பட மூலாதாரம், Getty Images
சிலர் காலையில் குளிக்க விரும்புகிறார்கள், சிலர் மாலையில் அல்லது இரவில் குளிக்க விரும்புகிறார்கள். யார் சரியாக செய்கிறார்கள்?
இந்த உலகில், ஒரு சிறிய கேள்வி கூட பெரிய விவாதத்தை உருவாக்குகிறது, நீங்கள் காலையில் எழுந்தவுடன் குளிப்பவரா? அல்லது இரவில் படுக்க செல்வதற்கு முன் குளிப்பவரா? அல்லது தினமும் குளிக்காத 34% அமெரிக்கர்களில் ஒருவரா?
நீங்கள் எந்தப் பக்கம் இருந்தாலும், உங்கள் தேர்வு உங்கள் உடல்நலத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நீங்கள் யோசிக்கலாம்.
காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும், முதலில் பலரும் செய்யும் வேலை குளிப்பது தான். காலை வேளையில் குளிப்பவர்கள், சூடான நீரில் சில நிமிடம் நிற்பதால் புத்துணர்ச்சி கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று சொல்கிறார்கள்.
மாறாக, இரவில் குளிப்பவர்கள், நாள் முழுவதும் சேர்ந்த தூசி, வியர்வை எல்லாவற்றையும் கழுவி விட்டு தூங்குவதால் சுத்தமாகவும், அமைதியாகவும் தூங்க முடியும் என்று நம்புகிறார்கள்.
அறிவியல் என்ன சொல்கிறது?
எது நமக்கு உண்மையில் அதிக நன்மை தருகிறது? என்பது குறித்துத் தெரிந்து கொள்வோம்.
குளிப்பது நம் தோலில் உள்ள அழுக்கு, வியர்வை, எண்ணெயை நீக்குகிறது. நாள் முழுவதும் தூசி, மாசு, மகரந்தம் போன்றவை உடலில் தேங்குகின்றன. இரவில் குளிக்காமல் படுக்கச் சென்றால், இந்த அழுக்குகள் உங்கள் படுக்கை விரிப்பிலும் தலையணை உறையிலும் படிந்துவிடும்.
பட மூலாதாரம், Getty Images
இது மட்டும் இல்லை.
நம் தோலில் ஏராளமான நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. தோலின் ஒரு சதுர சென்டிமீட்டரை நெருக்கமாகப் பார்த்தால், அங்கே 10,000 முதல் ஒரு மில்லியன் வரை பாக்டீரியாக்கள் இருப்பதை காணலாம். அவை நம் வியர்வைச் சுரப்பிகளில் இருந்து வரும் எண்ணெயை உணவாக எடுத்துக்கொள்கின்றன.
வியர்வைக்கு தனிப்பட்ட மணம் இல்லையென்றாலும், பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யும் கந்தக சேர்மங்கள்தான் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
அதனால், படுக்கைக்கு முன் குளிப்பது தான் ஆரோக்கியமான தேர்வாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் போல, உண்மை கொஞ்சம் சிக்கலானது.
“இரவில் குளித்தால் நீங்கள் சுத்தமாக படுக்கைக்குச் செல்வீர்கள், ஆனால் இரவில் உங்களுக்கு வியர்க்காமல் இருக்காது” என்கிறார் லீசெஸ்டர் பல்கலைக்கழக நுண்ணுயிரியலாளர் பிரிம்ரோஸ் ஃப்ரீஸ்டோன்.
குளிர்காலத்தில் ஒரு நபர் படுக்கையில் கால் லிட்டர் அளவு வியர்வை வெளியிடுவார் மற்றும் 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தோல் செல்களை வெளியேற்றுவார். இது தூசிப் பூச்சிகளுக்கு (dust mites) ஒரு முழு விருந்து போன்றது என்கிறார் ஃப்ரீஸ்டோன்.
தொடர்ந்து பேசிய அவர், “நீங்கள் படுக்கையில் வியர்வையால் ஒரு சிறிய சூழலை உருவாக்குவீர்கள். அதில் தோலில் உள்ள பாக்டீரியாக்கள் உணவை பெற்றுக்கொண்டு, சிறிது உடல் நாற்றத்தை (BO) உருவாக்கும். எனவே, இரவில் குளித்தாலும், காலையில் எழும்போது சற்று நாற்றம் இருக்கும்,” என்கிறார்.
இரவில் குளிப்பதின் நன்மைகள் கிடைக்க, உங்கள் படுக்கை விரிப்பு, போர்வை, தலையணை ஆகியவற்றை முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பாக்டீரியாக்கள் இவற்றில் வாரக்கணக்கில் உயிர் வாழக்கூடும். ஈரமான பகுதிகளில், குறிப்பாக தலையணைகளில், தூசிப் பூச்சிகளும் பூஞ்சைகளும் அதிகமாக சேரக்கூடும்.
