காணொளி: இலங்கையில் ஒரு மாபெரும் நகரத்தையே உள்ளடக்கிய பிரம்மாண்ட கோட்டை
இலங்கையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகக் கட்டப்பட்ட காலி கோட்டை, இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னும் பார்வையாளர்களை வசீகரிக்கிறது. அப்படி இந்தக் கோட்டைக்குள் என்னதான் இருக்கிறது? ஒரு நகரத்தையே உள்ளடக்கியிருக்கும் இந்தக் கோட்டை எதற்காகக் கட்டப்பட்டது?
இலங்கையின் தென்மேற்கு முனையில் அமைந்திருக்கிறது காலி நகரம். பல நூற்றாண்டுகளாகவே ஒரு முக்கியமான துறைமுகமாகச் செயல்பட்டுவந்த நகரம் இது. அதாவது, மொராக்கோவின் புகழ்பெற்ற பயணியான இபின் பதூதா, 1344-ஆம் ஆண்டு காலி நகருக்கு வந்து சேர்ந்த போதே, இலங்கையின் மிக முக்கியமான துறைமுகங்களில் ஒன்றாக இருந்ததாக யுனெஸ்கோ இணையப்பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வரலாறு கூறுகிறது.
ஒரு காலகட்டத்தில் இலங்கையின் முக்கியமான வர்த்தக மையமாகவும் இருந்த காலி நகரம், பின்னாளில் கொழும்பு நகரிடம் அந்த அந்தஸ்தை இழந்துவிட்டாலும் தற்போதும் இலங்கையில் உள்ள அழகிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இப்போது காலி நகரின் மிக முக்கியமான ஈர்ப்பு, அங்குள்ள கோட்டைதான்.
காலி கோட்டையின் கதை
16ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், 1505-ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் துறைமுகத்தில் வந்து நின்ற போர்ச்சுக்கீசிய கப்பல் ஒன்றிலிருந்து இறங்கினார் ராணுவத் தளபதியான லாரென்சோ தெ அல்மெய்தா. அது ஒரு திட்டமிட்ட வருகையல்ல, கடலில் அந்தத் தருணத்தில் வீசிய புயலால், அங்கு வந்து சேர்ந்தார் என்றும் சில பதிவுகள் உண்டு.
அப்போது அந்தப் பகுதி கோட்டே ராஜ்ஜியமாக அறியப்பட்டது. அந்த நாட்டின் அப்போதைய மன்னராக இருந்தவர் ஒன்பதாம் பராக்கிரமபாஹு. லாரன்ஸோ விரைவிலேயே மன்னருக்கு நெருக்கமானார். காலி துறைமுகத்தின் முக்கியத்துவம் போர்ச்சுக்கீசியர்களுக்கு புரிய ஆரம்பித்திருந்தது.
இதனால், மன்னரிடம் அனுமதி பெற்று, 1541-ஆம் ஆண்டு வாக்கில் காலி பகுதியில் ஒரு கோட்டையையும் தேவாலயம் ஒன்றையும் கட்ட ஆரம்பித்தனர் போர்ச்சுகீசியர்கள். 1543-ஆம் ஆண்டு வாக்கில் கோட்டைக்குள்ளேயே ஃபிரான்சிஸ்கன் தேவாலயம் ஒன்றும் கட்டப்பட்டது. அந்தக் கோட்டை அப்போது மண்ணாலும் கட்டைகளாலும்தான் உருவாக்கப்பட்டிருந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, கொழும்பு நகரத்திலிருந்து செயல்படுவது சிறப்பாக இருக்குமென போர்ச்சுக்கீசியர்கள் அங்கு நகர்ந்தனர். ஆனால், கொழும்பின் மீது சீதாவாக்கையை ஆண்ட மன்னனான ராஜசிங்கன், தாக்குதல் நடத்திவந்ததால் மீண்டும் காலி நகரத்திற்கே நகர்ந்தனர் போர்ச்சுக்கீசியர்கள்.
கோட்டைக்குள் மிகப்பெரிய நகரம்
19ஆம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டிஷார் கொழும்பு நகருக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து, நாட்டின் தலைநகராக மாற்ற ஆரம்பித்தனர். இதனால், விரைவிலேயே காலி கோட்டையின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.
“ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிகச் சிறந்த கோட்டை நகரங்களில் காலியே சிறந்த உதாரணமாக இருக்கிறது” என யுனெஸ்கோ குறிப்பிடுகிறது. இந்தக் காரணம் உள்ளிட்ட மேலும் பல காரணங்களால், இந்தக் கோட்டை தற்போது யுனெஸ்கோ மரபுரிமைச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
கோட்டை கட்டப்பட்ட காலத்தில், கோட்டைக்குள்தான் பிரதானமான நகரம் அமைந்திருந்தது. தற்போதும் கோட்டைக்குள் பள்ளி, கல்லூரி, நீதிமன்றம், கடை வீதிகள், நிர்வாக அலுவலகங்கள் இருக்கின்றன. ஆனால், கோட்டைக்கு வெளியிலும் மிகப் பெரிய நகரம் இருக்கிறது.
மேலும் இந்தக் கோட்டைக்குள் என்ன இருக்கிறது? அதன் முழு வரலாறு ஆகியவற்றை இந்தக் காணொளியில் முழுமையாக காணலாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு