• Mon. Nov 25th, 2024

24×7 Live News

Apdin News

காற்றழுத்த தாழ்வு மண்டலம்: தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம் | Low pressure area: storm warning pole raised at 9 ports in Tamil Nadu

Byadmin

Nov 25, 2024


சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (திங்கள்கிழமை) காலை 8.30 மணியளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.25) காலை 8.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம், இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.” எனத் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், டெல்டா மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்குத் தேவையான நிவாரண முகாம்களை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



By admin