முழுமையாகச் செயல்படும் நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் இதை சமாளித்துவிடுவார்கள். ஆனால் கடுமையான ஆஸ்துமா கொண்டவர்களில் 76% பேருக்கு குறைந்தது ஒரு வகை பூஞ்சைக்கு ஒவ்வாமை இருக்கும். A. fumigatus என்ற பூஞ்சைக்கு உட்பட்டால், காசநோய் அல்லது புகைபிடிப்பால் பாதிக்கப்பட்ட நுரையீரல் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் உருவாகும் அபாயம் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
“மாலையில் குளிப்பதை விட, படுக்கை விரிப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்வதே முக்கியம்,” என்கிறார் பிரிட்டனின் ஹல் பல்கலைக் கழகத்தில் காயம் குணப்படுத்துதல் மற்றும் நுண்ணுயிரியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஹாலி வில்கின்சன்.
“ஏனென்றால், நீங்கள் குளித்து சுத்தமாக படுக்கைக்கு சென்றாலும், அந்த விரிப்புகளை ஒரு மாதம் துவைக்காமல் விட்டால், அதில் பாக்டீரியா, அழுக்கு, தூசிப் பூச்சிகள் எல்லாம் குவிந்து விடும்.”
இது ஒரு சிக்கல், ஏனெனில் தூசிப் பூச்சி கழிவுகளுக்கு நீண்ட காலம் உட்பட்டால், ஒவ்வாமை ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும்.
நீங்கள் ஏற்கனவே மகரந்தம் போன்றவற்றுக்கு ஒவ்வாமை கொண்டவராக இருந்தால், படுக்கை விரிப்பை துவைக்காமல் இருப்பது உங்கள் அறிகுறிகளை இன்னும் மோசமாக்கும். அழுக்கான விரிப்புகளில் தொடர்ந்து படுத்தால், தோல் தொற்றுகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆனால் இதற்கான விஞ்ஞான ஆதாரங்கள் இன்னும் தெளிவாக இல்லை.
தூக்கத்தின் நன்மைகள்
இரவு நேரத்தில் குளிப்பது தூக்கத்திற்கு உதவுகிறது என்று சிலர் வலியுறுத்துகிறார்கள், இதற்கு விஞ்ஞான ஆதாரங்களும் உள்ளன.
உதாரணமாக, 13 ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்த்த ஒரு மெட்டா-ஆய்வு, படுக்கைக்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன்பு 10 நிமிடங்கள் சூடான நீரில் குளிப்பது, தூங்குவதற்கு எடுக்கும் நேரத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று கண்டறிந்தது.
இதற்கான காரணம், முதலில் உடல் வெப்பநிலையை உயர்த்தி பின்னர் அதை மீண்டும் குறைப்பது, நம் உடலுக்குத் “இப்போது தூக்கத்திற்கு தயாராகுங்கள்” என்ற சர்க்கேடியன் (உடலின் உயிரியல் கடிகாரம்) சிக்னல் அனுப்புகிறது என்பதாக இருக்கலாம்.
ஆனால் இதை முழுமையாக உறுதிப்படுத்த இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை.
அப்படியென்றால், காலை குளிப்பது நல்லதா? மாலை குளிப்பது நல்லதா? எது சிறந்தது என்ற கேள்விக்கு விடை என்ன?
ஃப்ரீஸ்டோன், காலையில் குளிப்பதையே விரும்புகிறார். இரவில் படுக்கையில் இருந்த போது தேங்கிய வியர்வையும் நுண்ணுயிரிகளையும் துடைத்துவிட்டு, புத்துணர்ச்சியுடனும் சுத்தமாகவும் நாளைத் தொடங்க முடியும் என்பது தான் அதற்கான காரணம்.
ஆனால் உண்மையில், நீங்கள் காலையில் குளித்தாலும், மாலையில் குளித்தாலும், உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசம் ஒன்றும் இருக்காது. இது முழுக்க முழுக்க, நீங்கள் பகலில் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க விரும்புகிறீர்களா அல்லது இரவில் தூங்கச் செல்லும் முன் சுத்தமாக இருக்க விரும்புகிறீர்களா என்பதில்தான் இருக்கிறது.
“நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை தான் குளிக்கிறீர்கள் என்றால், அதை எந்த நேரத்தில் செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல,” என்கிறார் வில்கின்சன்.
உண்மையில், முக்கியப் பகுதிகளை தினமும் கழுவினால், வாரத்திற்கு இரண்டு முறை குளிப்பதே ஆரோக்கியத்துக்கும் சுகாதாரத்துக்கும் போதுமானது.
“நீங்கள் செய்யும் வேலையையும் பொறுத்தே இது இருக்கும். உதாரணமாக, நீங்கள் விவசாயி என்றால், நாள் முழுவதும் வேலை முடித்து வீடு திரும்பியபோது குளிக்க விரும்புவீர்கள். ஆனால், மொத்தமாகப் பார்த்தால், சுத்தமான படுக்கையை பராமரிப்பதுதான் மிக முக்கியமானது,” என்கிறார் வில்கின்சன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு