பட மூலாதாரம், Getty Images
கடந்த சில ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தின் தாக்கமும் அதன் விளைவுகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தெற்காசியா முழுவதும் நிகழ்ந்து வரும் காலநிலை பேரிடர்கள், புறக்கணிக்க முடியாத ஒரு கேள்வியை முன்வைத்துள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகள் அனைத்துமே காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களுக்குக் கூட எளிதில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடந்த 29வது காலநிலை உச்சிமாநாட்டில், காலநிலை செயல்முறையில் பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான ஐ.நா திட்டத்தை (Lima work programme on gender) மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேவேளையில், காலநிலை மாற்றத் தணிப்பு நடவடிக்கைகளைப் பொருத்தவரை, இந்த நாடுகளில் பாலின சமத்துவமின்மை ஒரு முக்கிய சவாலாக இருப்பதாக கடந்த டிசம்பர் 20ஆம் தேதி பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் இதழில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரை குறிப்பிடுகிறது.
அந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரும் ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் நிறுவனத்தைச் சேர்ந்த காலநிலை விஞ்ஞானியுமான முனைவர் அஞ்சல் பிரகாஷ் பிபிசி தமிழிடம் பேசிய போது, “இந்திய சமூகத்தில் இருக்கும் ஆணாதிக்க விதிமுறைகள், பெண்களிடமே பெரும்பாலும் வீட்டுப் பணிகளையும் பொறுப்புகளையும் ஒப்படைத்து விடுகின்றன. அதுவே, காலநிலை பேரிடர்களின் போதும் பெண்கள் மீது அதீத சுமையும் அழுத்தமும் விழுவதற்குக் காரணமாக அமைகிறது” என்று கூறுகிறார்.
காலநிலை மாற்றம் ஆணை விட பெண்ணுக்கு இரட்டைச் சுமையை ஏற்படுத்துவது ஏன்? காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, பாலின ஏற்றத் தாழ்வுகள் காரணமாக பெண்கள் அனுபவிக்கும் அழுத்தங்கள் என்ன? அவற்றை நிவர்த்தி செய்வது எப்படி? தற்போதைய சூழலில் இதன் மீது கவனம் செலுத்த வேண்டியது ஏன் அவசியம்?
காலநிலை நெருக்கடியில் பாலின சமத்துவமின்மை
கடந்த டிசம்பர் மாதம், அசர்பைஜானில் நடைபெற்ற காலநிலை உச்சிமாநாட்டிலும், இந்தத் தவிர்க்க முடியாத கேள்வி குறித்து விவாதிக்கப்பட்டது.
அதைச் சமாளிக்கும் நோக்குடன் ஐ.நா.வின் காலநிலை செயல்முறையில், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டத்தைக் கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு நீடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில், நேச்சர் ஆய்விதழில் வெளியான ஓர் ஆய்வு, 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஏழை நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில், வெள்ள பாதிப்புகள் காரணமாக 107,888 பெண்கள் கருக்கலைப்புக்கு ஆளானதாகக் கூறுகிறது. இதில், 75% கருக்கலைப்புகள் சப்-சஹாரா பிராந்தியம் (சஹாராவுக்கு தெற்கே உள்ள ஆப்ரிக்க நாடுகள்) மற்றும் தெற்காசியாவில் பதிவாகியுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்தியாவில் 2015 முதல் 2021-க்குள் கருவிலேயே குழந்தை உயிரிழக்கும் விகிதம் 28.6% அதிகரித்ததாகக் கூறியது.
பட மூலாதாரம், Getty Images
யுனிசெஃப் அறிக்கைப்படி 2050ஆம் ஆண்டுக்குள் காலநிலை பேரிடர்களால் 15.8 கோடி பெண்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள். 23.6 கோடி பெண்கள் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வார்கள்.
கடந்த 2023ஆம் ஆண்டு ஐபிசிசி அறிக்கைப்படி, வறட்சி, திடீர் வெள்ளம் போன்ற பாதிப்புகளால், அதிக உயிரிழப்புகளைச் சந்திப்பது, ஊட்டச்சத்துக் குறைபாடுகளை எதிர்கொள்வது, வாழ்வாதாரங்களை இழப்பது ஆகிய அபாயங்களை பெண்கள் அதிகம் எதிர்கொள்கின்றனர்.
