தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் நேற்று நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று காலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்க கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனழை பெய்யக்கூடும்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.
பட மூலாதாரம், IMD website
படக்குறிப்பு, மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கையை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம். (மஞ்சள் – மிதமான மழை, ஆரஞ்சு – மிக கனமழை)
மேலும் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும்.
கடலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும்.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.