தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வட மாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இத்தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துணைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத்தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா கலந்துகொள்கிறார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் இக்கண்காட்சி இம்மாதம் 23ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் முன்னிரவு 7 மணி வரை நடைபெறவுள்ளது.
கண்காட்சியைப் பார்வையிட வருகைதரும் மாணவர்களுக்கு வழமை போன்று இம்முறையும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post கார்த்திகை வாசம் – கிட்டு பூங்காவில் வெள்ளிக்கிழமை ஆரம்பம் | தொல். திருமாவளவன் பங்கேற்பு appeared first on Vanakkam London.