சென்னை ஒவ்வொரு வெள்ளத்தை எதிர்கொள்ளும் போதும், கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவ உதவிகளைப் பெறுவதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். அத்தகைய சூழலில், இதுபோன்ற கருக்கலைப்பு அபாயங்கள் அதிகரிப்பதாகவும், அதன் விளைவாக ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகளைப் பெண்கள் அனுபவிக்க வேண்டியிருப்பதாகவும் கூறுகிறார் ‘டாக்டர்ஸ் ஃபார் ஏர் பொலியூஷன்’ அமைப்பைச் சேர்ந்த விஷ்வஜா சம்பத்.
இதுமட்டுமின்றி, இந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அங்கீகரிக்கப்படாத உழைப்பு, துரிதமடையும் காலநிலை தாக்கங்களின் காரணமாக 60% அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதாவது, உணவுப் பாதுகாப்பு, குழந்தைகள் பராமரிப்பு, குடும்பங்களை நிர்வகித்தல் போன்ற பல்வேறு பொறுப்புகள், கலாசார மற்றும் சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாகப் பெண்களின் மீதே சுமத்தப்படுவதாகக் கூறுகிறார் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இனிஷியேட்டிவ் அமைப்பின் காலநிலை மாற்றம் மற்றும் காற்றுத் தரம் துறையின் இயக்குநர் சுருச்சி பத்வால்.
பட மூலாதாரம், Subagunam Kannan/BBC
உதாரணமாக, சூழலியல் ரீதியாக அதிக பாதிப்புக்கு உள்ளாகும் எண்ணூரில், குழந்தைகள் அதிகமான சுவாசக் கோளாறுகளை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக, தங்கள் மன அழுத்தம் அதிகரிப்பதாகவும், பணியைப் புறக்கணிக்கும் சூழல் ஏற்படுவதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய தாய்மார்கள் தெரிவித்தனர்.
அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுருச்சி பத்வால், “கல்வி, வேலை போன்ற வாய்ப்புகள் கிடைத்தாலும்கூட, அவற்றோடு சேர்த்து குடும்பப் பொறுப்புகளையும் நிர்வகிக்க வேண்டிய சுமை பெண்கள் மீதே விழுகிறது. உணவு, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்வது முதல் குழந்தைகளோடு சேர்த்து கூட்டுக் குடும்பங்களில் இருக்கும் முதியவர்களையும் பராமரிக்கும் பணி பெண்களுடையதாகவே இந்திய சமூகத்தில் இன்னமும் கருதப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், கனமழை, வெள்ளம், வெப்ப அலை அல்லது வறட்சிப் பேரிடர்களின் போது நோய்த்தொற்றுகள் பரவினால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது, அடிப்படைத் தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் போது நிவர்த்தி செய்ய முயல்வது போன்ற சுமைகள் பெண்கள் மீதே பெரும்பாலும் விழுகிறது. இந்தப் பிரச்னைகளைக் கடந்து வேறு எதையும் சிந்திக்க முடியாத சுழலில் சிக்குவதால், பெண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்,” என்கிறார் அவர்.
இத்தகைய சவால்களை பெண்கள் எதிர்கொள்ள முக்கியக் காரணம், பேரிடர் நிவாரணக் குழுகளில், ஆண்களே பெருமளவு இருப்பதுதான் என்கிறார் விஷ்வஜா சம்பத். அதன் விளைவாக, பேரிடர்களின்போது பெண்களின் தேவைகள் முழுதாகப் பூர்த்தி செய்யப்படுவதில்லை எனவும் அவர் கூறுகிறார்.
“பெண்களின் குரல்களை எதிரொலிக்கும் பிரதிநிதிகள் போதுமான அளவுக்கு ஒரு குழுவில் இல்லாமல் போவதன் விளைவு இது. இத்தகைய சாதாரண பிரிதிநிதித்துவம்கூட, பெண்களின் குரல்களை ஒலிக்கச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றன.”
“இந்தப் பணிகள் அவர்களை நீர்ப் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை போன்ற காலநிலை தாக்கங்களுக்கு ஆளாக்குகின்றன. கல்வி மற்றும் நிதி ஆதாரங்களை அணுகுவது விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு சவாலாக இருப்பதால், காலநிலை சவால்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டு திறம்படச் செயலாற்றும் திறனைப் பெறுவதிலும் தடைகள் நீடிக்கின்றன,” என்கிறார் முனைவர் அஞ்சல் பிரகாஷ்.
‘பொருளாதார சுதந்திரம் கிடைத்தாலும் நிலைமை மாறவில்லை’
பட மூலாதாரம், Subagunam Kannan/BBC
சமூக அறிவியல் ஆராய்ச்சி நெட்வொர்க் என்ற ஆய்விதழில் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியான ஆய்வுக் கட்டுரை, கல்வி, வேலை போன்ற பிரிவுகளில் பெண்கள் முன்னேறுவது உலகளாவிய நெருக்கடியாக கருதப்படும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதில் பெரும் பங்காற்றுவதாகக் கூறுகிறது.
ஆனால், அந்த முன்னேற்றத்தை அடைந்த பிறகு, பெண்கள் அதோடு குடும்பத்தையும் சேர்த்து இரட்டை சுமையைச் சுமக்க வேண்டியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
“ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில், நிலத்தடி நீர் பெருமளவு குறைந்துவிட்டதால் பெண்கள் 5 முதல் 10 கிலோமீட்டர் வரை தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய பயணிக்க வேண்டியுள்ளது” என்கிறார் விஷ்வஜா சம்பத்.
“இதற்காக அந்தப் பெண்கள் செலுத்தும் உடல் உழைப்பும், நேரமும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கிறது. அதோடு அவர்களின் வேலை நேரமும் இதனால் குறைகிறது. ஒவ்வொரு வறட்சிக் காலத்திலும், தண்ணீர்ப் பற்றாக்குறையை சமூகங்கள் எதிர்கொள்ளும்போது, அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் பணிகளில் பெண்களே மையப்படுத்தப்படுகின்றனர்,” என்று விவரிக்கிறார் அவர்.
கடந்த 2023 டிசம்பர் மாதம் வடசென்னை, கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், எண்ணூரில் தொழிற்சாலைகளால் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு என மக்கள் இரண்டு பேரிடர்களை ஒருசேர எதிர்கொண்டனர்.
அந்தப் பேரிடரின்போது உடுத்த மாற்றுத்துணிகூட இல்லாமல் சிரமப்பட்ட வள்ளிப் பாட்டி, தனது கணவர், மகன் உள்பட குடும்பத்தாரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்போடு, தனது சிறிய தேநீர்க் கடையால் ஏற்பட்ட இழப்புகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
“என் இடுப்பளவுக்கு எண்ணெய் கலந்த வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது. ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்துமே வீணாகிவிட்டன. என் மகனுக்கும் உடல்நிலை குன்றிவிட்டது. இந்த நிலையில், என் கணவரின் லுங்கியை அணிந்துகொண்டு வீட்டுப் பொருட்களைப் பாதுகாப்பது, மகனைப் பார்த்துக்கொள்வது என்று அனைத்தையுமே கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். இதற்கிடையில், நான் நடத்தி வந்த சிறு தேநீர்க் கடையும் முற்றிலுமாக வீணாக அதற்கென ரூ.30,000 கடன்பட்டு சீரமைத்தேன்,” என்று தான் எதிர்கொண்ட சவாலை விவரித்தார்.
அவரைப் பொருத்தவரை, பெண்கள் எவ்வளவுதான் பொருளாதார முன்னேற்றம் கண்டாலும், குடும்பத்திற்குள் செய்யப்படும் வேலைகளும் பெண்கள் மீதே விழுவது இயல்பாகிவிட்டது. இவையிரண்டையும் பல ஆண்டுகளாக ஒருசேரச் செய்து வருவதால், அவை பழகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்று முன்னேறினாலும்கூட, வேலை, வீடு என இரண்டையுமே கவனித்தாக வேண்டுமென்ற கட்டாயத்தை இந்திய குடும்பக் கட்டமைப்பு வலியுறுத்துவதாகக் கூறுகிறார் முனைவர் அஞ்சல் பிரகாஷ். இதன் விளைவாக, காலநிலை நெருக்கடிகளின்போது அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தமும் ஒப்பீட்டளவில் ஆண்களைவிட அதிகமாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார் அவர்.
அதிகரிக்கும் குழந்தைத் திருமணம், மனித கடத்தல்
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் காலநிலை நெருக்கடி, பெண்களுக்கு குடும்பரீதியான சுமைகளை அதிகரிப்பதோடு, அவர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகிறது என்கிறார் சுது சுந்தர்பான் சார்ச்சா இதழின் ஆசிரியர் ஜோதிந்த்ர நாராயண் லாஹிரி.
இந்தியா, வங்கதேசம் இடையே அமைந்திருக்கும் சுந்தரவனப் பகுதியில், மேற்கு வங்கத்தில் வாழும் கடலோர சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் காலநிலை நெருக்கடியின் அதீத அபாயங்களை எதிர்கொள்வதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஜோதிந்த்ர நாராயண் லாஹிரி.
கடந்த 15 ஆண்டுகளாக, வங்காள மொழியில் சுது சுந்தர்பான் சார்ச்சா என்ற சிற்றிதழை நடத்தி வரும் அவர், தனது இதழில் சுந்தரவனப் பகுதி மக்களின் வாழ்வியல், சமூக-சூழலியல் சிக்கல்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வருகிறார்.
காலநிலை நெருக்கடியால், சுந்தரவனப் பகுதியில் புயல் பாதிப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து விட்டதாகக் கூறும் அவர், இதனால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக, கடல்மட்ட உயர்வு, வெப்பநிலை அதிகரிப்பு ஆகியவற்றின் விளைவுகள் சுந்தரவனத்தில் தெளிவாகத் தெரிவதாகக் கூறும் அவர், “இவற்றால், சுந்தரவனத் தீவுகளில், உவர்நீர் புகுந்துவிடுவதால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. குடிநீர் பற்றாக்குறை கடுமையாக உள்ளது. தீவுகளுக்குள் இருந்த நன்னீர் குளங்கள் உப்பாகிவிடுவதால், பாரம்பரிய மீன் வளர்ப்புத் தொழில் பாதிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தார்.
பட மூலாதாரம், Archisman Narayan Lahiri
மேலும், கடந்த 15 ஆண்டுகளில் சுந்தரவனப் பகுதியைச் சேர்ந்த 70% ஆண்கள் தொழில் தேடி வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால், நெருக்கடிக் காலங்களில் பெண்களே அனைத்தையும் கவனிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டில் ‘ஐலா’ என்ற பேரழிவுகரமான புயல் சுந்தரவனத்தைத் தாக்கியதில் இருந்து இந்த இடப்பெயர்வு கணிசமாக அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் ஜோதிந்த்ர நாராயண்.
“இதன் விளைவாகத் தங்கள் வீடுகளை நிர்வகிப்பது, குழந்தைகளைப் பராமரிப்பது, மீன் பிடிப்பது, விற்பது போன்ற பிற பணிகள் என அனைத்தும் பெண்களின் கைகளிலேயே விடப்படுகின்றன.
இதனால், புயல்களின் போது, கால்நடைகள், குழந்தைகளை வெள்ள முகாம்களுக்குக் கொண்டு செல்வதில் இருந்து, விவசாயம், படகுகளில் சிற்றோடைகளில் மீன் பிடிப்பது என அனைத்து சவால்களையும் கையாள்வதில் பெண்களே முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.” என்கிறார் அவர்.
பெண்கள் காலநிலை நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன்?
பட மூலாதாரம், Subagunam Kannan/BBC
காலநிலை பாதிப்புகள் இருபாலருக்கும் சமமாக இருப்பதில்லை எனவும் அதன் விளைவுகளை ஆண்களைவிட பெண்களே அதிகம் அனுபவிப்பதாகவும் கூறும் தி எனர்ஜி அண்ட் ரிசோர்சஸ் இனிஷியேட்டிவ் நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் முனைவர் மினி கோவிந்தன், சமூகக் கட்டமைப்பில் இருக்கும் பாலின சமத்துவமின்மையே அதற்கு அடிப்படைக் காரணம் எனவும் குறிப்பிடுகிறார்.
“கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களின் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள், காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகள் மற்றும் அதுதொடர்பான வளங்களை அணுகும் விகிதம் குறைவாகவே இருக்கிறது.
