வீரர் குகேஷுக்கு ரூ.5 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியதுடன் ஒப்பிட்டு, கபடியில் சாதித்த வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை மிகவும் குறைவு என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
‘கண்ணகி நகர்’ கார்த்திகா
பட மூலாதாரம், olympics.com
கார்த்திகா, அபினேஷ் இருவருமே தத்தமது அணிகள் தங்கம் வெல்வதில் முக்கிய பங்கை ஆற்றியிருந்தாலும், கூடுதலான கவனம் கார்த்திகாவின் பக்கம் திரும்பியுள்ளது.
கார்த்திகா சென்னை கண்ணகி நகரில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு கழக குடியிருப்புகளில் வசிப்பவர். நகரின் பல்வேறு இடங்களில் குடிசை வீடுகளில் இருப்பவர்களை அப்புறப்படுத்தும் போது அரசு சார்பில் வழங்கப்படும் மாற்று குடியிருப்புகள் இவை. இந்த குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளே இல்லை என்று பல முறை புகார்கள் எழுந்துள்ளன.
விளையாட்டு மைதானமே இல்லாத நிலையில் அங்குள்ள பூங்காவிலேயே கார்த்திகா கபடி விளையாட்டை கற்றுள்ளார். அவரின் தாய் துப்புரவு ஊழியராக இருந்து தற்போது ஆட்டோ ஓட்டி வருகிறார், அவரது தந்தை கட்டுமானத் தொழிலாளி ஆவார்.
வெற்றிப்பெற்று கண்ணகி நகருக்கு திரும்பிய கார்த்திகாவுக்கு அப்பகுதியினராலும், காவல்துறை சார்பாகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
“வேலைக்கு செல்லும் போது ‘கண்ணகி நகரில்’ இருந்து வருகிறேன் என்று கூறுவதே தாழ்வாக பார்க்கப்படும். இப்போது நான் ‘கண்ணகி நகர் ஆளு’ என்று பெருமையுடன் கூறுவேன், இப்பகுதியினரும் அதில் பெருமை கொள்ள முடியும்” என்று கார்த்திகா ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருந்தார். கண்ணகி நகரில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று அமைக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர் அதை செய்து தருவதாக உறுதி அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், olympics.com
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கார்த்திகாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இவர்களை தவிர அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோரும் கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
வீடியோ அழைப்பின் (வீடியோ கால்) மூலம் கார்த்திகாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த விசிக தலைவர் திருமாவளவன், கார்த்திகா மற்றும் அபினேஷுக்கு தலா ஒரு கோடியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் .
சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவருமான வேல்முருகன், சதுரங்க ஆட்டத்தில் வென்ற குகேஷுக்கு ரூ.5 கோடி, பனிச்சறுக்கு விளையாட்டில் வென்ற ஆனந்த் குமாருக்கு 1.8 கோடி கொடுத்த பெருந்தன்மையான தமிழக அரசு கபடி வீரர்கள் இருவருக்கும் தலா ஒரு கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“குகேஷுக்கு ரூ.5 கோடி, கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சம்தானா?” என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தமிழக அரசின் செயலை ஆதரித்தும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
கார்த்திகாவைப் போலவே, தங்கம் வென்ற ஆண்கள் அணியில் இடம்பெற்ற அபினேஷ் மோகன்தாசும் எளிமையான குடும்ப பின்னணியை கொண்டவர் தான். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், தந்தையை இழந்தவர். தேனியில் உள்ள தமிழ்நாடு அரசு விளையாட்டு ஆணைய விடுதியில் தங்கி பயின்றவர் ஆவார்.
பட மூலாதாரம், TNDIPR
ஊக்கத்தொகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?
கார்த்திகாவுக்கும் அபினேஷுக்கும் வழங்கப்பட்ட தலா ரூ.25 லட்சம் இரண்டு அலகுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது தமிழ்நாடு அரசின் உயரிய ரொக்க ஊக்கத்தொகையாக (High Cash Incentive) ரூ.15 லட்சமும், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக ரூ.10 லட்சமும் என ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
உயரிய ரொக்க ஊக்கத்தொகை அரசு வெளியிட்டுள்ள ஆணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும். அது தவிர, இருவரின் விளையாட்டை பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு தாமாக முன் வந்து கூடுதலாக ரூ.10 லட்சத்தை தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் சார்பாக வழங்க முடிவு செய்துள்ளது.
எந்த விளையாட்டுக்கு எவ்வளவு ஊக்கத்தொகை?
தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை வெளியிட்ட 2019-ம் ஆண்டு அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு 2 கோடி, வெள்ளி வெல்பவருக்கு 1 கோடி, வெண்கலம் வெல்பவருக்கு 50 லட்சம் உயரிய ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அந்த அரசாணையின் படி, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் தங்கம் வெல்பவருக்கு 50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு 30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு 20 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இளைஞர் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.25 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதே போன்று, ஆசிய இளைஞர் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ரூ.15 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.10 லட்சம், மற்றும் வெண்கலம் வெல்பவருக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வெல்பவருக்கு ஒரு கோடி, வெள்ளி வெல்பவருக்கு ரூ.60 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.40 லட்சம் வழங்கப்படும்.
அதுவே இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியாக இருந்தால், அதில் தங்கம் வெல்பவருக்கு ரூ.75 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.50 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்பவருக்கு ரூ. 50 லட்சம், வெள்ளி வெல்பவருக்கு ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்பவருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும்.
இவை தவிர பல்வேறு போட்டிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை குறித்த விவரங்களை அரசாணை குறிப்பிடுகிறது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் விளக்கம்
இது வரை வீரர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள் மேற்குறிப்பிட்ட அரசாணைக்கு உட்பட்டே வழங்கப்பட்டது என்று பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை நிர்வாக அலுவலர் /உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ் கூறினாறார்.
‘குகேஷுக்கு ரூ.5 கோடி, கார்த்திகாவுக்கு ரூ.25 லட்சமா?’ என்று குறிப்பிட்டு எழுந்துள்ள விமர்சனம் குறித்து கேட்ட போது, “இரண்டு விளையாட்டுகளை, இரண்டு போட்டிகளை ஒப்பிடுவதே தவறு. ஆசிய போட்டிகளும் உலக சாம்பியன்ஷிப் போட்டியும் வெவ்வேறானவை. ஐந்து ஆறு நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் 20க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டியையும் ஒப்பிடக் கூடாது.
கார்த்திகாவின் திறமையை, பங்களிப்பை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடவில்லை. அவரது வெற்றியின் காரணமாக தமிழ்நாடு பெருமை கொள்கிறது, அதே போன்று தான் அபினேஷின் வெற்றியும். அவர் அரசு விடுதியில் பயின்றவர். அரசாணைப்படி அவர்களுக்கு ரூ.15 லட்சம் தான் ஊக்கத்தொகை. ஆனால் அவர்களின் அபாரமான விளையாட்டை அங்கீகரிக்கும் வகையிலேயே கூடுதலாக பத்து லட்சம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதே போன்று தான் குகேஷுக்கும். தமிழ்நாட்டில் ஊக்கத்தொகை வழங்க மிக நேர்த்தியான நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பீடுகள் சரியல்ல” என்று கூறினார்.
பட மூலாதாரம், கவிதா செல்வராஜ்
கபடி அணி பயிற்சியாளர் கூறியது என்ன?
இந்திய கபடி அணியின் தற்போதைய பயிற்சியாளரும் கபடியில் சர்வதேச அளவில் நான்கு முறை தங்கப் பதக்கங்களை வென்றவருமான தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிதா செல்வராஜ் (40), “இப்போது ஊடக கவனம் அதிகம் இருப்பதால் இந்த வெற்றிகள் வெளியில் தெரிகின்றன. அதன் மூலம் ஒரு வெளிச்சம் கிடைப்பது மகிழ்ச்சி. கபடிக்கு, அதுவும் ஆசிய இளைஞர் போட்டிக்கு ரூ.25 லட்சம் கொடுத்திருப்பது குறைவானது அல்ல. நான் 2010-ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. 2008-ம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது. 2009 தெற்கு ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற போது ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது” என்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து இந்திய கபடி அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் அவர், “2005-ம் ஆண்டு விளையாட்டு கோட்டாவில் அல்லாமல் எனது சொந்த முயற்சி மற்றும் தகுதியில் காவல்துறையில் சேர்ந்தேன். காவல்துறையில் இருக்கும் போது தான் நான்கு சர்வதேச பதக்கங்களை வென்றேன். ஆனால் எனக்கு எந்த பதவி உயர்வும் வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டேன்” என்கிறார்.
மேலும் பேசிய அவர், “உடல் ரீதியாக அதிக உழைப்பு தேவைப்படும் விளையாட்டுகளை ஊக்குவிக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு