கால்சியம் ஸ்கோரிங் என்பது இதய நலனை குறிக்கும் ஒரு பரிசோதனையாகும். இது நடுத்தர வயதினரில் அறிகுறிகள் இல்லாமல் இதய பாதிப்பு கொண்டவர்களை எளிதாக கண்டறிய உதவக் கூடும். பொதுவாக தனியார் மருத்துவமனைகளிலேயே செய்யப்பட்டு வந்த இந்த சோதனை தற்போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் செய்யப்பட்டு வருகிறது.
உடலில் கருவி எதுவும் செலுத்தாமல், சுமார் 15 நிமிடங்களுக்குள் செய்யப்படும் இந்த சோதனை, எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள உதவுகிறது.
கால்சியம் மதிப்பீடு சோதனை என்றால் என்ன?
கால்சியம் மதிப்பீடு சோதனை என்பது சி.டி (CT – Computed Tomography) ஸ்கேன் பரிசோதனை ஆகும். இது ஒருவரின் இதய தமனிகளில் எவ்வளவு கால்சியம் உள்ளது என்பதை மதிப்பிடுகிறது. இதய தமனிகள் இதயத் தசைக்கு ரத்த ஓட்டத்தை வழங்குபவை.
பட மூலாதாரம், Getty Images
தமனிகளில் கால்சியம் சேர்ந்தால் என்னவாகும்?
இதய தமனிகளில் உள்ள கால்சியத்தின் அளவு ஒருவரின் இதயத்தில் பிளேக் (plaque) உருவாகியிருக்கிறதா என்பதை சொல்ல முடியும். பிளேக் என்பது தமனிகளில் கொழுப்பு, கால்சியம் சேர்வதால் ஏற்படும் படிமம் ஆகும். இது நாளடைவில் தமனிகளை சுருக்கவோ அல்லது அவற்றில் அடைப்பு ஏற்படுத்தவோ கூடும். அதாவது இதய தமனி நோய் (coronary artery disease) ஏற்படலாம். இது மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
சோதனையின் நோக்கம் என்ன?
இந்த சோதனையின் நோக்கம் ஒருவருக்கு எதிர்காலத்தில் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதா என்பதை கண்டறிவதே ஆகும் என்கிறார் இருதயவியல் மருத்துவர் ரெஃபாய் ஷவுகத் அலி.
“பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தாலோ, குடும்பத்தில் வேறு யாருக்காவது இதய நோய்கள் இருந்தாலோ அவர்கள் தங்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதா என்பதை கண்டறிந்துகொள்ளலாம். இந்த சோதனை அவர்களுக்கான எச்சரிக்கை மணியாக இருக்கும். நடுத்தர வயதில் ஒருவர் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, பெற்றோருக்கு இதய நோய் ஏற்பட்டிருந்தால், அவர்கள் கண்டிப்பாக இந்த சோதனையை செய்துக் கொள்ளலாம். இதன் மூலம் எதிர்காலத்தில் அவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளதா என்பதை தெரிந்துக் கொள்ளலாம்” என்கிறார் அவர்.
வழக்கமான அறிகுறிகள் இல்லாதவர்களில் இதய நோய் ஆபத்தை கண்டறிய இந்த சோதனை உதவும். “சிலருக்கு நெஞ்சு வலி, மூச்சிரைப்பு போன்ற இதய நோய்க்கான வழக்கமான அறிகுறிகள் இருக்காது. அவ்வப்போது லேசான வலி ஏற்படுகிறது என்று சிலர் கூறுவார்கள். அவர்களுக்கு வேறு எந்த அறிகுறிகளும் இருக்காது. சில நேரம் குடும்பத்தில் வேறு யாராவது இளம் வயதில் இதய நோய்க்கு ஆளாகியிருப்பார்கள். அப்படியானவர்களும் இந்த சோதனையை செய்து கொள்ளலாம்” என்று மருத்துவர் ரெஃபாய் ஷவுகத் அலி கூறுகிறார்.
படக்குறிப்பு, மருத்துவர் ரெஃபாய் ஷவுகத் அலி
கால்சியம் மதிப்பீடு சோதனை எந்த வயதினருக்கு அதிகம் தேவை?
கால்சியம் மதிப்பீடு சோதனை இதய நோய்க்கான ஆபத்து உள்ளவர்களுக்கு உதவும்.
“பொதுவாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கால்சியம் மதிப்பீடு சோதனை முடிவுகள் உதவக்கூடும். இதய நோய்க்கான அறிகுறிகள் இல்லை, ஆனால் இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளவராக இருந்தால், இந்த சோதனை உதவக்கூடும்” என்று ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைவர் மருத்துவர் செசிலி மேரி மஜிலா கூறுகிறார்.
அதிக ஆபத்தில் உள்ளவர்கள் யார்?
குடும்பத்தில் யாருக்கேனும் இதய நோய் இருப்பது
தற்போது அல்லது கடந்த காலத்தில் புகையிலை பயன்பாடு
அதிக கொழுப்பு, நீரிழிவு அல்லது உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள்
அதிக எடை (பிஎம்ஐ, 25 க்கும் அதிகம்) அல்லது உடல் பருமன் (30 க்கும் அதிகமான பிஎம்ஐ) கொண்டவர்கள்
மந்தமான வாழ்க்கை முறை கொண்டவர்கள்
கால்சியம் மதிப்பீடு சோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?
கால்சியம் மதிப்பீடு சோதனையின் போது, சி.டி ஸ்கேன் இயந்திரம் கொண்டு இதயம் ஸ்கேன் செய்யப்படுகிறது. கால்சிஃபிகேஷன்(கால்சியம் படிமங்கள்) கொண்ட இதய தமனியின் பகுதிகள் ஸ்கேனில் தெரியவரும்.
இந்த சி.டி ஸ்கேன் செய்ய சுமார் 10 அல்லது 15 நிமிடங்கள் ஆகலாம். இந்த சோதனையின் போது உடலுக்குள் எந்த கருவியும் செலுத்தப்படாது.
பட மூலாதாரம், Getty Images
கால்சியம் ஸ்கோரிங் எவ்வளவு இருக்க வேண்டும்?
கால்சியம் அளவு 100 என்கிற அளவுக்கு குறைவாக இருந்தால் அது ஆபத்தில்லை என்று மருத்துவர் ரெஃபாய் ஷவுகத் அலி கூறுகிறார்.
“40க்கும் குறைவாக இருந்தால் மிகவும் நல்லது. 100க்கு குறைவாக இருந்தாலும் பெரிய ஆபத்து இல்லை என்று தான் அர்த்தம். 200 முதல் 300 என்கிற அளவில் கால்சியம் இருந்தால், அவர்களுக்கு சி டி ஆஞ்சியோ போன்ற அடுத்தக்கட்ட பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும். அதுவே 400க்கும் அதிகமாக இருந்தால், அது அதிக ஆபத்தை குறிக்கும்.” என்கிறார் அவர்.
இந்த சோதனையில் எவற்றை கண்டறிய முடியாது?
இந்த சோதனையில் இதயத்தில் சாஃப்ட் பிளேக் (soft plaque) எனும் மெல்லிய (கொழுப்பு, கால்சியம்) படிமங்கள் இருந்தால் அதை கண்டறிய முடியாது. சாஃப்ட் பிளேக் இருப்பவர்களுக்கும் மாரடைப்பு அல்லது இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு.
“இளைஞர்களில் சாஃப்ட் பிளேக் இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்கு இந்த சோதனையை செய்கையில், கால்சியம் அளவு 0 என்று வந்தால் கூட ஆபத்து இல்லை என்று அர்த்தம் இல்லை” என்று மருத்துவர் செசிலி மேரி மஜிலா கூறுகிறார்.
படக்குறிப்பு, மருத்துவர் செசிலி மேரி மஜிலா
‘அறிகுறிகளே இல்லாதவர்களுக்கு இதய நோயை கண்டறிய உதவும்’
அறிகுறிகளே இல்லாதவர்களுக்கு இந்த பரிசோதனை உதவியாக இருக்கும் என்கிறார் மருத்துவர் ரெஃபாய் ஷவுகத் அலி.
“தினமும் நடப்பவர்களுக்கு திடீரென மூச்சு வாங்கினால் அவர்களுக்கு அது எச்சரிக்கை மணியாக இருக்கும். மந்தமான வாழ்க்கை முறையை உடையவர்களுக்கு இதய நோய்க்கான அறிகுறிகள் இருக்க வாய்ப்பில்லை. நடக்காமல், உடற்பயிற்சி செய்யாமல் அலுவலகத்துக்குச் சென்று ஏசி அறையில் அமர்ந்து, சாப்பிட்டு, தூங்கி எழுபவர்களுக்கு அறிகுறிகள் தெரியாது. அப்படியானவர்களுக்கு கால்சியம் மதிப்பீடு சோதனை மிகவும் உதவியாக இருக்கும். அறிகுறிகளே இல்லாமல் கால்சியம் அளவு 400 என்கிற அளவுக்கு மேல் கொண்டிருக்கும் நபர்களை பார்க்கிறோம். அவர்களுக்கு அடுத்த கட்ட பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுகின்றன” என்று மருத்துவர் ரெஃபாய் ஷவுகத் அலி கூறுகிறார்.
யாருக்கு இந்த பரிசோதனை உதவாது?
வயதானவர்கள் குறிப்பாக 60 அல்லது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த பரிசோதனை உதவாது. ஏனென்றால் “அவர்களுக்கு கால்சிஃபிகேஷன் (ரத்த நாளங்களில் சேரும் படிமங்கள்) வயது காரணமாக அதிகமாக தான் இருக்கும்.” என்கிறார் மருத்துவர் ரெஃபாய் ஷவுகத் அலி.
அறிகுறிகள் இருப்பவர்களுக்கு இந்த சோதனை அவசியம் இல்லை என்கிறார் மருத்துவர் செசிலி மேரி மஜிலா.
“அறிகுறிகள் இருப்பவர்களுக்கு நேரடியாக அவர்களுக்கான ஆஞ்சியோ போன்ற சோதனைகள் செய்ய வேண்டும். கால்சியம் மதிப்பீடு சோதனை எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே. ஏற்கெனவே அறிகுறிகள் இருப்பவர்களுக்கு, அவர்களுக்கு தேவையான அடுத்தக்கட்ட பரிசோதனை அல்லது சிகிச்சை செய்ய வேண்டும்” என்றார்.
இந்த சோதனை 10 முதல் 15 நிமிடங்களில் செய்து முடிக்கக் கூடியது. கால்சியம் மதிப்பீடு சோதனைக்கு தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை செலவாகும்.
தமிழ்நாட்டில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ரூ.500 கட்டணத்தில் இந்த சோதனை செய்யப்படுகிறது.