அதோடு, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தின் சுந்தரவனப் பகுதி போன்ற இயற்கைப் பேரிடர்கள் அதிகம் நிகழும் கடலோர மாநிலங்களில், ஆண்களே வேலை தேடி அதிகமாக இடம் பெயர்கின்றனர். இந்தச் சூழலில், குடும்பத்தின் முழு பொறுப்பும், குறிப்பாக பேரிடர்க் காலங்களில், பெண்கள் மீதே விழுகிறது. இது அவர்களுக்கு அதீத மன அழுத்தத்தையும், அவர்களின் ஆரோக்கியத்தைப் புறக்கணித்து குடும்பத்தினரை முன்னிலைப்படுத்தும் சூழலையும் ஏற்படுத்துகிறது,” என்று கூறுகிறார் மினி கோவிந்தன்.
அதேவேளையில், காலநிலை மாற்ற விளைவுகளால், நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் குடும்பங்களில் ஏற்படும் மனோவியல் தாக்கங்கள் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை என்கிறார் மினி கோவிந்தன்.
அவரது கூற்றுப்படி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில், ஒவ்வொரு முறை வெள்ளம் ஏற்படு ம்போதும் மேற்கூறிய அனைத்து சவால்களையும் பெண்கள் ஒருசேர எதிர்கொள்வதால் மனப் பதற்றம், அழுத்தம் ஆகிய பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், ஆரோக்கியக் குறைபாடுகள் பேசப்படும் அளவுக்கு இவை பேசப்படுவதில்லை என்கிறார்.
பட மூலாதாரம், Subagunam Kannan/BBC
இவை அனைத்துக்குமே காரணம், கலாசார, சமூக கட்டுப்பாடுகள் பெண்கள் மீது அதிகமாகச் சுமத்தப்படுவதே எனக் கூறும் மினி கோவிந்தன், “ஒரு பெண் காய்கறி அல்லது மீன் விற்பவராக, வீட்டு வேலை செய்பவராக, அலுவலகப் பணி செய்பவராக என எந்தப் பணியில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், தம் குடும்பத்தில் உள்ள குழந்தைக்கோ, முதியவருக்கோ உடல்நலம் குன்றிவிட்டால், அந்தப் பெண்தான் விடுப்பு எடுத்துக்கொண்டு அவர்களைக் கவனிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார், சில நேரங்களில் நிர்பந்திக்கவும் படுகிறார்.
இத்தகைய சூழ்நிலையில், பேரிடர்க் காலங்களில் ஓர் ஆணின் சம்பளத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் இயல்பாகவே பெண்களின் சம்பாத்தியத்திற்குக் கிடைப்பது இல்லை. ஆகையால், ஆண் வேலைக்குச் செல்ல வேண்டும் எனவும், பெண் வீட்டில் இருந்து வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்வது, குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஆகியவற்றைக் கவனிக்க வேண்டுமென்றும் அழுத்தம் தரப்படுகிறது,” என்று விவரித்தார்.
பெண்கள் எதிர்கொள்ளும் இத்தகைய சவால்களைச் சமாளிக்க, இந்தியாவுக்கு பன்முகத்தன்மை மிக்க அணுகுமுறை தேவை என்பதை வலியுறுத்துகிறார் காலநிலை விஞ்ஞானி முனைவர் அஞ்சல் பிரகாஷ்.
“உள்ளூர் அளவிலிருந்து, சமூக அடிப்படையிலான திட்டங்களை வகுக்க வேண்டும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், அவர்களின் தகவமைப்புத் திறன்களை மேம்படுத்த வேண்டும்.
பாலினக் கண்ணோட்டங்களை காலநிலை உத்திகளில் புகுத்துவது, முடிவெடுக்கும் செயல்முறைகளில் பெண்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றில் கொள்கை அளவிலான தீர்வுகளைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்கிறார் அவர்.
அதோடு, “வேலை, குடும்பம் என இரட்டைச் சுமையைச் சுமக்கும் பெண்கள், காலநிலை மாற்ற தணிப்பு முயற்சிகளில் ஈடுபடுவதற்கான திறன்களை மேம்படுத்துவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதை நிவர்த்தி செய்ய, பாலின சமத்துவம் மிக்க குடும்ப ஆதரவு அமைப்புகளை உருவாக்குவதும் ஊக்குவிப்பதும் அவசியம். பெண்களின் வேலை-வாழ்க்கை சமநிலையை ஊக்குவிக்கும் கொள்கைகளை வடிவமைப்பது, காலநிலை மாற்ற தணிப்பு நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபட வைப்பதற்கு உதவும்,” என்றும் அஞ்சல் பிரகாஷ் குறிப்பிட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு