சென்னை: காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பாமக சட்டப்பேரவை கட்சித் தலைவர் ஜி.கே.மணி, தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்கவும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் க.பொன்முடி பதில் அளித்து பேசியதாவது: தமிழகத்தின் பசுமைப் பரப்பை 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்தும் நோக்கத்துடன் 2021-ம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த இயக்கம் சுற்றுச்சூழலை பாதுகாத்தல், புவி வெப்பமாதலை கட்டுப்படுத்துதல், பசுமை போர்வையை அதிகரித்தல் மூலம் காலநிலை மாற்றத்தின் வீரியத்தை குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த இயக்கத்தின்கீழ் 10 ஆண்டுகளில் 265 கோடி மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. 3 ஆண்டுகளில் மொத்தம் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் மொத்தம் 310 நாற்றங்காலில் 33.23 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களை கொண்டு மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், ரூ.25 கோடியில் 100 மரகத பூஞ்சோலைகள் (கிராமமரப் பூங்காக்கள்) அமைக்கப்படும் என 2021-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதுவரை 83 மரகத பூஞ்சோலை பணிகள் முடிவடைந்துள்ளன. 17 இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தின் கடற்கரைப் பகுதிகளில் புயல் மற்றும் சூறாவளி போன்றவற்றிலிருந்து பாதுகாக்க உயிர் அரண் ஏற்படுத்துவதன் மூலம் கடலோர வாழ்விடம் மேம்படுத்தும் திட்டம் ரூ.25 கோடியில் அறிவிக்கப்பட்டு 2023-24 முதல் வரும் 2026-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற பெருநகரங்களில் சுற்றுப்புறங்களில் உள்ள வனங்கள் நகர்மயத்தால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன இவற்றை மீட்டெடுக்க ஆதிவனம் மேம்பாட்டு திட்டம் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.