படக்குறிப்பு, வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து)
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கரையை ஒட்டி தென்மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து அதே பகுதியில் காலை 11.30 மணியளவில் நிலை கொண்டிருந்தது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா அருகே, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை எங்கு மழை பெய்யும்?
தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில் நாளை 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் அதி கனமழை பெய்துள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை என்ன?
வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் புதுவையில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மிக கனமழை எங்கே?
தமிழகத்தில் இன்று விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு அதிகன மழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 20 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர் ,பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதியிலும் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் வேலூர், திருப்பத்தூர், திருச்சி, சேலம், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
படக்குறிப்பு, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்துப் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா, “அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 23ஆம் தேதி, தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 27 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்.” என்று கூறினார்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார்.
மழை எச்சரிக்கை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (22.10.2025) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்
விழுப்புரம்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவாரூர்
தஞ்சாவூர்
கள்ளக்குறிச்சி
மயிலாடுதுறை
திருவள்ளூர்
சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூரில் 17 செ.மீ மழை பதிவு
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி முதல் இன்று காலை 5.30 மணி வரையிலான மழை நிலவரபடி, அதிகபட்சமாக கடலூரில் 17.4 செ.மீ மழை பதிவாகியிருந்தது. அடுத்ததாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் 8.6 செ.மீ, ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டியில் 6.5 செ.மீ, பாம்பனில் 6.3 செ.மீ மழையும் பதிவாகியிருந்தது.
மேலும் சென்னை மீனம்பாக்கத்தில் 5.2 செ.மீ, நாகப்பட்டினத்தில் 4.2 செ.மீ மழை பதிவாகியது.
நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி, மதுரையில் 4.1 செ.மீ, கடலூர் பரங்கிப்பேட்டையில் 3 செ.மீ, தஞ்சாவூரில் 2.8 செ.மீ மழை பதிவாகியிருந்தது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நேற்று மழை பொழிவு குறைவாகவே இருந்தது. நீலகிரி, ஈரோடு, கோவையில் ஒரு செ.மீக்கு குறைவான மழையே பதிவானது.