• Sat. Sep 13th, 2025

24×7 Live News

Apdin News

காலை உணவில் முருங்கைக்கீரை!

Byadmin

Sep 13, 2025


காலை உணவில் எப்போதும் இட்லி, தோசை மாதிரியான சாப்பாடுகளை சாப்பிட்டு சலித்துவிட்டீர்களா? சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் ஆரோக்கியமாகவும் இருக்கும் ஒரு டிபன் ரெசிபி தேடுகிறீர்களா?

அப்படியானால் உங்கள் வீட்டில் இருக்கும் கம்பு மாவும் முருங்கைக்கீரையும் கொண்டு செய்யக்கூடிய இந்த சுவையான “கம்பு முருங்கைக்கீரை தோசை”யை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.

தேவையான பொருட்கள்

தோசைக்கு

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1/4 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 1 கொத்து (பொடியாக நறுக்கியது)

துருவிய தேங்காய் – 1/2 கப்

வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்

தண்ணீர் – 2 1/2 கப்

வறுத்த கம்பு மாவு – 2 கப்

முருங்கைக்கீரை – 3/4 கப் (நறுக்கியது)

எண்ணெய் – சுட்டதில் ஊற்றுவதற்கு தேவையான அளவு

சட்னிக்கு

துருவிய தேங்காய் – 1 கப்

வரமிளகாய் – 3

பூண்டு – 1 பல்

பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – சிறிதளவு

தாளிக்க

எண்ணெய் – 1 டீஸ்பூன்

கடுகு – 1/4 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 1 கொத்து

வரமிளகாய் – 1

செய்வது எப்படி?

தோசை தயாரித்தல்

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

நறுக்கிய வெங்காயம், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி, பின்னர் தேங்காய், நறுக்கிய வேர்க்கடலை சேர்த்து கிளறவும்.

2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

நீர் கொதித்தவுடன் கம்பு மாவை சேர்த்து கட்டிகளின்றி தொடர்ந்து கிளறவும். 5 நிமிடம் சமைத்து இறக்கி ஆறவிடவும்.

கைகளை பொறுக்கும் அளவிற்கு குளிர்ந்ததும் முருங்கைக்கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறிய பந்துகளாக எடுத்து, எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது பட்டர் பேப்பரில் அடை போன்று தட்டவும்.

சூடான தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, தட்டிய அடையை முன்னும் பின்னும் வெந்து வரப்போட்டு எடுத்துக்கொள்ளவும்.

சட்னி தயாரித்தல்

மிக்சியில் தேங்காய், வரமிளகாய், பூண்டு, பொட்டுக்கடலை, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.

இவ்வாறு தயாரிக்கும் கம்பு முருங்கைக்கீரை அடையை தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், சுவையும் சத்தும் அள்ளும்!
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் — கண்டிப்பாக குடும்பம் முழுவதும் ரசிப்பார்கள்!

The post காலை உணவில் முருங்கைக்கீரை! appeared first on Vanakkam London.

By admin