• Sat. Oct 25th, 2025

24×7 Live News

Apdin News

காவிரி உபரிநீர் மூலம் புதிய நீரேற்று திட்டம் – மேட்டூர் அருகே அமைச்சர் முத்துசாமி ஆய்வு | New irrigation project using Cauvery surplus water Minister inspects

Byadmin

Oct 25, 2025


மேட்டூர்: ஈரோடு மாவட்டம் பவானி, அந்தியூர் வட்டங்கள், சேலம் மாவட்டம் கொளத்தூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு உபரி நீர் நிரப்பும் திட்டம் குறித்து மேட்டூரை அடுத்த சின்ன மேட்டூர், செட்டிப்பட்டி பரிசல்துறை ஆகிய பகுதிகளில் வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “காவிரி ஆற்றின் உபரி நீரை மேட்டூர் அணையின் வலது கரை நீர் தேக்கப்பகுதியிலிருந்து, கொளத்தூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள வறண்ட குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர் உந்துதல் மூலம் குழாய் வழியாக நீரேற்றம் செய்யும் திட்டம் குறித்து முதல்கட்ட ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 24 கிராமங்களில் உள்ள 31 நீர்நிலைகளுக்கு நீர் வழங்கும் நோக்கத்துடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான மொத்த நீர்த் தேவை தோராயமாக 550.206 மில்லியன் கன அடியாக கணக்கிடப்பட்டுள்ளது. திட்டத்துக்கு தேவையான நீரின் அளவு 250 கனஅடி/வினாடி அளவு. காவிரி ஆற்றின் உபரி நீரை கொளத்தூர் அருகே மேட்டூர் அணையின் வலது கரை நீர் தேக்கப்பகுதியிலிருந்து 26 நாட்கள் நீரேற்றம் செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படும்.

இந்த உபரி நீரானது 60 கிமீ நீள பிரதான குழாய்கள் வழியாகவும், 250 கிமீ நீள கிளை குழாய்கள் வழியாகவும், அழுத்தக் குழாய்கள் மற்றும் பகுதி புவியீர்ப்புச் செயல்முறையின் மூலம் அந்தியூர், பவானி, மேட்டூர் தாலுகாக்களில் உள்ள குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் சுமார் 3,931.56 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 14,051 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பயன்பெறும். இத்திட்டத்தின் மூலம் நிலத்தடிநீர் செறிவூட்டப்பட்டு மக்களின் குடிநீர்த் தேவைகள் பூர்த்தி பெறும். இத்திட்டத்துக்கான விரிவான திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக, நில அளவையும் மற்றும் மட்டப்படுத்துதலும் பணிகளுக்கான நிதியை அரசிடமிருந்து பெறுவதற்காக மதிப்பீடு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் உபரி நீர் மட்டும்தான் எடுக்கப்படும். வேறு எந்த விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் தான் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் நிலத்துக்கு நிபந்தனை பட்டா கொடுக்கப்பட்டுள்ளதால், அதில் பல சிக்கல் ஏற்படுகிறது. முதல்வரிடம் தெரிவித்து அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைக்கு மேல் பகுதியில் தான் உபநீர் திட்டங்களை செயல்படுத்த முடியும். பாலமலையில் முதல்கட்டமாக ரூ.10 கோடியில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது” என்று அவர் கூறினார்.

ஆய்வின் போது, ஆட்சியர்கள் பிருந்தா தேவி (சேலம்), கந்தசாமி (ஈரோடு), மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், ஈரோடு எம்.பி. பிரகாஷ், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம் (அந்தியூர்), சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), சதாசிவம் (மேட்டூர்), நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



By admin